Monday, January 29, 2007

அரசுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை நேற்று சீற்றத்துடன் கிழித்து வீசியது ஐ.தே.கட்சி.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அணியினர் நேற்று அரசுத் தரப்பில் போய் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்தக் கட்சி தாவும் படலத்தால் சீற்றமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தான் செய்துகொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தது.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்றுமுற்பகல் கூட்டப்பட்ட ஒரு விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆவணம் துண்டு துண்டாகக் கிழித்து வீசப்பட்டது.

ஐ.தே.கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க ஒப்பந்த ஆவணத்தைக் கிழித்து வீசியதோடு அரசிற்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் இருந்த அனைத்துத் தொடர்புகளும் இத்தோடு துண்டிக்கப்படுகின்றன என்று அறிவித்தார்.
இது தொடர்பாக நேற்று கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கூட்டப்பட்டது. இச்சந்தின்போதே இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்து வீசப்பட்டது.

இச்சந்திப்பின்போது ருக்மன் சேனாநாயக்க ஊடகவியலாளர்களுக்கு உரையாற்றுகையில், நாட்டின் நிலையான சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக நாம் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தில் அரசு ஈடுபட்டால் இந்த ஒப்பந்தம் கிழித்தெரியப்படும் என அரசிற்கு அப்போது அறிவித்திருந்தோம்.

ஒப்பந்தத்தின் எட்டாம் பிரிவின்படி கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் கட்சி உறுப்பினர்களைத் தம்பக்கம் வளைத்துப் போடுதல் போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டால் ஒப்பந்தம் கிழித்தெரியப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்த ஒப்பந்தத்தை நாம் இப்போது கிழித்தெறிகின்றோம். எமது கட்சியை நாம் அரசிற்கு வழங்கி வந்த ஆதரவை மதிக்காத இந்த அரசுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இனியும் மதித்து நடக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.

இந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவது மாத்திரமன்றி அரசுடன் நாம் வைத்திருந்த எல்லாத் தொடர்புகளையும் நாம் இத்தோடு துண்டித்து விடுகிறோம்.

கயந்த கருணாதிலக
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் ஊடகப் பேச்சாளரும் எம்.பியுமான கயந்த கருணாதில கூறுகையில்,
இன்றைய நாள் ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கிய நாள். கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக நாம் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
எமது தலைவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் அவரது தலைமையின் கீழ் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஜோன்ஸன் பெர்னாண்டோ
ஐ.தே.கட்சியின் எம்.பி. ஜோன்ஸன் பெர்னாண்டோ கூறுகையில்,
அரசின் பக்கம்போய்ச் சேர்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் மக்களுக்கும், இந்த தேசத்திற்கும் துரோகமிழைத்த தேசத் துரோகிகளாகக் கணிக்கப்படுவர்.

ஐ.தே.கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று அரசுடன் இணைந்துகொண்ட இவர்களை மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்.
அரசைப் பலப்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு அரசு இவர்களை தம் பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. நிச்சயமாக இனித்தான் அரசு பலமிழக்கப்போகின்றது என்றார்.
நன்றி>லங்காசிறீ

1 comment:

Anonymous said...

ஒப்பந்தம் போடுவதும் பின் கிழித்தெறிவதும் சிங்களத்துக்கு புதிதில்லை.