தமிழ்நாட்டு மீனவர்கள் மீது வேண்டுமென்றே சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"பாக்கு நீரிணையில் ஒருபோதும் சிறிலங்கா கடற்படை வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. பன்னாட்டு கடல் எல்லையில் சிறிலங்கா கடற்படைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கின்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய மீனவர்கள் வந்து மாட்டிக் கொள்கிறார்கள்.
மேலும் மீனவர்கள் குற்றம் சாட்டுவது போல சிறிலங்கா கடற்படைப் படகுகள் ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்கு உள்ளே வந்து இந்திய மீனவர்களை தாக்கியது இல்லை என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பொறுப்பாளர் கொமடோர் வேன் ஹேல்டரென் கூறியதாக பத்திரிகைகளில் வெளியாகி உள்ள நியாயப்படுத்த இயலாத, உண்மையில்லாத, பொறுப்பற்ற கருத்துக்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடற்படையினர் இவ்வாறு சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டும், கருத்துக்களை வெளியிட்டும் வருவது மிகுந்த கவலையை அளிக்கிறது.
அவர்கள் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார்களா? அல்லது சிறிலங்கா கடற்படைக்காக பணியாற்றுகிறார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
சிறிலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய அரசே நாடாளுமன்றத்தில் பல முறை ஒப்புக்கொண்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்ட நோக்கத்துடன், இந்தியா செயற்படுவதும்,
இந்திய கடற்படை அதிகாரிகள், எல்லையை மீறி கருத்துக்களை வெளியிட்டு சிறிலங்காவை ஆதரிப்பதும் எதைக் காட்டுகிறதென்றால்,
நேருவால் வகுக்கப்பட்டு,
இந்திரா காந்தியால் செயற்படுத்தப்பட்ட
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதோ என்பதைத்தான் காட்டுகிறது.
அதைவிடக் கொடுமை, இந்திய கடற்படையினர் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொண்டது இல்லை.
ஒரு முறையேனும் சிறிலங்கா கடற்படைக்கு அவர்கள் எச்சரிக்கை கூட விடுத்ததும் இல்லை.
எனவே,
சிறிலங்கா படையினருக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சிறிலங்கா வான்படைக்கு வழங்கிய ராடார்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தங்கள் எல்லையை மீறிச் செயற்பட்டு வருகின்ற இந்திய கடற்படை அதிகாரிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி<புதினம்.
Sunday, December 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment