Saturday, June 23, 2007

தென்னாபிரிக்க மக்கள் இலங்கை அரசைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம்.








தென்னாபிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏனைய அமைப்புக்களுடனும் மக்களுடனும் ஒன்றுசேர்ந்து இலங்கை அரசைக் கண்டித்து இன்று (ஆனி 23, 2007) மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தியது. இலங்கை அரசும் அதன் ஆயுதப்படைகளும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் அட்டூழியங்களைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டார்கள். ''இலங்கை அரசே தமிழர்களைக் கொல்லாதே, தமிழர்களைப் பூண்டோடு அழிப்பதை உடனடியாக நிறுத்து, தமிழினப் படுகொலையை நிறுத்து, தமிழீழ மண்ணிலிருந்து சிங்களப் படையை விலக்கு, வடக்குகிழக்கு தமிழரின் பாரம்பரியத் தாயகம், தமிழர் தலைவன் பிரபாகரன்'' போன்ற சுலோகங்களைத் தாங்கிய பதாதைகளையும் தமிழீழத் தேசியத் தலைவரின் வண்ணப் படங்களையும் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணியில் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டார்கள்.

ஆர்ப்பாட்டப் பேரணி புளோரன்ஸ் வீதியிலுள்ள ஆசிரியர் மன்றத்தில் மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமாகி ஒன்றரை மணி நேரம் நடைப் பயணமாகச் சென்று, சற்ஸ்வேத்திலுள்ள காந்திப் பூங்காவில் முடிவுற்றது. அங்கு மும்மதத் தலைவர்களும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதோடு, தமிழீழ மக்களுக்கான தமது உளப்பூர்வ ஆதரவையும் தெரிவித்தார்கள்.

அங்கு கூடியிருந்தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழவேந்தன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரால் தென்னாபிரிக்க மனித உரிமைகள் ஆணையகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்தி கவுண்டரிடமும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சின் சார்பில் கலந்துகொண்ட பிரதி நகரத்தந்தை லோகநாதன் நாயுடுவிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன.
நன்றி>பதிவு.

No comments: