Thursday, June 14, 2007

சிறிலங்காவை அனைத்துலக நாடுகள் கை விடக்கூடும்: ரொய்ட்டர்ஸ்.

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பில் அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு விபரம்:

இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.

இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை தமது பணிகளை மேற்கொள்ள முடியாது தடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. சிறிலங்காவிற்கு அனைத்துலகத்தின் உதவிகள் தேவை. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் அதனை தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமை மீறல்களை காரணம் கூறி இந்த ஆண்டு சிறிலங்காவிற்கான சில உதவிகளை நிறுத்தியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மீளக்குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உணவு உதவிகளை உலக உணவுத்திட்டம் நிபந்தனையாக போட்டுள்ளது. இருந்த போதும் பல தாக்குதல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹிம் ஹாவெல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடாது என்பதனையே நாம் எல்லோரும் விரும்புகின்றோம். எனினும் நாம் அதனை நோக்கி தள்ளப்படுகின்றோம். இதனை தடுப்பதற்கோ இல்லது மாற்றுவதற்கோ எந்த வழியும் இல்லை.

கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களை கொழும்பில் இருந்து அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் மீண்டும் பின்பற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்குவதற்கு தகுந்த காரணங்களை கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்தி கடந்த வாரம் கொழும்பில் உள்ள 400 தமிழ் மக்களை அரசு வேறு பகுதிக்கு பலவந்தமாக அனுப்பியிருந்தது. எனினும் உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு அதிகாரிகளை தமது முடிவுகளை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளியிருந்தது.

நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த அறிக்கைகள் போலியாவை எனவும் அது அரசுக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அதனுடன் படையினருக்கு உள்ள தொடர்பையும் அவர் மறுத்துள்ளார்.

பயங்கரவாதத்தை கையாள்வது தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களில் இருந்து அரசு அதன் எல்லையை முற்று முழுதாக தாண்டியுள்ளதாக தேசிய சமாதான சபையைச் சேர்ந்த ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்தில் இருந்தும், உள்நாட்டிலும் அரசு சுயமாகவே தனிமைப்பட்டுள்ளது. எனினும் அனைத்துலக சமூகம் தம்மை வற்புறுத்துவதாக அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

மனித உரிமை மீறல் தொடர்பில் மேற்குலக நாடுகள் இரட்டைப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கு தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது சிறந்த நடவடிக்கை எனவும் அரச தலைவரின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச, பிபிசி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் பலப்படுத்தப்டப்ட தனது அலுவலகத்தில் இருந்தவாறு நேர்காணல் வழங்கும் போது தெரிவித்துள்ளார்.

இது அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமானதும், வன்புறுத்தலுமான நடவடிக்கையாகும். பிரச்சனையை விளங்கிக்கொள்ளாது அவர்கள் எங்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர். நாம் தனிமைப்பட மாட்டோம். எமக்கு ஆதரவாக சார்க் அமைப்பில் உள்ள ஆசிய நாடுகள் உள்ளன.

பிரித்தானியா, மேற்குலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தாம் விரும்பியதனை செய்யட்டும் நாம் அவர்களில் தங்கியிருக்கவில்லை. தூதரக அதிகாரிகள் தமது அரசுகளை தவறாக வழி நடத்துகின்றனர்.

அனைத்துலக ஊடகங்களும் பிரச்சினைக்கு ஒரு காரணம். அவர்கள் அரசுக்கு எதிரான செய்திகளை கொடுக்கிறார்கள். நாம் எங்களை தற்காத்துக் கொள்வோம். நீங்கள் நாட்டை ஆபத்தில் தள்ள முடியாது. ஹிம் ஹாவெல் முற்றிலும் தவறான தகவல்களை கொண்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்த வாரம் அரசுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தரும் விடயம் நிகழந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான அரசின் விசாரணைகள் அனைத்துலக தரத்தில் நடைபெறவில்லை என அரச தலைவரினால் நியமிக்கப்பட்ட அனைத்துலக நிபுணர் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வருடத்தில் மட்டும் நடைபெற்ற வன்முறைகளில் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இதில் கடும் போக்கான அரசியல் கட்சிகள், பௌத்த மதகுருமார் போன்றவர்களும் அடக்கம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சிறிலங்காவை கைவிட வேண்டிய நிலையும் ஏற்படலாம் என தனது பெயரைக்குறிப்பிடாத கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தெரிவிக்கப்படும் பல முரணான கருத்துக்களினால் நாட்டின் வெளிவிவகார கொள்கையில் முற்றிலும் தெளிவற்ற தன்மையை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒருவருக்கு ஒருவர் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். உள்ளுரில் ஒரு செய்தியும் அனைத்துலகத்திற்கு பிறிதொரு செய்தியும் தெரிவித்து வருவது ஆபத்தானது. அதுவே அவர்களை தனிமைப்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: