Saturday, December 29, 2007

டோராப் படகுகளுக்கு இணையானவை விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகள்: "லக்பிம"

கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்த அதிவேக தாக்குதல் படகுகள் 23 மி.மீ. பீரங்கிகளை கொண்டிருப்பதுடன், கட்டளைப் படகாகவும் செயற்பட்டு வருவதுண்டு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது.
"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

கடந்த புதன்கிழமை காலை 8:00 மணியளவில் பி-413 இலக்கமுடைய டோரா அதிவேக தாக்குதல் படகு, கடற்புலிகளின் படகுத் தொகுதியை நெடுந்தீவுக்கு தென்மேற்கு கடற்பகுதியில் அவதானித்தது. அந்தத் தொகுதியில் 16 கடற்புலிப் படகுகள் இருந்தன.

டோராப் படகுகள் தமது படகுகளை அண்மிப்பதை தவிர்ப்பதற்காக கடற்புலிகளின் படகுகள் கடற்கரையை அண்மித்தே காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடற்படையின் வடபிராந்திய கட்டளைப்பீடம் விழிப்பு நிலைக்குட்படுத்தப்பட்டது.

மேலதிக டோராத் தாக்குதல் படகுகள் அனுப்பப்படும் வரையிலும் கடற்புலிகளின் படகுகளை கண்காணிக்குமாறு பி-413 டோராவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலதிகமாக அனுப்பப்பட்ட படகுகளுடன் 12 டோராப் படகுகள் கடற்புலிகளுடன் மோதுவதற்கு தயாராகின. கடுமையான சமர் ஆரம்பமாகியது. அந்த சமரின் முன்னணியில் பி-413 படகே இருந்தது.

எனினும் டோராக்களின் படகுத் தொகுதியை ஊடறுத்துச் சென்ற கரும்புலிப் படகு ஒன்று பி-413 டோராவை நோக்கிச் சென்றது. ஆனால் அது சற்று முன்னதாகவே வெடித்து விட்டது. அந்த வெடிப்பதிர்வினால் டோராப் படகு செயலிழந்தது. அதேவேளை இரண்டாவது கரும்புலிப் படகு வேகமாக வந்து மீண்டும் ஒரு தடைவ மோதி வெடித்தது. அதன் பின்னர் பி-413 டோராப் படகு வெடித்துச் சிதறியது.

இதன் போது அந்தப் படகின் கட்டளைத் தளபதி லெப். கொமாண்டார் லலித் எக்கநாயக்கவும், 11 கடற்படையினரும் கொல்லப்பட்டு விட்டனர். கட்டளைத் தளபதியின் சடலமும், கடந்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு கடற்படை சிப்பாயின் சடலமும் மீட்கப்பட்டன.

எனினும் இரு கடற்படையினரை விடுதலைப் புலிகள் கைது செய்துள்ளதாக கடற்படையினரின் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தினருடனும் எந்தத் தரப்பும் தொடர்பு கொள்ளவில்லை.

இதனிடையே கடற்படையினரின் தேடுதல்களின் போது இரு கடற்படையினர் மீட்கப்பட்டனர். இந்த கடும் சமரின் போது இஸ்ரேலிய தயாரிப்பான மற்றுமொரு டோராப் படகும் சேதமடைந்தது. அது பின்னர் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.

பொதுவாக கடற்சமர்களின் போது கடற்புலிகளின் பெரிய தாக்குதல் படகான முராஜ் படகுகளே டோராக்களுக்கு இணையாக தாக்குதல்களை நெறிப்படுத்துபவை. இந்தப் படகுகளின் கடும் சமர்களுக்கு மத்தியில் உயர்வேகம் கொண்ட கரும்புலிப்படகுகள் இலகுவாக கடற்படையினரின் படகை அண்மித்து விடும்.

கரும்புலிகளின் படகுகள் 200 குதிரைவலு வேகமுடைய இயந்திரங்களை உடையவை. எனவே அவை மிக உயர் வேகமுடையதுடன், அலைகளுக்கு மத்தியில் வெளியில் தெரிவதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். எனவே கடற்படையினர் அவற்றை கண்டறிந்து அழிப்பது கடினமானது.

தற்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் தற்கொலைப் படகுகள் ஸ்ரெல்த் வகையைச் சேர்ந்தவை. அவற்றை ராடார் திரைகளில் கண்டறிவது கடினமானது. அவற்றின் வெடிக்கும் முனை முன்புறம் உள்ளதனால் கடற்படைப் படகின் அடிப்பகுதியில் மோதியே அவை வெடிப்பதுண்டு.

விடுதலைப் புலிகளின் முராஜ் அதிவேக தாக்குதல் படகில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். அதுவே கட்டளைப் படகாக செயற்படுவதுண்டு.

இந்த சமரில் வான் படையினரின் இரு எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகளும், கிபீர் தாக்குதல் வானூர்திகளும் இணைந்து கொண்டன. கடற்படையினரின் அதிவேக தாக்குதல் டோரா படகானது (பி-413) அலுமினியத்திலான அடிப்பகுதியையும், அதிக வேகத்தையும் கொண்ட தாக்குதல் படகாகும்.

கடந்த 13 வருடங்களில் கொழும்பு டொக்கியாட் நிறுவனம் இத்தகைய 48 படகுகளை கட்டியிருந்தன. அவை சிறிலங்கா மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகைப் படகுகள் கரையோர சுற்றுக்காவல், கண்காணிப்புப் பணிகளுக்கு எனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தாக்குதல் படகாகும். இது 45 தொடக்கம் 53 நொட்ஸ் வேகமுடையது. 24 மீற்றர் நிளமான இந்த படகு 1630 கி.வற்ஸ் கொண்ட இரட்டை நீரூந்து விசை இயந்திரத்தைக் கொண்டது. இது முன்னைய டோராப் படகுகளை விட நவீனமானது. 12 கடற்படையினர் பணியாற்றும் இடவசதியும் அதில் உண்டு.

தற்போது கடற்படையினரிடம் அதிவேக தாக்குதல் படகு-III (UFAC III and IV), அதிவேக தாக்குதல் படகு-IV என்பன உண்டு. அவற்றில் 23 மி.மீ. பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது சமரின் போது அதிகூடிய வேகமான 53 நொட்ஸ் வேகத்தை எடுக்கக் கூடியதுடன் அதன் பல செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படகு சமரில் சேதமடைந்தால் அவசரமாக கட்டி இழுத்துச் செல்லும் வசதிகளையும் கொண்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: