Sunday, June 24, 2007

பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட பைத்தியக்காரனைப் போல இலங்கை!!!

சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது?: மூத்த ஊடகவியலாளர் சோலை.

உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை:

ஈழப் பிரச்னையில் சிங்கள இனவாத ராஜபக்ச அரசு, சர்வதேச அரங்கில் தனிமைப்படுகிறது என்பதனை ஏற்கெனவே எழுதியிருந்தோம். அவை கற்பனை என்றும் கட்டுக் கதைகள் என்றும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் மறுப்புத் தகவல் அனுப்பியிருந்தது.

இதோ! இப்போது நாம் குறிப்பிட்ட தகவல்களை விட, ஒருவர் அதிகமாகவே அடுக்கிக் கூறியிருக்கிறார். (இந்து நாளிதழ்: 14.06.07)

மனித உரிமை மீறல்கள் பற்றி மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலை எடுக்கின்றன.

இலங்கைக்குப் பணி செய்ய வரும் ஐ.நா. நிறுவனங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவி விடுகிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் உலகம் நம்புகிறது.

இது பாரபட்சமான செயலாகும். சர்வதேச சமூகம் எங்களை மிரட்டிப் பார்க்கிறது. எங்களுடைய பிரச்சினைகள் என்ன என்று தெரியாது அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். எங்களை அவர்கள் தனிமைப்படுத்த முடியாது. எங்களுக்குப் பின்னே சார்க் நாடுகள், ஆசிய நாடுகள் இருக்கின்றன என்று அந்தப் பெரிய மனிதர் புலம்பல் புராணம் படித்திருக்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்: பிரிட்டிஷ் வெளியுறவுத் துறையைச் சார்ந்த பெரியவர் வந்தார். யாரோ அவருக்கு முழுக்க முழுக்க தவறான தகவல்களைத் தந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் ஒரு சொல் கூடச் சொல்லவில்லை என்று அந்தச் சிங்கள இனவெறித் 'தாதா' சீறிப் பாய்ந்திருக்கிறார்.

அவர் இன்னும் சொல்கிறார்: அவர்கள் எங்களைத் தனிமைப்படுத்துவதாக அச்சுறுத்துகிறார்கள். உதவிகளை நிறுத்திவிட்டார்கள். எங்களைத் தொல்லை துயரங்களுக்கு ஆட்படுத்துகிறார்கள். அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலக நாடுகள் சொல்கின்றன. ஆனால், இலங்கையில் செயல்படும் பயங்கரவாதிகளை அவர்கள் கண்டிப்பதில்லை. வேறு விதமாகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் அழுது வடிந்திருக்கிறார்.

அந்த மகாப் பெரிய மனிதர் வேறு யாருமல்ல. இலங்கை அரசின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சதான். அவர் சிங்கள அதிபர் ராஜபக்சவின் சொந்தச் சகோதரரும்கூட. இந்த இருவரும் சேர்ந்துதான் தமிழ் இனத்தையே அழிக்கின்ற அராஜகப் போரை நடத்துகிறார்கள். அதனை உலகம் அங்கீகரிக்கவில்லை. அந்த உலகம் அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது. எனவே, எரிச்சல் கொண்டு ஏசல்களில் இறங்கியிருக்கிறார்கள்.

'ஈழப்' பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்க என்று இந்தியா உள்பட உலக நாடுகள் சிங்கள அரசிற்கு எடுத்துச் சொல்லிவிட்டன. இதோ! அதோ! திட்டம் தயார் என்றார் ராஜபக்ச. அதிகாரப் பகிர்வு அதோ வருகிறது, இதோ வருகிறது என்றார். இப்படிச் சொல்லி ஏழு மாதங்கள் உருண்டோடிவிட்டன.

இந்த நிலையில், அரபுத் தொலைக்காட்சிக்கு அண்மையில் ராஜபக்ச பேட்டி அளித்தார். அதிகாரப் பகிர்வு எப்போது என்று அந்தத் தொலைக்காட்சி நிருபரும் கேட்டார். சிங்கள அதிபருக்குக் கோபம் கொப்பளித்தது. ஒரு பக்கம் பிரபாகரனை எதிர்த்துப் போர் நடத்துவோம். பேச்சுவார்த்தையும் நடத்துவோம் என்றார். ஓர் உண்மை தெளிவாகிறது.

பேச்சுவார்த்தைக்கோ அதிகாரப் பகிர்விற்கோ சிங்கள அரசு தயாராக இல்லை. முடிந்தால் போர் நடத்திப் பார்ப்பது என்ற முடிவிற்கு வந்திருக்கிறது. அதே சமயத்தில், தமிழ் இனத்தையே அழிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால் அங்கே மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அழிக்கப்படுகின்றன. அதனை உலகம் இன்றைக்குத் தெளிவாகத் தெரிந்து கொண்டுவிட்டது. எனவே, ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. சிங்கள அரசோ, பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட பைத்தியக்காரனைப் போல் கொதிக்கிறது.

ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் என்ன செய்தார்? யாழ்ப்பாணம் செல்லும் பிரதான சாலையை மூடினார். எந்த உணவுப் பொருளும் கிடைக்காமல் பட்டினியால் பரிதவித்தனர். விலைவாசி பயங்கரமாக உயர்ந்தது. சொந்த பூமியில் அவர்கள் அநாதைகளாக்கப்பட்டனர். ஈழப் போராளிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக அப்பாவித் தமிழர்கள் மீது போர் தொடுத்தனர்.

இலங்கையில் சுனாமியால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது ஈழம்தான். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் கப்பல் கப்பலாக உதவிப் பொருள்களை அனுப்பின. ஆனால், அதில் ஒரே ஒரு பொட்டலம் கூட ஈழ மக்களுக்கு வழங்கப்படவில்லை. இது என்ன அநியாயம் என்று உதவிக்கரம் நீட்டிய நாடுகள் கேட்டன. ஈழத்திற்கு உதவுவதை சிங்கள இனவாதக் கட்சிகள் எதிர்க்கின்றன. அவற்றை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ராஜபக்சாக்கள் பொய்யுரைத்தனர். ஆமாம். அவர்கள் இன்று வரை ஈழத்து வெண்புறாக்களை வேட்டையாடுகிறார்கள். அதன் உயிருக்கு விடுதலை அளிக்கிறோம் என்கிறார்கள்.

விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்படும் பல நூறு தமிழ் இளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் சிங்கள இனவாதத்தின் கோரப்பசிக்குப் பலியாகி விட்டார்கள். இந்த சோகச் செய்திகள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அந்த அமைப்புகள் ஆதாரங்களோடு ராஜபக்ச அரசைக் கேட்கின்றன. அதற்கு என்ன பதில் தெரியுமா? அமெரிக்கா அப்படியெல்லாம் அழைத்துச் செல்லவில்லையா என்று ராஜபக்சவின் சகோதரர் கேட்கிறார். இப்படி அவர் இனப்படுகொலைக்கு நியாயம் கேட்கிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது இட்லர் என்ன செய்தான்? அவன் படையெடுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே யூதர்களைத் திரட்டினான். முதலில் அவர்களைத் தொலை தூர முகாம்களுக்கு அப்புறப்படுத்தினான்.

அந்த ஈனச் செயலை இப்போது கொழும்புத் தலைநகரில் ராஜபக்ச செய்தார். அங்குள்ள தமிழர்களைத் திரட்டி இரவோடு இரவாக 250 கிலோ மீட்டருக்கு அப்பால் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பி வைத்தனர். இதனை உலகமே கண்டித்தது. இலங்கை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ஏன்? சிங்கள இனவாதிகள் நிரம்பிய உச்ச நியாய சபையும் கண்டித்தது.

பிறந்த மண்ணிலேயே உலவுவதற்கு இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்கிறது சிங்கள அரசு. கண்முன்னே நடமாடுகின்ற ஒவ்வொரு தமிழனும் அந்த அரசிற்குப் பிரபாகரனாகத் தெரிகிறார்கள். நடமாடும் வெடிகுண்டுகளாகத் தெரிகிறார்கள். எனவே நாட்டிற்குள்ளேயே தமிழர்களை நாடு கடத்தும் இரக்கமற்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு நமது பிரதமரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வேட்டி கட்டிய தமிழர்களை அவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்? விரட்டுகிறார்கள்? அவர்களுக்குப் பாதுகாப்பு வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும்தான் இருக்கிறது என்கிறார்களா? அவர்களுடைய ராஜ்யம் அங்கேதான் மலர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்களா?

