Monday, June 18, 2007

ஐ.நா.வில் தனக்குத் தானே கரிபூசிக் கொண்ட சிறிலங்கா!

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது.


மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளுக்கு தமது தரப்பு கருத்துகளை தெளிவுபடுத்துவதற்காக அல்லது நியாயப்படுத்துவதற்காக அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் இத்தகைய கூட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத் தொகுதியில் ஏற்பாடு செய்வது வழமை.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (15.06.07) சிறிலங்கா அரசாங்கமும் இத்தகைய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

பெருமளவில் விளம்பரப்படுத்தப்படாமல் கிட்டத்தட்ட மறைமுகமாக நடைபெற ஏற்பாடாகியிருந்த இக்கூட்டத் தொடர் பிற்பகல் 2.30 மணியிலிருந்து 3.20 மணி வரை 26 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இத்தகைய கூட்டம் நடைபெறப் போகின்றது என்பது எவ்விதத்திலோ அறிந்து கொண்ட சில நாடுகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் 30 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் பேச்சாளர்களாக சிறிலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, தொழிற்துறை அமைச்சர் அதாவுட செனிவிரட்ன, துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி தயான் ஜயதிலக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிற்துறை அமைச்சர் அதாவுட செனிவிரட்ன மனித உரிமைகள் அமைச்சரான மகிந்த சமரசிங்கவை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், அமைச்சர் மகிந்த சமரசிங்கவோ, இங்கு தாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை- இது ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்றும் கூறியதோடு அனைவருடைய கேள்விகளுக்கும் பதில் கூறத் தயார் என்றும் கூறினார். ஆனால் இக்கூட்டம் ஊடகவியலாளர்கள் சந்திப்பதற்கான மண்டபத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைபற்றி அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், பி.பி.சி. யின் ஐக்கிய நாடுகள் சபைக்கான செய்தியாளர் என்று பலர் பல கேள்விகளைக் கேட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து ஜேர்மனியிலிருந்து வருகை தந்த எஸ்.ஜெ.இமானுவேல் அடிகளார், கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றியும் அண்மையில் அனைத்துலக வல்லுநர்கள் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டமா அதிபர் சில்வா பதிலளித்தார்.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், கேட்பதற்கு பல கேள்விகள் உண்டு என்றும் ஆனால், மிகச் சுருக்கமான சில விடயங்கள் பற்றியே தான் கேட்கவிருப்பதாகவும் கூறி, முதலாவதாக அங்கு உரையாற்றும் அமைச்சர்களும் மற்றவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் சிறிலங்காவில் மனித உரிமையை மீறுகிறார்கள் என்ற கூற்றை மாற்றவேண்டும் என்றும், சிறிலங்கா இராணுவம் மற்றும் அதன் துணை இராணுவக் குழுவினர் போன்று அனைவருமே மனித உரிமைகளை மீறுவதாகவும், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யினர் யாழ்ப்பாணத்திலும் வேறு பல இடங்களிலும் அப்பாவி மக்களை மிக மோசமான முறையில் துன்புறுத்துவதாகவும், இதனால் கடத்தல், சித்திரவதைகள், கொலைகள் பெரியளவில் ஈ.பி.டி.பி.யினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் நேருக்கு நேர் அம்பலப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கிருபாகரனுக்கும் டக்ளஸ் தேவானந்தா, கேகலிய ரம்புக்வெல, அதாவுட செனிவிரட்ன ஆகியோருக்கு இடையில் பாரிய வாக்குவாதம் ஏற்பட்டு நீண்ட நேரமாக பெரும் அமளி ஏற்பட்டது.

சிறிலங்கா அரச பிரதிநிதிகளைப் பார்த்து, இம் மண்டபத்தினுள் பொதுக்கூட்டங்களிலோ அல்லது அரசியல் கூட்டங்களில் பேசுவது போல் நீங்கள் பேச முடியாது. ஏனெனில் இங்கு சமூகமளித்துள்ள வெளிநாட்டவர்களுக்கு சிறிலங்காவின் அனைத்து உண்மைகளும் ஆதாரங்களுடன் தெரியும். ஆகையால் உண்மையைக் கூறுங்கள் என்றார் கிருபாகரன்.

இதற்கு ரம்புக்வெல வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், இலங்கையில் நடக்கும் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை பலப்படுத்துவது மட்டுமல்லாது அனைத்துலகப் பிரசாரத்திலும் மிக வீரர்களாகவும் உள்ளனர் என்றார்.

இதற்கு பதிலளித்த கிருபாகரன், ரம்புக்வெல உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி கூறுவதாக கூறியதும் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைவரம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தன.

உண்மையில் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த சிறிலங்கா அரசாங்கம், கூட்டம் குறித்த தகவல்களை வெளியில் கசியவிடாது வைத்திருந்தது. கூட்டம் பிற்பகல் 2 மணிமுதல் 3.15 வரையென கூறப்பட்டிருந்த போதும் வாக்குவாதங்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடையவில்லை. வாக்குவாதங்களுக்கிடையே சில அமைச்சர்கள் அறையை விட்டு வெளியேறிவிட்டனர். கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் செனிவிரட்ன, தமக்கு நோர்வேயின் சமாதான தூதுவர் சொல்ஹெய்முடன் சந்திப்பிருப்பதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
நன்றி>புதினம்.

No comments: