Tuesday, December 18, 2007

தமிழர்களுக்கான விடுதலை வெகுவிரைவில் கிடைக்கும்: டியட்றி மக்கென்னல்!


தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருவதால் அவர்களுக்கான விடுதலை விரைவில் கிடைக்கும் என்று அனைத்துலக மனித உரிமைச் செயற்பாட்டாளரான டியட்றி மக்கென்னல் அம்மையார் தெரிவித்துள்ளார்.

டியட்றி மக்கென்னல், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு மனித உரிமைகள் ஆர்வலர்.
உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் அவர், பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம் அப்பணியை ஆற்றி வருகின்றார்.
மனித உரிமைகளுக்கான அனைத்துலகக் கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைக்கான அனைத்துலக நிலையம் ஆகியவற்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் அவர் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் அனைத்துலக வேலைத்திட்டப் பணிப்பாளராகவும் உள்ளார்.

அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த அவர், அங்கு வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" வார ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்:

கேள்வி: நீங்கள் ஐரிஷ் இனத்தவர். இருந்தும் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கின்றீர்கள். உங்களை இதற்குத் தூண்டியது எது?

பதில்: நான் ஐரிஷ் இனத்தவர் எனப்படுவது தவறு. எனது தந்தையார் மாத்திரமே அயர்லாந்து நாட்டவர்.

1980-களின் பிற்பகுதியில், நான் ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் அகதிகளைச் சந்தித்தேன். அவர்களுடைய கதைகளை, அனுபவங்களைக் கேட்டறிந்தேன். அதற்கு உடாக தமிழர்களுடைய வரலாறு, நடப்பு விவகாரங்கள என அதிக விடயங்களை அறிய முடிந்தது.

சந்திரிகா காலப் பகுதியில் மனித உரிமைகள் மீறல் நிலைமை மிக மோசமாக இருந்தது. தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் பங்குகொண்ட அனுபவம் காரணமாக, தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் அதற்கும் என்னால் பாரிய வித்தியாசத்தை அவதானிக்க முடியவில்லை.
இதனால் நானும் என்போன்ற பலரும் தமிழ் மக்களுக்காக ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க விரும்பினோம்.
கேள்வி: இது உங்களிந் ஈடுபாட்டின் ஆரம்பம். நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்?

பதில்: 1989 இல் சிறிலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியும் வாய்ப்பு முதன் முதலில் எனக்குக் கிட்டியது. ஆனால், 1994 இலேயே எனக்கு தமிழர் விவகாரத்தில் ஆழமாக ஈடுபட முடிந்தது.

1989-களில் சிறிலங்காவின் தென் பிராந்தியத்தில் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக இருந்தது. சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அப்போது அறிந்து கொள்ள முடிந்தது. ஆயிரக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதேவேளை வடக்கின் நிலைமையையும் அவதானிக்க முடிந்தது.

என்றாலும் 1995 ஆம் ஆண்டிலேயே நான் முதன்முறையாக வடக்கு-கிழக்கிற்குச் சென்றேன். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு முன்னரேயே சென்றுள்ளேன்.

1995 ஆம் ஆண்டு, போராட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, யாழ்ப்பாணம் செல்ல விரும்பினேன். போராட்டத்துக்கான காரணத்தை நியாயத்தை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள நான் விரும்பினேன். கொழும்பில் நின்று கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வடபகுதிக்குச் செல்ல முயற்சித்தேன். ஆனாலும், எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

என்றாலும் 95 ஓகஸ்டில் மட்டக்களப்பு செல்லும் வாய்ப்புக்கிட்டியது. அப்போது, மைலந்தனைப் படுகொலையில் உயிர்தப்பியவர்களைச் சந்திக்க முடிந்தது. வாள் வெட்டுக்கு இலக்கான பலரோடு உரையாட முடிந்தது. அவர்களின் மனோ ரீதியான காயங்களை ஆற்ற முயற்சி செய்தேன். அவர்கள் மிகவும் வறுமையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருந்தார்கள். அவர்களுக்கு நான் உதவி செய்ய விரும்பினேன்.

மீண்டும் அந்த மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானதன் பின்னர் 2003 ஆம் ஆண்டிலேயே கிட்டியது. அப்போதும் கூட அவர்களின் நிலையில் பெரிதும் மாற்றமில்லை.

1995 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழர் மனித உரிமைகள் மையத்தில் இணைந்து பணிபுரியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இக்காலப் பகுதியில் ஜெனீவாவில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பரப்புரைப் பணியில், தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தலைமையிலான குழுவில் இணைந்து செயற்பட்டேன்.
அதன் மூலம் எனக்கு பரவலான பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே பணிபுரிய முடிந்தது.

ஓவ்வொரு முறையும் தமிழ் மக்களைச் சந்திக்கும் போது அவர்களின் வரலாற்றைப் பற்றியும், துயரங்களைப் பற்றியும், திடசித்தத்தைப் பற்றியும் மென்மேலும் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு நியாயம் கிட்டவேண்டும். அவர்களின் குரல் உலக அரங்கில் கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டும் என விரும்பினேன்.

இதனால், அனைத்துலக சமூகத்தில் தமிழர்களின் நியாயத்தை எடுத்துரைப்போரில் ஒருவராக நானும் இருக்க வேண்டும் என விரும்பினேன். தமிழர் மனித உரிமைகள் மையம் ஏனைய நிறுவனங்களோடு இணைந்து பல பணிகளைச் செய்து வருகின்றது.

கேள்வி: ஈழப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரை, மனித உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் குறிப்பிடுவதைப் போன்று மனித உரிமைகள் தனிநபருக்கானவை. பாதூக்கப்பட வேண்டியவை. அனைத்துலக ரீதியானவை.

உலகின் ஏனைய விடுதலைப் போராட்டங்களைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கும்போது நீதி நிலைநாட்டப்பட நீண்டகாலம் எடுத்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் தேசியத்தை அங்கீகரிப்பதன் ஊடாக தேசங்கள் பிறந்துள்ளன. கிழக்குத் தீமோர் இதற்கு நல்லதொரு உதாரணம்.

கிழக்குத் தீமோர் மக்களுக்காக இங்கிலாந்து மக்கள் போராடிய போது அவர்களுக்கு விடுதலை கிட்ட நீண்ட நாள் சென்றது. ஆனால் அந்த மக்கள் சொந்தமாகப் போராடிய போது அவர்களால் தமது சொந்தச் சுதந்திரத்தைப் பெறமுடிந்தது.

தமிழர்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு சுதந்திரம் என்றோவொரு நாள் கிடைத்தே தீரும். அது வெகு விரைவில் கிடைக்கும் என நான் நம்புகின்றேன். ஏனெனில் தமிழ் மக்கள் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் புத்திசாலித்தனமாக முழு வளங்களையும் பாவித்துப் போராடி வருகின்றனர்.

கேள்வி: தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களாக உள்ள போதிலும் ஏன் அனைத்துலக சமூகம் இன்னமும் சிறிலங்கா அரசின் பக்கம் உள்ளது? அல்லது சிறிலங்கா அரசின் பக்கமே அவை உள்ளதைப் போல் தெரிகின்றது?

பதில்: அனைத்துலகம், சிறிலங்காவின் பக்கம் உள்ளதுபோல் தெரிகின்றது என நீங்கள் கூறியதே சரி. ஏனெனில், தமிழ் மக்களின் விடயத்தைக் கேட்கும், உண்மையைப் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்னவெனில், ஐ.நா. சபை போன்ற அனைத்துலக அரங்குகளில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் என்றொரு வரையறை கவனத்தில் எடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எட்டப்படுகின்றன.

சிறிலங்காவைப் பொறுத்தவரை, அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையிலேயே பல நாடுகள் ஆதரவு வழங்குகின்றன. உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வெளியாள் ஒருவர் மானபங்கப்படுத்த முனைகையில் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருமே அவரைக் காப்பாற்ற விளைவர்.

ஐ.நா.வைப் பொறுத்தவரை அது ஒரு நாடுகளின் கழகம். ஆனாலும், அரசியல் யதார்த்தம் என்பது மிகவும் சிக்கலானது. இந்த நாடுகளில் மனிதர்களுக்கு உரிமைகள் உள்ளமையை ஏற்றுக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்ல நாடுகளுக்கும் கூட சில சிறப்புரிமைகள் அடிப்படை உரிமைகள் உள்ளன.

நீங்கள் ஆரம்பத்தில் பல நாடுகள் சிறிலங்காவின் பக்கம் நிற்பது போல் தெரிகின்றது எனக் கூறியமை சரியே. இன்று பலர் உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். அது தவிர இப்போது ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் சில கூட தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. தமிழர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்குமாறு சிறிலங்காவை வேண்டுகின்றன.

உதாரணமாக கடந்த மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் பல நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவேண்டும் என விரும்பின. சிறிலங்காவில் ஐ.நா. நிரந்தரக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என அவை கோரின.

நிலைமை திருப்திகரமானதாக இல்லாவிட்டாலும், ஒரு மாற்றம் அவதானிக்கப்படுகின்றது.

மறுபுறம், தமிழ் மக்கள் தமக்கெதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக அரங்கில் எடுத்துரைக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது.

கேள்வி: லூயிஸ் ஆபரின் அண்மைய பயணம் இது விடயத்தில் செல்வாக்குச் செலுத்தும் என நினைக்கிறீர்களா?

பதில்: ஏதாவது நடக்கும் என நாங்கள் எதிர்பார்ப்போம். உண்மையில் அவரின் சிறிலங்கா பயணம் முக்கியமானது. அவர் தனது அறிக்கையில் தான் கிளிநொச்சிக்குச் செல்ல விரும்பிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறினார். இது போன்றே ஆழிப்பேரலையின் பின் கோபி அனான் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பிய போதிலும் அனுமதிக்கப்படவில்லை.

திருமதி ஆர்பரும் அதனையே கூறுகிறார். இது உலகம் முழுதும் உள்ள மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அவருடைய பயணத்தின் விளைவுகளை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். அவரின் யாழ். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாத மக்களுடன் கதவுக்கூடாக கைகளைப் பிணைத்தவாறு அவர் நிற்பதைக் காணமுடிந்தது. அந்த வேளையில் அவரின் மனத்துயரத்தை முகத்தில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அவரின் பயணம் என்ன விளைவைத் தரப் போகின்றது என்பதைப் பார்த்திருக்கின்றோம். அனைத்துலக சமூகத்தின் ஒவ்வொரு செயற்பாடும் அவருக்குத் தைரியத்தைத் தரும்.

கேள்வி: இலங்கைத் தீவிற்குச் சென்று தமிழ் மக்களைச் சந்தித்து விட்டு வந்தவர் நீங்கள். அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: அது ஒரு அற்புதமான அனுபவம். வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களை நேரில் சந்தித்தமையை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகின்றேன். குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் வாழும் மக்களைச் சநதித்ததை மறக்க முடியாது. வன்னியில் "செஞ்சோலை" சிறுவர் இல்லம், "காந்தரூபன்" அறிவுச்சோலை, "செந்தளிர்" என அப்பகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் செல்ல முடிந்தது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்கள், பெண்கள் ஆகியோரையும் சந்தித்தேன். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றும் பெண்களைச் சந்தித்த போது தமிழ்ப் பெண்கள் எத்துணை மனவுறுதி உடையவர்கள் என்பதை அவதானிக்க முடிந்தது. அவர்களின் மனவுறுதி முறியடிக்கப்படக் கூடியதல்ல. எத்தனை இழப்புக்களைச் சந்தித்த போதிலும் எத்தனை தரம் இடம்பெயர்ந்த போதிலும் எத்தனை சவால்களை எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துவண்டு விடவில்லை.

வன்னியில் மக்கள் எவ்வளவு திடவுறுதியுடன் உள்ளார்களோ அதற்குச் சற்றும் சளைத்துவிடாத திடவுறுதியுடனேயே யாழ். குடாநாட்டில் வசிக்கும் மக்களும் உள்ளனர். இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அவர்கள் உள்ள போதிலும் அவர்கள் மனம் தளரவில்லை. அவர்களின் மனோதிடம் பாராட்டத்தக்கது.

கேள்வி: அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் பரப்புரை முயற்சிகள் போதாது என ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அது எவ்வாறு மேலும் காத்திரமாக முன்னெடுக்கப்பட முடியும்?

பதில்: ஒருவிதத்தில் பார்த்தால் தமிழ் மக்களின் பரப்புரை போதாது எனக் கூற முடியாது. ஏனெனில், பல மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. பல பாரிய அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டி வருகின்றன. பல நாடுகள் கூட இந்த விவகாரத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளன. பல பிரமுகர்கள், ஐ.நா. சிறப்புத் தூதுவர்கள் இதைப் பற்றி தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களால் நடாத்தப்படும் மனித உரிமை அமைப்புக்கள் பலம் பொருந்தியவையாக உள்ளன. அவைகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழி சமைத்துள்ளன.

நாம் எப்போதும் அதிகமாக நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால் பரப்புரை முயற்சிகள் போதாதது போன்று எமக்குத் தென்படலாம். இந்த வகை வேலைத்திட்டத்துக்கு அர்ப்பணிப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கு நோக்கிய வேலைத்திட்டம், நன்னடத்தை, தெளிவு என்பவை தேவைப்படுகின்றது.

கேள்வி: மத்தியப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் தேவை என்கிறீர்களா?

பதில்: நான் தமிழர் இல்லை. ஆனாலும் நான் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு முழு மனதான ஆதரவை வழங்குகின்றேன். ஏனெனில் நான் அதனைப் புரிந்து கொண்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு வழிநடத்தப்பட வேண்டும் என நான் கூறுவது பொருத்தமாயிராது. என்னால் முடிந்த வேலையை என்னுடைய கொள்ளளவிற்கு ஏற்ப, எனக்குப் பணிக்கப்பட்ட அளவில் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ப முடிந்தளவு வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், சிறப்பாகப் பணியாற்றக்கூடிய ஒரு சிலர் அப்பணியை ஆற்றாமல் இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: உண்மையில் ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்ய முடியும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் மனித உரிமைகள் விடயத்தில் அக்கறை உள்ளது. நாம் ஒவ்வொருவரும் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களே.

நான் நினைக்கின்றேன். லூயிஸ் ஆர்பரின் பயணத்தின் போது சிறிலங்காவில் வாழும் ஒவ்வோரு தமிழரும் தமது உணர்வை வெளிப்படுத்த முனைந்தார்கள். வெளிப்படுத்தினார்கள். இதற்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழர்களும் ஏதொவொரு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

பல நாடுகளிலே நாடாளுமன்ற விவாதங்கள் நடந்ததை, பல பிரமுகர்கள் சிறிலங்காவுக்கு பயணம் செய்ததை நாம் கண்டுள்ளோம். புலம்பெயர் தமிழர்கள் தமது அரசியல் பிரதிநிதிகளிடம் தமிழர் துயரத்தை எடுத்துரைத்ததன் விளைவே இது. அவர்கள் நிலைமைகளை விளக்கியதுடன் நேரில் சென்று பார்வையிடுமாறு கேட்டும் வருகின்றனர்.

உண்மையிலே துயருறும் மக்களுடன் ஆத்மாத்ம ரீதியில் நாம் பிணைக்கப்பட்டிருப்போமானால் நாம் நிச்சயமாக ஏதாவது செய்தே ஆவோம். ஏனெனில் அவர்களின் துயரத்தில் இருந்து தனித்து வெளியே வந்து எம்மால் இருக்க முடியாது. அவர்களின் போராட்டத்தில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. ஏனெனில் நாம் அவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளோம்.

கேள்வி: தமிழ் மக்கள் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: இது வரவேற்கப்படக்கூடிய முடிவு. ஏனெனில் நிறவெறித் தென்னாபிரிக்காவிற்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தில் பெருவெற்றி கிட்டியது. அந்தப் போராட்டத்தில் நானும் பங்கு கொண்டிருந்தேன்

புறக்கணிப்பு மிகப் பெறுமதியான ஆயுதங்களுள் ஒன்று. அது வரவேற்கப்புடக்கூடியதே.

கேள்வி: இறுதியாக, புலம்பெயர் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: முதலாவது கூறவிரும்புவது "அச்சமில்லை".

எந்தவொரு விடயத்திலும் ஈடுபடும் மக்களைத் தடுத்துவிட எதிரி பாவிக்கும் ஆயுதம் அச்சமூட்டுதலே. எனவே அச்சமடையாதீர்கள். நிமிர்ந்து நில்லுங்கள். மற்றவரோடு உரையாடுங்கள். புதிய வழிவகைகளைக் கண்டறியுங்கள். தைரியமாய் இருங்கள். நாம் நடக்கும் பாதையில் எமக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கானோர் நடந்துள்ளனர் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

மேற்குலகில் வாழும் எமக்கு பல ஜனநாயக உரிமைகள் உள்ளன. எனவே நாம் அஞ்சத் தேவையில்லலை. நிங்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உங்களால் முடிந்த அனைத்தையும் துயருறும் உங்கள் சகோதரர்களுக்காகச் செய்யுங்கள்.

இந்தச் செயற்பாடுகளின் போது உங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடியவர்களை உங்களால் கண்டறிய முடியும். அயலவர்கள், அரசியல் வாதிகள் எனப் பலரை நீங்கள் ஈர்க்க முடியும். நீங்கள் விடயத்தைச் சரியாகச் செய்வீர்களானால் உங்களுக்கு உதவப் பலர் முன்வருவர்.

பனிக்காலத்தில் மரக் கிளைகளில் பனித் துகள்கள் விழுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இறுதியாக விழும் ஒரு சிறு துகளே மரக் கிளையை உடைத்து விடுகின்றது.

எனவே உங்களாலும் முடியும். அதற்கான வளம் உங்களிடம் எள்ளது. அது தவிர உங்களுக்கு ஒரு அற்புதமான தலைமைத்துவமும் கிடைத்துள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: