Monday, June 25, 2007

தென் தமிழீழத்தில் தான் வைத்த பொறியிலேயே சிக்கப்போகும் சிங்களம்!!!

தென் தமிழீழத்தில் "நாம் வைத்த பொறியிலேயே நாம் சிக்கிக் கொண்டோம்" என்பதனை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.


"தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று திங்கட்கிழமை அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்:

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படவும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவும் இணைத் தலைமை நாடுகள் கூடி விவாதித்தமையை நாம் வரவேற்கிறோம். இராணுவ வழித் தீர்வில் பயனேதும் இல்லை என்பதால் இருதரப்பும் பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்பதில் அனைத்துலகம் உறுதியாக உள்ளது. இதனை நாம் வரவேற்கும் அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர எதுவித உறுதியான நடவடிக்கைகளையும் அனைத்துலகம் மேற்கொள்ளவில்லை என்ற தமிழ் மக்களின் கவலையையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

குறிப்பாக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை, கொடூரமான மனித உரிமை மீறல்கள். பாரிய மனித அவலங்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர எதுவுமே செய்யப்படவில்லை. இணைத் தலைமை நாடுகள் கூட ஏன் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது? சில நாடுகள் அரசியல் வழித் தீர்வுக்காக சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்து வரும்போது ஏன் சில நாடுகள் மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்கிறது? என்பது தமிழ் மக்களுக்கு புரியாத
புதிராக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகால உக்கிரமான ஒரு போரிலிருந்து தற்காலிகமான அமைதியை உருவாக்க யுத்த நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் அனைத்துலக உதவியுடன் உருவாக்கப்பட்ட முதலாவது யுத்த நிறுத்த ஒப்பந்தம். அனைத்துலகமும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன.

இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு இந்த ஒப்பந்தம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் சிங்கள ஆளும் வர்க்கத்தினரது அதிகாரப் போட்டிகளால் அமைதிக்க்காக உருவாக்கப்பட்ட ஏதுவான ஒரு சூழ்நிலை சிதைக்கப்பட்டது. தங்களது நடவடிக்கைகளால் பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் குழப்பமான நிலையை உருவாக்கியதுடன் இலங்கைத் தீவை ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை எனும் முதலாவது முன்மொழிவை அவர்கள் நிராகரித்தனர். அனைத்துலகத்தினரால் முன்மொழியப்பட்ட இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்ட ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பையும் நிராகரித்து யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிர்மூலமாக்கின்னர். இத்தகைய சிங்களப் பேரினவாதத் தலைமையின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எல்லாவித நம்பிக்கையும் அழிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாதத்தின் இனப்பாகுபாட்டு செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் நீண்ட வரலாறு கொண்ட போராட்டத்தையும் அவசியமாக ஆழமாக அனைத்துலகம் ஆராய வேண்டும். அனைத்துலகமானது உறுதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதுடன் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்து, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 100 விழுக்காடு அமுல்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தங்களது கட்சியின் கொள்கைகளை அவர்கள் எப்போதும் பின்பற்றுவதில்லை. அதிகாரத்துக்காகவும் பண பலன்களுக்காகவும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவிக்கொண்டுதான் இருக்கின்றனர். தென்னிலங்கை கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டுக்கான முயற்சிகள் என்பதும் ஒரு நாடகம்தான். இத்தகைய "முயற்சிகள்" மூலம் ஒருபோதும் தீர்வு காணப்பட முடியாது. தற்போதும் கூட அத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வர இயலவில்லை. ஒரு தீர்மானமெடுத்தாலும் அதன் பின்னர் இந்தக் கட்சிகள் ஒத்துழைக்கப்போவதுமில்லை. ஒப்பந்தங்களும் தீர்மானங்களும் அதிகாரத்தில் இருக்கின்றபோதானவைதான்.

அனைத்துலகத்துக்காக மிகவும் வளைந்து கொடுத்து விட்டதாகவும் சிறிலங்கா எப்போதுமே இராணுவ வழித்தீர்வில்தான் அக்கறையுள்ளதாகவும் புதியதாக பேசுகின்றனர். இது எப்போதுமே உள்ளதுதான். தனது இராணுவத்தை வலுப்படுத்திய பின்னர் சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் அமைதிப் பேச்சுக்களுக்கு ஒப்புக்கொள்ளாது.

மாறாக, அமைதி முயற்சிகளையும் யுத்த நிறுத்த ஒப்பந்தங்களையும் நிராகரித்துவிட்டு இராணுவ வழித் தீர்வு காணப்போவதாகக் கூறி போரில்தான் குதிக்கும். போர்க்களத்தில் பாரிய இழப்புகளைச் சந்தித்த பின்னர் வேறுவழியின்றி பேச்சுகளுக்கு ஒப்புக் கொள்ளும். சிங்கள அரசாங்கங்களின் இத்தகைய போக்குகளை அனைத்துலகம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய யுத்த நிறுத்த ஒபந்தமானது தீர்வைத் தருமெனில் இராணுவம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு சிங்கள அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டும். வரலாற்றில் ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அமைதிப் பேச்சுக்களுக்கோ அமைதி முயற்சிகளுக்கோ எப்போதும் ஒப்புக் கொண்டது இல்லை.

கடந்த 60 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காகப் போராடி வருகின்றனர். தங்களது விடுதலைப் போராட்டத்துக்காக தமிழ் மக்கள் இராணுவ வழியை தெரிவு செய்யவில்லை. 30 ஆண்டுகாலமாக தமிழர்கள் அமைதி வழியில் போராடினர். சிங்களத் தலைமையானது இந்த 30 ஆண்டுகளிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் திறந்த மனதுடன் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் சிங்களத் தலைமையானது இந்தப் பிரச்சினையை அணுகவில்லை. மாறாக இனப்படுகொலை- இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையையே மேற்கொண்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு தங்களது தாயகப் பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாரிய மனித அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதுவே எமது விடுதலைப் போராட்டம் பிறப்பதற்குமான சூழலை உருவாக்கியது. எப்போது தங்களது அமைதி வழியிலான- ஜனநாயக ரீதியிலான போராட்டம் உடைந்து நொறுங்கியதோ- இராணுவ வன்முறையால் தமிழ் மக்கள் துரத்தியடிக்கப்பட்டனரோ அப்போது தங்களது தற்காப்புக்காக ஆயுதங்களை கைகளில் எடுத்தனர்.

தமிழீழ மக்களால் இந்தச் சூழ்நிலை உருவாக்கப்படவில்லை. சிங்கள வன்முறைகளால்தான் இச்சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அனைத்துலகத்தின் பார்வையை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஈர்த்திருக்கிறது எனில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்புமிக்க இராணுவ பலத்தினால்தான். ஆகையால் தமிழ் மக்கள் தங்களது இராணுவ பலம் மற்றும் தற்காப்பை பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். சிங்களத் தலைமை இதனை புரிந்துகொண்டு அனைத்துலகத்திடம் கால அவகாசத்தைப் பெற்று அதனையே சந்தர்ப்பமாக்கிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதும் இனப்படுகொலைகளை மேற்கொள்வதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்களினது இராணுவ பலமானது சிங்கள தேசத்துக்கோ சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல- தங்களது தாயகத்தை பாதுகாப்பதற்கான தற்காப்பு பலம்தான் என்று தமிழ் மக்களின் அபிலாசைகளை சிங்களத் தலைமை எப்போது புரிந்துகொள்கிறதோ அப்போது தமிழ் மக்கள் தாங்களும் பாதுகாப்பாக, சுதந்திரத்தோடும் சுயமரியாதையோடும் வாழ முடியும் என்கிற சூழல் உருவாகும். இந்தத் தீவும் வன்முறைகளிலிருந்து விடுபட்டு அமைதியான பிரதேசமாக மாறும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது தாயகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இந்தத் தீவில் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளுக்காக அவர்கள் உதவுகின்றனர். தங்கள் உறவுகள் பாதிக்கப்படும் போது உதவ வேண்டும் என்று கருதுவது மனிதாபிமானமும் இயற்கையானதுமாகும். இப்படியாக உதவுவதை பயங்கரவாதத்துக்கு உதவுவது என்பது உண்மையிலேயே பாரிய சோகம்தான்.

தமிழ் மக்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளின் சட்டங்களுக்கு அப்பால் ஒருபோதும் மீறிச் சென்றது இல்லை. தாங்கள் வாழுகிற நாடுகளிலிருந்து கொண்டு அரசியல் அல்லது மனிதாபிமானப் பணிகளையே செய்து வருகின்றனர். தாங்கள் வாழுகிற நாடுகளின் அரசாங்கங்கள், மக்கள் தங்களது அபிலாசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றனர்.

ஆழிப்பேரலைக்குப் பின்னர், அமைதி முயற்சிகளின் போதும் இனப்படுகொலையால் தங்களது மக்களை இழந்து நின்றபோதும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஓய்வறியாது தாயக உறவுகளுக்காக பாடுபட்டுள்ளனர். இதனை பயங்கரவாதச் செயல் என்பது தமிழ் மக்களை பாதிப்பது என்பது மட்டுமல்ல- தங்களது இன வன்முறைகளை தொடர்ந்து மேற்கொள்ள சிங்களப் பேரிவனவாதிகளுக்கு ஊக்கமளிப்பதுமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. இடம், சூழல், நேரம் என இராணுவ உத்திகளை நாம் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிழக்கில் சிங்களப் படைகள் முன்னேறுவதும் எங்களது கடுமையான தாக்குதல்களினால் பாரிய இழப்புகளைச் சந்தித்து பின்வாங்குவதும் சிங்கள இராணுவத்துக்கு வழமையானதுதான். இதுவே கடந்த கால வரலாறு. எந்த ஒரு மக்களும் தங்களது தாயக நிலப்பரப்பை அன்னியப் படை ஆக்கிரமிப்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தாங்கள் வைத்த பொறியிலே சிக்கிக் கொண்டோம் என்பதை சிங்கள இராணுவம் விரைவில் புரிந்துகொள்ளும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: