Monday, January 01, 2007

இந்திய இராணுவ வேட்டைக்குள் பாலாவின் வாழ்கை.

திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவிருந்த டிக்ஷித்தை யாழ்ப்பாணம் அனுப்பி நிலைமையை ஆராய வைத்தது. கடும்போக்கு வாதியான டிக்ஷித்தை சந்தித்து பிரபாகரன் - பாலா பேச்சில் ஈடுபட்டனர். நிலைமையை புரிய வைத்தனர். எச்சரிக்கைவிடுத்தனர். அலட்சியம் செய்தார் டிக்ஷித் திலீபன் தியாக மரணமடைந்தார்.

குமாரப்பா, புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்த பாலா

இதையடுத்து புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளிகளை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறி தமிழீழ கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்களை விடுவிக்க பாலா பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

இந்தியத் தூதுவர் டிக்ஷித்தை மீண்டும் சந்தித்த பாலா நிலைமையின் விபரீதத்தை விளக்கினார். ஆனால், எதையும் டிக்ஷித் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் பாலா எச்சரிக்கையும் விடுத்தார். இதற்கிடையில் குமரப்பா, புலேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சி நடந்தது.

இலங்கை அரசின் செயலில் பிரபாகரன் மிகவும் கோபமுற்றிருந்தார். நிலைமை விபரீதமாக முடியப் போவதை உணர்ந்த பாலா இந்திய அமைதிப்படையின் அனுமதியுடன் கைதான தளபதிகளை சந்தித்து நிலைமைகளை விளக்கினார். அப்போது தளபதிகள் பிரபாகரனிடம் கொடுக்குமாறு கூறி கடிதம் ஒன்றை வழங்கினர். அக்கடிதம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தாம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவோம் என்பதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிகேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பாலா மிகவும் அவசர அவசரமாக மீண்டும் டிக்ஷித்தை சந்தித்தார். இந்த விவகாரம் மூலம் புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையே விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் பாலா ஆர்வமாக விருந்தார். ஆனால், தோல்வியே கிடைத்தது.

அக்டோபர் 5 ஆம் திகதி குமரப்பா, புலேந்திரனையும் ஏனைய போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட விபரம் பிரபாகரனுக்கு தெரியவந்தது. இதனால் குமரப்பா, புலேந்திரனின் கோரிக்கைக்கு ஏற்ப தனது கழுத்திலிருந்த சயனைட் குப்பியையும் ஏனைய தளபதிகளின் கழுத்திலிருந்த சயனைட் குப்பிகளையும் கழற்றி பாலா மற்றும் மாத்தையா ஆகியோரின் கழுத்தில் போட்டு குமரப்பா, புலேந்திரனிடம் ஒப்படைக்குமாறு பணித்தார்.

சம்பவதினம் தளபதிகளை கொழும்புக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர்கள் பாலா கொடுத்த சயனைட் குப்பிகளை உட்கொண்டு வீரச்சாவடைந்தனர். 12 பேர் வீரச்சாவடைய 3 பேர் காப்பாற்றப்பட்டனர். இச்சம்பவம் பாலாவை மிகவும் பாதித்தது.

பாலாவை வேட்டையாடிய இந்திய அமைதிப்படை

புலிகளுக்கும் இந்தியப் படைக்குமிடையே போர் மூண்ட பின்னர் பாலாவினது வாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையானது. பாலாவையும் அடேலையும் இலக்கு வைத்து பல நடவடிக்கைகளை இந்தியப் படை மேற்கொண்டது. தெய்வாதீனமாக அவற்றிலிருந்து தப்பிய பாலாவும் அடேலும் தினமும் ஒவ்வொரு இடமாக தலைமறைவாகிக் கொண்டிருந்தனர்.

இந்தியப் படை பாலாவையும் ஏனைய போராளிகளையும் துரத்தி துரத்தி வேட்டையாடிக் கொண்டிருந்தது. இதனால், ஒவ்வொரு நாளும் தமது மறைவிடங்களை மாற்ற வேண்டிய நிலை பாலாவுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்தியப் படைக்கு இலகுவாக அடையாளம் காட்டிக் கொடுக்க கூடியவராக வெள்ளைக்காரப் பெண்ணான பாலாவின் மனைவி அடேல் இருந்தார்.

இந்தியப் படைக்கு பாலாவை அதிகளவில் தெரியாததால் தாம் சுற்றிவளைக்கும் கிராம மக்களிடையே பாலாவின் மனைவியான அடேலை அடையாளம் கூறி விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் பாலாவுக்கு இன்னும் சிக்கல் நிலை ஏற்பட்டது.

வடமராட்சிக்குள்ளேயே இந்தியப் படைக்கு பாலாவும் ஏனைய போராளிகளும் தண்ணி காட்டிக் கொண்டிருந்தனர். முதல் நாள் பாலா தங்குமிடம் மறுநாள் இந்தியப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்படுவது வழமையாகியிருந்தது. இதனால், சிறந்த பாதுகாப்பு இடமொன்றைத் தேடி பாலாவும் அடேலும் வடமராட்சியின் கரவெட்டிப் பகுதிக்குள் சென்றனர்.

பாலாவை கைது செய்ய இந்தியப் படை சூழ்ச்சி

பாலா தம்பதியை வேட்டையாடித் திரிந்த இந்தியப் படையினர் இறுதியில் சூழ்ச்சியொன்றைக் கையாண்டனர். அப்போது இந்தியப் படையுடன் முரண்படாதவராகவும் விடுதலைப் புலிகளை மதிப்பவராகவும் அவர்களின் செயற்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவும் ஈரோஸ் தலைவரான பாலகுமார் இருந்தார். அவரை அணுகிய வடமராட்சிப் பகுதிக்கு பொறுப்பான இந்தியப் படைத் தளபதிகள் இந்திய உயர் பீடத்துக்கும் பாலாவுக்குமிடையே சந்திப்பொன்றை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும் இதனை பாலாவிடம் தெரிவிக்கும் படியும் பாலகுமாரிடம் கூறினர்.

இதனையடுத்து பாலகுமார் வடமராட்சியின் மறைவிடமொன்றில் வைத்து பாலாவை சந்தித்து இந்தியப் படைத் தளபதிகள் தெரிவித்த விருப்பத்தைக் கூறினார். இந்தியப் படையின் கோரிக்கையில் சூழ்ச்சி இருப்பதை பாலா புரிந்து கொண்டார். ஆனாலும், இந்திய அரசுக்கும் புலிகளுக்குமிடையே ஒரு சுமுகமான உறவை மீண்டும் ஏற்படுத்த பாலா விரும்பி இந்த சந்திப்புக்கான இந்தியப் படைத் தளபதிகளின் விருப்பம் தொடர்பாக பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி சந்திப்புக்கான அனுமதியைக் கோரினார்.

இந்தியப் படைத் தளபதிகளின் விருப்பத்தை தீவிரமாக ஆராய்ந்த பிரபாகரன் அச்சந்திப்புக்கு பாலாவை போக வேண்டாமெனக் கூறியதுடன், பாலாவை சந்திப்புக்கு அழைத்து கைது செய்வதே இந்தியப் படையின் நோக்கமெனவும் விளக்கியிருந்தார். இதனை ஊர்ஜிதப்படுத்துவது போல இதே ஏமாற்று முறையைப் பயன்படுத்தி மட்டக்களப்பில் புலிகளின் மூத்த போராளியொருவரை இந்தியப் படை கைது செய்தது. ஆனால், பிரபாகரனின் அறிவுறுத்தலினால் பாலா தப்பிக் கொண்டார்.

பாலசிங்கம் அனுபவித்த அவஸ்தை

ஒரு கட்டத்தில் பாலா கரவெட்டியில் மறைந்திருப்பது இந்தியப் படைக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து பாலாவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருமாறு இந்தியப் படைத் தளபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதனால் கரவெட்டிப் பிரதேசம் இந்தியப் படைகளால் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.

இந்தியப் படைக்கு பாலாவை அதிகமாக தெரியாததாலும் அவருடைய அடையாளங்கள் புரியாததாலும் அப்பகுதியில் `பாலசிங்கம்' என்ற பெயரில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகள் கடுமையாக சோதனையிடப்பட்டன. பாலசிங்கம் என்ற பெயர்களில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் பாலாவும் அவரின் மனைவி அடேலும் தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்ட இந்தியப் படை திடீரென ஒரு நாள் அவ்வீட்டின் மீது ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பாலாவும் அடேலும் மயிரிழையில் தப்பினர். ஆனால், அவர்கள் தங்கியிருந்த வீடு பலத்த சேதமடைந்தது.

இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பாலா நெல்லியடியில் மறைவிடமொன்றில் தங்கினார். அங்கு காயமடைந்த நிலையில் பொட்டம்மானும் தங்கியிருந்தார். ஆனால், இதனையும் மோப்பம் பிடித்து விட்ட இந்தியப் படை அந்த மறைவிடத்தை சுற்றிவளைத்தது. இந்தியப் படையால் சகல வழிகளாலும் அந்த மறைவிடம் சுற்றி வளைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒரு வீதியால் வந்த இராணுவத்தினர் தாமதமானதால் அவ்வீதியை பயன்படுத்தி பாலாவும் பொட்டம்மானும் தப்பிச் சென்றனர்.

இதனை அறியாத இந்தியப் படை பாலாவை சரணடையுமாறு பலதடவைகள் எச்சரித்த பின் அந்த மறைவிடம் மீது தாக்குதலை நடத்தின. அதற்கிடையில் பாலாவும் பொட்டம்மனும் இன்னொரு மறைவிடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைந்தனர்.

நாளுக்கு நாள் இந்தியப் படையின் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் அதிகரித்ததால் பாலா தம்பதியை அங்கு வைத்திருப்பது முடியாத காரியமென்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு சூசைக்கு பணித்தார்.

தனது மரணத்திலும் உதவிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

பாலா தம்பதியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பொருத்தமான நேரத்தை தளபதி சூசை எதிர்பார்த்திருந்தார். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணத்தில் அந்த நேரம் புலிகளுக்கு கிடைத்தது. தமிழ் நாட்டில் தங்கியிருந்த புலிகளுக்கு பேருதவி புரிந்தவர் எம்.ஜி.ஆர்.பாலாவின் சிகிச்சைக்கு கூட நிதியுதவி புரிந்தார். இறுதியில் அவர் தனது மரணத்தின் போதும் பாலாவுக்கு உதவி புரிந்தார்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி எம்.ஜி.ஆர். காலமானார். இதையடுத்து தேசிய துக்க தினமும் போர் நிறுத்தமும் அறிவிக்கப்பட்டன. முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக இந்தியப் படைகள் முகாம்களுக்குள் இருக்குமென அறிவிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தளபதி சூசை பாலாவையும் அவரது மனைவி அடேலையும் டிசம்பர் 24 ஆம் திகதி வடமராட்சி கடல் பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

கடல் பயணத்திலும் மரண விளிம்பு வரை சென்ற பாலா தம்பதியினர் ஒருவாறாக இந்தியக் கடற்கரையை சென்றடைந்தனர். இலங்கையில் இந்தியப் படை பாலாவை வேட்டையாடிக் கொண்டிருக்க அவர் பத்திரமாக இந்தியாவை சென்றடைந்தார்.

பாலாவுக்கு உதவியபுலனாய்வுத்துறை அதிகாரி

இந்தியாவிலும் கியூ பிரிவு பொலிஸார் விடுதலைப் புலிப் போராளிகள் மீது தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருந்ததால் பாலாவினால் அங்கும் தலைமறைவு வாழ்க்கையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் சென்னையில் இருப்பது பாதுகாப்பற்றதெனக் கருதிய பாலா பெங்களூரில் பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்தார்.

