-தினத்தந்தி-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொல்ல தூதர் உத்தரவிட்டார் என்று அமைதிப்படை தளபதி கூறியதை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். அமைதிப்படை தளபதி சொல்வதில் உண்மை இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தளபதி திடுக்கிடும் தகவல்
மறைந்த ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை தளபதியாக மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் இருந்தார். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
இந்நிலையில் ஹர்கிரத் சிங், "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
அதில், கடந்த 1987-ம் ஆண்டில் இந்திய அமைதிப்படைக்கு நான் தலைமை வகித்த போது, இலங்கைக்கான அப்போதைய இந்திய தூதர் ஜே.என்.தீட்சித் எனக்கு போன் செய்து, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொன்று விடுங்கள். இது பிரதமர் ராஜீவ்காந்தியின் உத்தரவு என்று தெரிவித்தார். ஆனால் நான் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்து விட்டேன் என்று ஹர்கிரத் சிங் கூறி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜீவ் செயலாளர் மறுப்பு
இந்த நிலையில் அமைதிப்படை தளபதியின் இந்த குற்றச்சாட்டை, ராஜீவ்காந்தியின் செயலாளராக இருந்த ஜி.பார்த்தசாரதி மறுத்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, பிரதமர் அலுவலகத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களை நான் தான் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் அமைதிப்படை கமாண்டர்களையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு பல முறை சென்று இருக்கிறேன். அப்போது திறமையின்மை காரணமாக அமைதிப்படை தளபதி பொறுப்பில் இருந்து ஹர்கிரத் சிங் நீக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
ராணுவ கமாண்டர்கள் மற்றும் அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசிய போது, ஹர்கிரத் சிங் கூறி இருப்பது போல உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். பொதுவாக இதுபோன்ற உத்தரவுகள் தூதர் மூலம் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் மேலும் கூறினார்கள்.
ஹர்கிரத் சிங் புத்தகம் வெளியாகி உள்ள நேரம், கேள்வியை எழுப்புகிறது. அவர் கூறியதை யாரும் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு அதிகாரி ஜி.பார்த்தசாரதி தெரிவித்தார்.
இவர் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றி உள்ளார்.
மூத்த ராணுவ அதிகாரி
இதற்கிடையே இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தளபதியாக பணியாற்றியவரும், இலங்கையில் இருந்த அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த தலைமை தளபதியாக பதவி வகித்தவருமான, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தீபிந்தர் சிங்கும், ஹர்கிரத் சிங் கூறியதை நிராகரித்து உள்ளார்.
ஹர்கிரத் சிங் கூறி இருப்பது முற்றிலும் அர்த்தமற்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் குறி வைக்கப்படவில்லை. ஒருவேளை ஹர்கிரத் சிங் கூறியது போல ஏதாவது உத்தரவு வந்து இருக்குமானால், அதுபற்றி எனக்குத்தான் முதலில் தெரிய வந்து இருக்கும் என்று தீபிந்தர் சிங் தெரிவித்தார்.
நன்றி: தினத்தந்தி
Sunday, December 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நெருப்பு இல்லாமல் புகையுமா?
என்னமோ நடந்துள்ளது அந்த ஈழ மண்ணில் இல்லை என்றால் இந்தியாவின் உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது என நன்கு உணர்ந்த பிரபாகரன்...ராஜீவ் காந்தி யை கொல்ல துணிந்து இருக்க மாட்டார்.
நீயா? நானா? போடியில் ஒருவர் வீழ்ந்தபட்டுள்ளார்...
Post a Comment