Thursday, June 21, 2007

எம்.கே. நாராயணன் விரைவில் நீக்கம்?

எம்.கே.நாராயணனை உடனே மாற்ற வேண்டும்: திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம்

சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை உடனே அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வின் முக்கிய கூட்டுக் கட்சியாகத் திராவிடர் கழகம் இருப்பதால் எம்.கே.நாராயணன் விரைவில் மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்பபடுகிறது.


சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் நிலை நாளும் வேதனைக்கும், சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியை இணைக்கும் ஒரு முக்கிய வழி வெகுநாட்களாக மூடப்பட்டுக் கிடப்பதால் அத்தியாவசியப் பொருட்களைத் தமிழர்கள் பெறுவதில்கூட பெரும் இடர்ப்பாடு திட்டமிட்ட வகையில் இழைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அரச தலைவர் ஆனதிலிருந்தே நிலைமைகள் மிகவும் மோசமான நிலையை நோக்கி வேகமாகத் தள்ளப்பட்டு வருகின்றன.

ஜெயவர்த்தன - ராஜீவ் ஒப்பந்தத்தில் ஒப்புகொள்ளப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு, சமஷ்டி ஆட்சிமுறை அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர்களை முற்றாக ஒழிப்பதற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து போர் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது சிங்கள அரசு.

மேலும் போதாதற்கு இந்தியாவும் தன் பங்குக்கு சிறிலங்காவுக்கு ஆயுதங்களை தந்து உதவுகிறது. கேட்டால் தற்காப்பு ஆயுதங்களைத் தான் வழங்குவதாகக் கூறுகிறார்கள்.

ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிப்பதற்காகவே செயற்படும் ஓர் அரசுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்குவதே கூட ஒரு வகையில் அந்நாட்டு அரசுக்கு உதவி புரிவதாகவே கருதப்பட வேண்டும்.

ராடார் போன்ற கருவிகளை இந்தியா வழங்குவது சிறிலங்காவின் தமிழினப் படுகொலைக்கு ஆக்கம் தருவதல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்?

சிறிலங்காவின் வான் படைக்குப் பஞ்சாபிலும், கடற்படைக்கு கோவாவிலும் வைத்துப் பயிற்சி அளிக்கப்பட்ட செய்திகள் வெளிவந்தன.

இவையெல்லாம் சிறிலங்கா அரசின் தற்காப்புக்காகவா அல்லது தமிழர்களைப் பூண்டோடு அழிக்கவா என்பதைக் கடுகளவு சிந்திப்பவர்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கக்கூடிய எம்.கே.நாராயணன் என்பவர் இந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அவருடைய நடவடிக்கைகள் இல்லை என்பதையும் இப்பொதுக் குழு சுட்டிக்காட்டுகிறது.

அண்மையில் கொழும்பு நகரத்திலிருந்து ஈழத் தமிழர்கள் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டதற்கு இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமைக்கு இப் பொதுக்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்துடன் ஏதோ ஒரு நிகழ்வுக்காக கண்டனம் தெரிவித்ததோடு நின்று விடாமல், தமிழர்களின் மனித உரிமைகளை ஒடுக்குவதில் முழு மூச்சாக ஈடுபடும் பேரினவாத சிங்கள அரசு தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்து, அதற்கான செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் நேரிடையாகத் தலையிட வேண்டும் என்று இந்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

சிறிலங்கா அரசின் இனவெறிப் போக்கை ஐக்கிய நாடுகள் சபையே கண்டிக்கும் நிலையில், இந்தியாவுக்குக் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளதை இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்.கே. நாராயணன் விரைவில் நீக்கம்?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் விரைவில் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசாங்கம் ஆதரவாக செயற்படுவதாகக் கூறி 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தவர் எம்.கே.நாராயணன்.

இந்திய உளவுத்துறை இயக்குநராக பதவி வகித்த பின்னர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ஜே.என்.டிக்சிட் மறைவைத் தொடர்ந்து நாராயணனை நியமிக்க மன்மோகன்சிங் முடிவு செய்திருந்தார். ஆனால் அதனை தி.மு.க. தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் தயாநிதி மாறனின் உதவியுடன் கருணாநிதியை சமாதானப்படுத்தி அப்பதவியை எம்.கே.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர், ஈழப் பிரச்சினை தொடர்பாக எம்.கே.நாராயணன் சென்னையில் கருணாநிதியைச் சந்தித்த போதும் "அன்று ராஜீவ் காந்தியை சிக்கலில் மாட்டிவிட்டது நீங்கள்தான். இப்போது யாரை மாட்டிவிடப் போகிறீர்கள்?" என்று கடுப்படித்தார்.

சென்னையில் கருணாநிதி மகள் கனிமொழி "சங்கமம்" நிகழ்ச்சி நடத்தியதனை விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தி ஜெயா தொலைக்காட்சியில் விமர்சனம் செய்ய வைத்ததிலும் எம்.கே.நாராயணனின் பங்கு விமர்சனமாக்கப்பட்டது.

அதேபோல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழக நலனுக்கு எதிராக எம்.கே.நாராயணன் செயற்படுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் தயாநிதி மாறனைக் கொண்டு தி.மு.க. உடைப்பு வேலைக்கும் எம்.கே.நாராயணன் சதி செய்து வந்ததால் தயாநிதியை கருணாநிதி கழற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்.கே.நாராயணனின் ஒவ்வொரு சதிகளையும் நாம் தொடர்ச்சியாக "புதினம்" இணையத்தளத்தில் அம்பலப்படுத்தி வந்தோம்.

தமிழகத்திலும் எம்.கே.நாராயணனை அம்பலப்படுத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் "பெரியார் முழக்கம்" எனும் அந்த இயக்கத்தின் உத்தியோகப்பூர்வ ஏட்டில் நாராயணனை அம்பலப்படுத்தி தொடர் கட்டுரைகள் எழுதியதை "தமிழ்நாதம்" இணையத்தளம் வெளியிட்டிருந்தது. மேலும் இந்தத் தொடரை விரிவுபடுத்தி தற்போது "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" என்ற பெயரில் பெரியார் திராவிடர் கழக வெளியீடாகவும் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மத்திய குழுவிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்போதைய நெருக்கமான கூட்டுக்கட்சிகளில் ஒன்றாக திராவிடர் கழகம் இருப்பதால் அனேகமாக எதிர்வரும் நாட்களில் எம்.கே.நாராயணன் நீக்கப்பட்டுவிடக் கூடும் என்று கருதப்படுகிறது.

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு புதிய ஊர்தி வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: