Wednesday, January 02, 2008

ஆலயத்தில் மகேஸ்வரன் கொல்லப்பட்டமை இந்துக்களின் உணர்வுகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணி: இந்து மாமன்றம் கண்டனம்!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொடூரமான வகையில் கொலை செய்யப்பட்டதையும் இந்த நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியை கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்திய பெரியார் சேர்.பொன்.இராமநாதனால் கட்டுவிக்கப்பட்ட புனித திருத்தலமான கொழும்பு சிறீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இந்த கொடூர சம்பவம் நடத்தப்பட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திருத்தலத்தின் புனிதத்தன்மைக்கு மாசு கற்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் நடந்துள்ள இந்து மக்களின் உணர்வுகளுக்கு சாவுமணி அடிக்கும் இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை சகலரும் வற்புறுத்த வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கடந்த வாரம் நடைபெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில், இலங்கையில் நாலாபகுதிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட, அங்கத்துவ சங்கங்களின் பேராளர்களால் இராணுவ நடவடிக்கைகளையும் பலத்தகாரச் செயல்களையும் கண்டித்து ஒருமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அது மாமன்றத்தின் பகிரங்க வேண்டுகோளாக விடுக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இத்துர்ப்பாக்கிய நிகழ்வு பிரபல்யமான இந்து ஆலயமொன்றில் நடந்திருப்பது உலகெங்கும் வாழும் இந்து மக்களுக்கு ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு மதத்தினரின் வழிபாட்டு தலத்தின் உள்ளே எவரும் ஆயுதபாணிகளாக செல்லக்கூடாது. அப்படிச் செல்வதை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கமும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு பொறுப்பானவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகல வழிபாட்டுத் தலங்களின் புனிதமும் பேணிப் பாதுக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

Sorrow and concerned are expressed
Siva