Friday, December 21, 2007

உச்ச நீதிமன்ற தீப்பை அவமதிக்கும் ஜெயலலிதா!!!

புலிகளை ஆதரித்து பேசுவது குற்றமல்ல என்னும் நீதிமன்ற தீர்ப்பை ஜெயலலிதா அவமதிக்கிறார்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம் வரை தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்னரும் அந்தத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்கிறார்.


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் அவரது அறியாமையையே காட்டுகின்றது. இவ்வாறு பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை ஆதரிப்பதில் தவறில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார். பொடாச் சட்டத்தின் கீழ் என்னையும் மற்றும் தோழர்களையும் ஜெயலலிதா அரசு கைது செய்தது எங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய போது அதற்கு எதிராக அப்போதைய அ.தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்து எங்களுக்கு அளிக்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு அரசியல் தலைவர் அரசியல் கருத்துக்களை கூட அவர் கூறக் கூடாது என்கிறீர்கள். பொடாச் சட்டத்தைப் பயன்படுத்தித் தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள்.

இதுபோல் பொடாச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதால்தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பொடாச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் எங்களது விசாரணை தொடரும் என எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பாராளுமன்றமும்பொடாச் சட்டத்தைத்திரும்பப் பெற்றது. விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவதோ எழுதுவதோ குற்றமல்ல என பொடா மறு ஆய்வுக் குழு தீர்ப்பளித்து எங்கள் மீதான பொடா வழக்கை திரும்பப்பெறுமாறு ஆணையிட்டது.

மேலும் ஜெயலலிதா ஆட்சியில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் எழுதியதாகவும் என்மீது திண்டுக்கல், கொடைக்கானல், திருச்செந்தூர், ஆலந்தூர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் நான் விடுதலை செய்யப்பட்டேன். உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம்வரை விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல எனத் தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்புகளை மதிக்க மறுக்கும் ஜெயலலிதாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதலமைச்சராக இருந்த ஒருவர் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமலும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் புரிந்து கொள்ளாமலும் தொடர்ந்து பேசி வருவது அறியாமையின் வெளிப்பாடாகும் என்றார்.
நன்றி>தமிழ்வின்

1 comment:

Great said...

நல்ல பதிலடி!!!!!!!!