Thursday, January 25, 2007

அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும், அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும்.

சிறுவர்களை படைக்கு சேர்ப்பதற்கு இராணுவம் உதவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவசியம் விசாரணை நடத்த வேண்டும் அல்லது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு செயற்படும் மனிதஉரிமைகள் அவதானிப்புக்குழு நேற்று புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்படும் அதேசமயம், சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பான குற்றப் பொறுப்பில் அரசாங்கத்திற்கு சம்பந்தமிருப்பதான குற்றச்சாட்டானது அரசின் பாசாங்குத்தனத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும் மனித உரிமை அவதானிப்புக் குழு சாடியுள்ளது.

`காரணங்களை உருவாக்குவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசின் மீதான குற்றப் பொறுப்பு குறித்து தீவிரமான பக்கச்சார்பற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்' என்று மனித உரிமைக் குழுவின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

`அரசாங்கம் விசாரணை நடத்தாவிடில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் கெஹலிய

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துமெனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அதேசமயம், இந்த மனித உரிமை அவதானிப்புக்குழு நம்பத்தகுந்த ஆதாரத்தை முன்வைக்க வேண்டுமென கூறியுள்ளார். வெறும் அறிக்கைகளுடன் மட்டுமல்லாது பெறுமதியான ஆதாரத்தை முன்வைத்தால் தேவை ஏற்படின் நாம் நடவடிக்கை எடுக்க முடியுமென்று அமைச்சர் ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதேசமயம், இந்த மனிதஉரிமைக் குழுவின் சிறுவர் உரிமைக்கான சட்டத்தரணியான ஜோபெக்கர் கருத்துத் தெரிவிக்கையில், புலிகள் சிறுவர்களை படைக்குத் திரட்டுவதாக பல வருடங்களாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இப்போது அதே குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
நன்றி>தினக்குரல்.

1 comment:

Anonymous said...

அரசு செய்யுமா?