Friday, January 19, 2007

கண்காணிப்புக்குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளோம்!!!

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது.
இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன்னமும் நாங்கள் கழற்றவில்லை. மக்களின் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் போதுதான் அதனை நாங்கள் கழற்றுவோம்.

படை ரீதியாகத் தயார் நிலையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சிறிலங்கா அரசு எங்களைத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் வலிந்த தாக்குதலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். அந்த தாக்குதல்கள் தொடர்ந்தும் நடக்கின்றன.
சிறிலங்கா அரசின் இனவெறித் தாக்குதல்களில் ஏறக்குறைய 80,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எங்கள் மக்களின் பிரச்சினை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் பற்றி இளந்திரையன் விவரிக்கையில்,
வாகரைப் பகுதியில் மூன்று நிலைகளில் இருந்து படையினர் தீவிர தாக்குதல் நடத்தியது. காலை 5.35 முதல் இரவு வரை இடம்பெற்ற இம்மோதலில் படையினர் தரப்பில் 65 பேர் பலியாகியுள்ளனர். 25 பேர் மிக மோசமாகக் காயமடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமானவர்கள் ஓரளவு காயமடைந்துள்ளனர்.

எமது தரப்பில் 12 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்தனர்.
மிக மோசமாக அடிவாங்கிய அரச தரப்பினர் நேற்று முன்தினம் குடிமக்கள் வாழும் பகுதிகளில் சூப்பர் சோனிக் விமானங்களில் வந்து குண்டு வீச்சை நடத்தினர்.
இதேவேளையில் கிழக்கைப் பிடித்து விட்டதாக படையினர் கூறிவருவது பற்றி கருத்துரைக்கையில்,

கிழக்கில் மட்டக்களப்பு எங்களது வலுவான நிலை. அம்பாறையில் நாங்கள் நகரும் முகாம்களையே வைத்துள்ளோம். இங்கே எங்கள் இடங்களைப் பிடித்திருப்பதாக சொல்வது நகைப்புக்கிடமானது. திருகோணமலை பகுதியில் மோதல் தொடர்கிறது என்றார் அவர்.

தொடர்புபட்ட செய்தி: விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு
நன்றி>புதினம்.