இதுவரை தமிழர் குடியிருப்புக்களைத் தகனம் செய்தவர்கள் கொழும்புத் தமிழர்களைத் துரத்தியதன் மூலம் தங்கள் சிம்மாசனத்திற்கே நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் அவர்களை ஒதுக்கிவைக்கத் தொடங்கிவிட்டது. அதனால்தான் ராஜபக்சக்களும் அவரது ரத்த உறவுகளும் அசைகின்ற செடி, கொடிகளைப் பார்த்துக்கூட அச்சப்படுகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்? இலங்கைப் பிரச்சினையில் இன்றைய உலகத்தின் சலனங்கள், அசைவுகள் இந்திய அரசிற்குத் தெரியாமலா இருக்கும்.?

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்தபோது, உண்மையிலேயே அதிகாரப் பகிர்விற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அடுத்து வந்த சந்திரிகா, சமஷ்டி ஆட்சிமுறை பற்றி அறிவித்தார். ஆனால், ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த பின்னர் அமைதிப் பேச்சுக்குச் சமாதி எழுப்பப்பட்டது. தமிழ் மக்களின் நடமாடும் சுதந்திரம் கூட தட்டிப் பறிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுவதே அபாயம் என்கின்றனர். போர் முனையில் ஈழப்போராளிகளை வெற்றி காண்போம் என்கின்றனர். போர் வெறி கொழுந்துவிட்டு எரிகிறது.

ஓட்டுகிறவன் சரியாக இருந்தால் குதிரை சரியாக ஓடும். ஆனால், ஓட்டுகிறவனுக்கும் போதை ஏறியிருக்கிறது. ஓடுகிற குதிரைக்கும் போதை ஏறியிருக்கிறது. ஆமாம். இனவெறி போதையில் சாரட்டு வண்டியே பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

தரைவழிப் போரை நிறுத்தி, ஈழப் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சென்ற மாதம் சிங்கள இராணுவத் தளபதி கூறினார். காரணம், ஈழப்போராளிகளைக் களத்தில் நேருக்கு நேர் மோதும் ஆற்றல் சிங்களப் படையினருக்கு இல்லை. அநியாயமாக ரத்தம் சிந்த வேண்டாம் என்று ஒருவேளை அந்தத் தளபதி எண்ணியிருக்கக் கூடும்.

தரைவழிப் போரில் மட்டுமல்ல் வான்வெளிப் போரிலும், கடற்போரிலும் ஈழப் போராளிகள் வல்லமை பெற்றிருக்கிறார்கள் என்பதனை இன்றைக்கு உலகம் கண்டு கொண்டிருக்கிறது. அத்தகைய வளர்ச்சி இந்தியாவிற்கு அபாயம். ஆகவே, இந்தியா தங்கள் மீது படுத்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கள இனவாத அரசு ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது.

என்றைக்கு ராஜபக்ச மணிமுடி சூட்டிக் கொண்டாரோ, அன்றிலிருந்து ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்களையும் தங்கள் குடி மக்களாகக் கருதியதில்லை. தமிழர்கள் மீது தொடுக்கும் தாக்குதலை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கின்றனர். அதனை உலகம் ஏற்கவில்லை.

இப்படி உலக அரங்கில் சிங்கள இனவாத அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது. இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று சோலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நன்றி>புதினம்.

1 comment:

தேவன் said...

மேலைநாடுகளின் பிச்சையே அவர்கள் அரசை ஓடவைத்துக் கொண்டிருக்கும் போதும் அரச இறைமை என்ற ரோசத்துக்கு மட்டும் குறைச்சலே இல்லை. ஒரு வேளை புலிகளை எதிர்க்கும் பலம் தனியே அவர்களிடம் இருந்துவிட்டால் உந்த வக்கணையான வாதங்கள் செல்லத்தக்கனதான். வளர்ந்த நாடுகளிடம் தொங்கிக் கொண்டிருக்கும் பிழைப்புக்களுக்கு வேண்டுமா இந்த வக்கணையெல்லாம்.