அங்கிருந்தவாறே அவர் தீவிர நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது சென்னையில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கிட்டு இந்திய பொலிஸாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.கிட்டு
ை சந்திக்க விரும்பிய பாலா இது தொடர்பான தகவலை கிட்டுவுக்கு தெரியப்படுத்தினார். இதன்பின்னர் தந்திரமொன்றை மேற்கொண்டு பொலிஸாரை ஏமாற்றிய கிட்டு தனது வீட்டிலேயே பாலாவை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக உரையாடினார்.

சில தினங்களின் பின்னர் பிரபாகரனிடமிருந்து பாலா தம்பதியை லண்டனுக்கு செல்லுமாறு தகவல் வந்தது. இந்திய அரசுடனான புலிகளின் போர் அதிலிருந்து உருவான அரசியல் இராணுவ நிகழ்வுகள் தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென அத் தகவலில் பாலாவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சென்னையில் தனக்கு நட்பான புலனாய்வுத்துறை அதிகாரியொருவரை சந்தித்த பாலா தான் லண்டன் செல்ல உதவும்படி வேண்டிக் கொண்டார். பாலா தம்பதியின் கடவுச் சீட்டில் இந்தியாவுக்கான விசாக்காலம் காலாவதியாகி சில வருடங்கள் கடந்து விட்டதினால் சிக்கல் இருப்பதாக தெரிவித்த அந்த புலனாய்வு அதிகாரி தான் எப்படியும் உதவுவதாக கூறினார்.

லண்டனுக்கு வழியனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்

இதனையடுத்து லண்டனுக்கான விமான பயண சீட்டுகளை பாலா தம்பதிக்கு எடுத்துக் கொடுத்ததுடன் விமான நிலையத்தில் தான் நிற்பதாகவும் கூறினார்.பயணச் சீட்டுகள் வேறு பெயர்களிலேயே பதியப்பட்டிருந்தன.இவற்றுடன் பாலா தம்பதி விமான நிலையத்திற்கு சென்ற போது பயணச் சீட்டுகளை வாங்கிய அதிகாரியொருவர் அதனை பரிசோதித்தார். தாம் வேறு பெயர்களில் பதிவாகியிருப்பதை அந்த அதிகாரி கண்டு பிடித்து விட்டாரோ என பாலா சிந்தித்தவேளை அந்த அதிகாரி சிரித்து விட்டு `பயணம் நல்லபடியாக அமையட்டும் பாலசிங்கம் அவர்களே' எனக் கூறியபோது பாலா தம்பதியினர் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர்.

ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்து விட்டு இறுதியாகவிருந்த குடிவரவு வழிக்கு சென்ற போது அங்கு மிகவும் கண்டிப்பான தோற்றம் கொண்ட அதிகாரியொருவர் பாலா தம்பதியின் கடவுச்சீட்டுகளை வாங்கி கடுமையாக பரிசோதித்ததுடன் பாலா தம்பதியை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்தார்.

அந்த உயரதிகாரி பின்னர் திரும்பி சற்று தள்ளி மறைவிடமொன்றில் நின்ற அந்த புலனாய்வு அதிகாரியை பார்த்தார். அவரிடமிருந்த தலையசைப்பு கிடைத்ததும் இருவரினதும் கடவுச் சீட்டுகளை திருப்பிக் கொடுத்து விட்டு உள்ளே செல்லுங்கள் எனக் கூறி வழியனுப்பி வைத்தார். பின்னர் எவ்வித சிக்கலுமின்றி பாலா தம்பதியினர் லண்டன் சென்றடைந்தனர்.

ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின் ஏற்பட்ட சமாதான நடவடிக்கைகளுக்காக பாலாவும் அடேலும் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டியேற்பட்டது.

பிரேமதாசா - பாலா சமாதான பேச்சு

1989 ஏப்ரல் 26 ஆம் திகதி லண்டனிலிருந்து வந்த பாலாவும் அடேலும் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மே 3 ஆம் திகதி வன்னியிலிருந்து ஹெலி மூலம் யோகி, திலகர், மூர்த்தி போன்றோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பிரேமதாசாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. பிரேமதாசாவுடனான பேச்சுக்களில் பாலா தீவிர ஆர்வம் காட்டினார். அதற்கு தூரநோக்கிலான பல காரணங்கள் இருந்தன.

பிரேமதாசாவுடனான பேச்சுக்களையடுத்து வன்னி சென்ற பாலா பிரபாகரனை சந்தித்து பேச்சுக்கள் தொடர்பாக விளக்கமளித்தார். இதன் பின்னர் அரசும் புலிகளும் போர் நிறுத்தம் அறிவித்தன. ஆனால், புலிகள் ஆயுதங்களை கையளிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது.

இந்தியப் படையை வெளியேற்ற பாலா நகர்த்திய காய்

பிரேமதாசாவுடனான பேச்சுக்களின் போது இந்தியப் படையை வெளியேற்றுவதில் பிரேமதாசா உறுதியுடனிருப்பதை பாலா புரிந்து கொண்டார். இந்தியப்படை வெளியேற வேண்டுமென்பதில் புலிகளும் உறுதியாகவிருப்பதால் பிரேமதாசாவை பாலா சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தியப் படையை வெளியேற்ற தாம் பூரண ஆதரவு தருவதாக பாலா கூறினார்.

இந்தியப் படையை வெளியேறுமாறு பிரேமதாசா கோரிக்கை விடுத்தார். அதற்கு ராஜீவ்காந்தி பதிலளித்து கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் புலிகளிடமிருந்த ஆயுதக் களைவு முடிவுறாததால் வெளியேற முடியாதெனக் கூறப்பட்டிருந்தது. இதனால் சினமடைந்த பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேறக் கோரி சட்டம் பிறப்பித்ததுடன் அச்சட்ட அறிக்கையை இலங்கையில் தங்கியிருந்த இந்தியப்படைத் தளபதிக்கு அனுப்பினார். ஆனால், அவரும் அதனை ஏற்கவில்லை.

இலங்கை அரசிடம் ஆயுதம் வாங்கிய பாலா

இந்நிலையில் முல்லைத்தீவு காட்டில் பிரபாகரனை இலக்கு வைத்து இந்தியப்படை உக்கிர தாக்குதலை நடத்தியது. எதிர்த்து போரிட்ட புலிகளிடம் ஆயுதங்கள் தீர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பில் அமைச்சராகவிருந்த ஹமீத்தை பாலா சந்தித்தார். இந்தியப் படையை எதிர்த்து போராட ஆயுத உதவி தேவையெனக் கோரினார்.

இது சிக்கலான விடயமென தெரிவித்த ஹமீத் பிரேமதாசா இணங்கினாலும் இராணுவம் இணங்காது என தட்டிக் காட்டினார். இதில் தனது ராஜதந்திரத்தை பாவித்த பாலா, இந்திய அமைதிப்படை இலங்கைக்கு எதிரி, எமக்கும் எதிரி அதனால் அவர்களை வெளியேற்ற இலங்கை அரசு உதவி செய்தால் எவரும் எதிர்க்கமாட்டார்களென கூறினார். மறுநாள் பாலாவை சந்திக்க ஹமீத்துடன் இராணுவ தளபதி ஆட்டிகலவும் வந்திருந்தார். இருவரும் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்க சம்மதம் தெரிவித்தனர். என்ன ஆயுதங்கள் தேவையென்ற பட்டியலையும் கோரினர்.

பிரபாகரனிடமிருந்து தேவையான ஆயுதப் பட்டியலை பாலா பெற்றுக் கொடுத்தார். ஒருவாரத்திற்குள் மணலாறில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மூலம் புலிகளுக்கு பெருந் தொகையான ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் இந்தியப் படையும் பெரும் தோல்வியில் வெளியேறியது.

பாலா கடும் சுகவீனம்

காலங்கள் நகர்ந்தோடிய நிலையில் 1998 ஆகஸ்ட் 27 ஆம் திகதியன்று பாலா திடீரென கடும் சுகவீனமுற்றார். பாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் நிலைமையை புரிந்து கொண்டனர். பாலாவின் இரத்த, சிறுநீர் மாதிரிகள் வேறு பெயர்களில் கொழும்புக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது, சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்தன.

இடது சிறுநீரகம் முற்றாக பாதிக்கப்பட்டதுடன் இரத்தத்தில் பொட்டாசியம், யூரியா ஆகியவற்றின் அளவுகள் ஆபத்தான நிலையை அடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாலாவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. வன்னியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் நிலைமை சிக்கலானது. நவீன வசதிகளைக் கொண்ட மருத்துவமனையில் பாலாவை சேர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

தமிழ் நாட்டுக்கு பாலாவை கொண்டு செல்ல முடியுமாகவிருந்த போதும் அங்கு புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டிந்ததால் அது ஆபத்தானதாகவேயிருந்தது. இதையடுத்தே நோர்வேயின் உதவியை நாடுமாறு பிரபாகரன் பணித்தார்.

நோர்ேயின் உதவியை நாடிய புலிகள்

இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சராகவிருந்த ஹமீத் நோர்வேயுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். நோர்வேத் தூதுவராகவிருந்த ஜோன் வெஸ்பேர்க் ஹமீத்தின் நண்பர். எதிர்கால சமாதான நடவடிக்கைகளில் பாலாவின் பங்கு முக்கியமானதென்பதால் அவரின் உடல்நலம் தேற நோர்வே உதவ வேண்டுமென ஹமீத் வேண்டுகோள் விடுத்தார். நோர்வேயும் இணங்கியது.

இதையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய நோர்வே பாலாவின் நோயை அறியுமாறு கேட்டுக்கொண்டது. இதற்கமைய கொழும்புக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி மருத்துவக் குழுவொன்றை வன்னிக்கு அனுப்பி பாலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தார். பாலாவை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டுமென பரிந்துரை செய்தது.

பாலாவின் உயிருக்கு நிபந்தனை விதித்த சந்திரிகா

மனிதாபிமான அடிப்படையில் பாலாவை வெளிநாட்டுக்கு அனுப்பி சிகிச்சை வழங்க நோர்வேயும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் ஜனாதிபதி சந்திரிகாவுடன் பேச்சுகளை நடத்தின. இது தொடர்பாக அரசுமட்டத்தில் நீண்ட மந்திராலோசனை நடத்தப்பட்டது. இக்குழுவில் அமைச்சர் கதிர்காமர் முக்கியமாக செயற்பட்டார். இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக பிரபாகரன் 9 போர்க் கைதிகளை விடுதலை செய்தார். ஆனால், அரசிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. செஞ்சிலுவைச் சங்கம், தம்மை கதிர்காமர் நம்பவில்லையெனக் கூறியது.

பாலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருந்தது. அரசு இரு மாதங்களின் பின்னர் பாலாவை வெளிநாட்டுக்கு அனுப்ப 5 நிபந்தனைகள் விதித்தது;

1. வட, கிழக்கில் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கக் கூடாது. சொத்துடைமைகளை அழிக்கக்கூடாது.

2. ஆகாய, கடல் மார்க்கமாக வட, கிழக்கிற்கு செய்யப்படும் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

3. நாடு முழுவதிலுமுள்ள அரசுடைமைகளை தாக்கியழிக்கக் கூடாது.

4. தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல போர்க் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

5. புலிகள் அமைப்பிலுள்ள 18 வயதுக்கு குறைந்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றே நிபந்தனை விதித்தது.

நிபந்தனைகளை ஏற்பதைவிட சாவதே மேல் என்ற பாலா

இராணுவ நோக்கை கொண்ட அரசின் நிபந்தனைகளை பாலா உடனடியாகவே நிராகரித்தார். இந்த நிபந்தனைகளை ஏற்பதைவிட சாவதே மேல் என பாலா உறுதியாகத் தெரிவித்தார். ஆனால், பாலாவை வெளிநாட்டுக்கு அனுப்புவதில் உறுதியாகவிருந்த பிரபாகரன் மாற்றுத் திட்டமொன்றை ஏற்பாடு செய்தார். இதையடுத்து முல்லைத்தீவுக்கு கப்பல் ஒன்று வரவழைக்கப்பட்டு, 1999 ஜூலை 23 ஆம் திகதி பாலா அனுப்பி வைக்கப்பட்டார். கரைக்கு அப்பால் தள்ளிநின்ற அக்கப்பலுக்கு பாலாவை கடற்புலிகளின் தளபதி சூசை தனது பாதுகாப்பில் அழைத்து வழியனுப்பி வைத்தார்.

தென் கிழக்காசிய நாடொன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட பாலாவுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. அங்கு கைது செய்யப்படும் ஆபத்து இருந்ததால் பாலாவும் அடேலும் தலைமறைவாகவே இருந்தனர். லண்டனுக்கான விசா காலாவதியாகிவிட்டதால் லண்டன் செல்ல முடியவில்லை. பின்னர் மிகுந்த பிரயத்தனத்தையடுத்து தென் கிழக்காசிய நாடொன்றில் வைத்து விசா வழங்க பிரிட்டன் இணங்கியது. இதையடுத்து பாலாவும் அடேலும் லண்டன் சென்றடைந்தனர்.

லண்டனில் பாலாவை சந்தித்த நோர்வே தரப்பினர் பாலாவுக்கு சிகிச்சையளிக்க விரும்பினர். இதனால் பாலாவை ஒஸ்லோவுக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பாலாவுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் பாலா சுகதேகியானார்.

மீண்டும் வன்னிக்கு வந்தார் பாலா

சிகிச்சையின் பின்னர் லண்டனில் தங்கியிருந்த பாலா, ரணில் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து, 2002 ஏப்ரலில் கடல் விமானம் மூலம் வன்னி இரணைமடுக் குளத்தில் வந்திறங்கினார். பாலாவை பிரபாகரன் நேரில் சென்று வரவேற்றார். இதன் பின்னர் ரணில் அரசுக்கும் புலிகளுக்கும், மகிந்த அரசுக்கும் புலிகளுக்குமென நடந்த பல பேச்சுவார்த்தைகளில் பாலா தலைமையேற்றார். பாலாவின் ராஜதந்திரங்களுக்கு முன்னால் அரச தரப்பினர் மூக்குடைபடுவதே பேச்சுவார்த்தைகளில் வழக்கமானதாகவிருந்தது.

மீண்டும் கடுமையாக சுகவீனமுற்ற பாலா

2006 பெப்ரவரியில் மகிந்தவின் அரசு தரப்பினருடன் ஜெனீவாவில் நடந்த முதல் சுற்றுப் பேச்சிலும் பாலாவே தலைமையேற்றார். ஆனால், அதன்பின் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பின்னர் இடம்பெற்ற பேச்சில் அவர் பங்கேற்கவில்லை.

கடந்த 30 வருடங்களாக சிறுநீரக நோயுடன் அவதிப்பட்ட பாலாவுக்கு இறுதியில் புற்றுநோயும் ஏற்பட்டு அவரின் மரணத்தை விரைவுபடுத்திவிட்டது.
நன்றி>தினக்குரல்

1 comment:

Anonymous said...

காலத்தை வென்றவன் பாலாஅண்ணா, உண்மைகள் என்றும் உறங்கது, டிக்ஸித் செய்த வேலையை, தற்போதைய கொள்கைவகுப்பாளர் செய்கிறார்கள். சூளைமேட்டில் இந்திய சிவில் வக்கீலை கொலை செய்த, முதலவது குற்றவாளி டக்கிளஸ்தேவானந்தாவை பாரதபிரதமரோடு கைகுலுக்கவைத்திருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். எண்ட சரவனா என்ன கொடுமை இது:-)