Tuesday, December 18, 2007

பணியாளர் படுகொலை: அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!!!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பருத்தித்துறை கிளைத் தலைவர் சூரியகாந்தி தவராஜா சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறைறயினரால் படுகொலை செய்யப்பட்டதனை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலக செம்பிறைச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபயசிங்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டப் பணியாளரான சூரியகாந்தி தவராஜா (வயது 43) அவரது வீட்டிலிருந்து கடந்த 14 ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது சடலம் கடந்த 16 ஆம் நாள் கைதடியில் மீட்கப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளராக தவராஜா பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பருத்தித்துறைக் கிளையின் தலைவராக பணியாற்றி வந்தார்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது மிகச் சிறப்பாக செயற்பட்டமைக்காக தவராஜா மிகச்சிறந்த பணியாளர் விருதையும் வென்றிருந்தார்.

அவரது படுகொலை செய்தி அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு ஜூன் முதலாம் நாள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் பணியாளர்கள் இருவர் பயிற்சிநெறியில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்தபோது கொழும்பு தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை மற்றுமொரு மிலேச்சத்தனமான செயல்.

மோதலில் ஈடுபடும் இருதரப்பும் மனிதநேய பணியாளர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உடனடி விசாரணைகள் நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: