Sunday, January 28, 2007

சிறிய நாட்டில் உலகின் மிகப்பெரிய அமைச்சரவை.

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கத்துக்கு கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரசில் இணைய உள்ளனர். அதேவேளையில், இவ்வாறு அரசுடன் இணைந்து கொள்பவர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இன்று நடைபெற உள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அதிருப்தியடைந்துள்ள சுமார் 17 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசில் இணைந்து கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது.

ஆனால் 13 உறுப்பினர்களே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் சிறப்பு வைபவம் ஒன்றில் இவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து கொள்வதுடன், புதிய அமைச்சர் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்குவது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்கசவினது இரட்டை வேடத்தை உள்நாட்டிலும் அனைத்துலகத்திலும் அம்பலப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவரட்ன தெரிவித்துள்ளார். அதேசமயம் "சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காகவே தாம் அரசில் இணைவதாக" சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுடன் இணைவதைத் தொடர்ந்து இன்று காலை சிறிலங்கா அரசின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் கங்கிரசும் அரசில் இன்று இணைந்து கொள்வார்கள் என அரச தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அரச தரப்பு மேலும் தகவல் தெரிவிக்கையில்:

"புதிய அமைச்சர்களின் பதவியேற்பு வைபவம் இன்று காலை 10.00 மணியளவில் அரச தலைவரின் செயலகமான அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் அரசில் இணையவும், அமைச்சர் பதவிகளை ஏற்கவும் முன்வந்துள்ளனர். மேலும் அரசில் இணையும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு செய்துகொள்ளாது. ஏனெனில் இந்த புதிய ஒப்பந்தத்தால் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் றெல உறுமய போன்ற கட்சிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குழப்பம் ஏற்படலாம்.

கட்சிதாவும் 17 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேருக்கு அமைச்சர் பதவிகளும் 7 பேருக்கு பிரதியமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதுடன், இது தொடர்பாக நேற்று இரவும் கட்சிதாவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச லைவருக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றது" என அவர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு கட்சிதாவும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

கரு ஜெயசூர்ய, எம்.எச்.மொகமட், பி. தயாரட்ன, தர்மதாசா பண்டா, ஜி.எல்.பீரீஸ், காமினி லொக்குகே, மிலிந்த மொறகொட, பந்துல குணவர்த்தன, மனோ விஜயரட்ன, ரஜித சேனாரட்ன, ஹேமகுமார நாணயக்கார, நவீன் திஸநாயக்க, நோமல் பெரேரா, எம்.முஸ்தப்பா, பி.சூரியாராச்சி, லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, எட்வேட் குணசேகர ஆகியோர் இன்று அரசில் இணைய உள்ளனர். மேலும் ரஞ்சித் மதுமபண்டாரா பின்னர் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய அமைச்சரவை 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியானால் இது உலகத்தில் மிகப் பெரிய அமைச்சரவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர்.

சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தக் கட்சித்தாவல்மூலம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தமது கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் உள்வாங்குவாராக இருந்தால் தமக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துபோகும் என ஐ.தே.கட்சியின் உயர்வட்டாரங்கள் பலதடவைகள் நேரிலும் கடிதமூலமும் அறிக்கைகள் மூலமும் எச்சரித்திருந்தபோதும் மகிந்தராஜபக்ச கட்சித்தாவிய ஐ.தே.க உறுப்பினர்களுக்கு அமைச்சர்களாகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் கட்சிதாவும் உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பாக அதிருப்தி நிலவுகின்றது. “பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவுதர முன்வருவது அமைச்சர் பதவிகளுக்கும், தமது புகழுக்கும், அரச உடமைகளை தாம் திருடிய குற்றத்தில் இருந்து தப்புவதற்குமே” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இணைத்தலைமை நாடுகள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இருகட்சிகளுக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எக்காரணம்கொண்டும் முறிந்துபோகக் கூடாதென தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

24 கட்சிதாவிய உறுப்பினர்களுடன் சேர்த்து ஆளுங்கட்சிக்கு இப்போது 114 ஆசனங்கள் பாராளுமன்றத்தில் உள்ளன.

-Sankathi-