Thursday, December 27, 2007
சிறீலங்கா அமைச்சரின் மண்டை உடைந்தது, அமைச்சர் நைய்ய புடைக்கப்பட்டார்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா அட்டகாசம் .
சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபன செய்திப்பிரிவு அலுவலகத்திற்குள் இன்று வியாழக்கிழமை காலை அத்துமீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரை கடுமையாகத் தாக்கியதையடுத்து அங்கே பெரும் களேபரம் வெடித்தது.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற அமைச்சர் மேர்வின் சில்வா பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியவாறு ரூபவாஹினி கூட்டுத்தாபன நிறுவனத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த மேர்வின் சில்வாவும், அவரது குழுவினரும் அங்கிருந்த செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அது மட்டுமன்றி மேர்வின் சில்வாவின் குழுவினர் செய்திப் பணிப்பாளரான ரி.எம்.ஜி.சந்திரசேனவை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர். எனினும் சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்த ரி.எம்.ஜி சந்திரசேனவை மீண்டும் கடுமையாகத் தாக்கி ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவரின் கட்டுப்பாட்டு அறையை நோக்கி இழுத்துச் சென்றனர்.
மேர்வின் சில்வாவுடன் சேர்த்து குடு குழுவைச் சேர்ந்த பலரும் அங்கு முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகியும் இருந்தனர்.
மேர்வின் சில்வாவின் பகிரங்க மன்னிப்பு கேட்காத பட்சத்தில் அவரை விடுவிக்கப் போவதில்லை என்று பணியாளர்கள் உறுதியாக நின்றதால் அங்கே பதற்றமும் இழுபறியும் அதிகரித்தது.
சுமார் மூன்று மணி நேரமாக அங்கு பெரும் களேபர நிலை இருந்ததால் அங்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேர்வினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயற்சித்த போதும் பணியாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் மேர்வின் சில்வாவை பலவந்தமாக பணியாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காவல்துறையினர் அவரது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்தனர்.
அப்போது மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவினர் மீதும் அங்கிருந்த பணியாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் மேர்வின் சில்வா தலையில் காயமடைந்தார். அவர் மீது சிவப்பு நிறத் திரவத்தாலும் பணியாளர்கள் வீசினர். அவரது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. காவல்துறையினர் அங்கிருந்த மேர்வின் சில்வாவை அழைத்துச் சென்ற பிறகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்பட்ட களேபரம் முடிவுக்கு வந்தது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேர்வின் சில்வா கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஊடக நிறுவனங்களும் மேர்வினின் இந்நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் அவருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.
அரசாங்கம் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
மேர்வின் சில்வா இதற்கு முதல் மேலும் பல ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தியிருப்பதாக சுதந்திர தேசிய ஊடக பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
படங்கள்: ஏ.எஃப்.பி.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment