Sunday, December 16, 2007

சிறிலங்காவைத் தவிருங்கள்: ஐ.நா. தனது பணியாளர்களுக்கு எச்சரிக்கை!!!

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாக சிறிலங்கா மாற்றம் பெற்றுள்ளதனால் அதனைத் தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உலகு எங்கும் உள்ள தனது 13,000 பணியாளர்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா.வின் அனைத்துலக பொதுச் சேவைகள் பாதுகாப்பு மற்றும் சுயாதீன பணியாளர் அமைப்பு அடுத்த வாரம் வெளியிடவுள்ள அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு மிகவும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மீதான அண்மைக்காலத் தாக்குதல்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பன ஐ.நா.வின் பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதனைப் பாதித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் அண்மைக்காலச் சம்பவங்களை நோக்கும் போது அது சுயாதீன மற்றும் அனைத்துலக பொதுச் சேவைகளின் நடைமுறைகளை மீறி வருவதாகவே தென்படுகின்றது. தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மீதான தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து வருவது ஐ.நா.வின் செயற்பாடுகளைப் பாதித்து வருகின்றது.

உதவி நிறுவன அமைப்புக்களுக்கும், பணியாளர்களுக்குமான இணைந்த செயற்பாடுகளின் அடிப்படை உரிமைகளும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தமது பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் மெதுவாகவே ஐ.நா.வின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதும் கவலை தருகின்றது.

ஐ.நா. சபை, அதன் நிதி மற்றும் திட்டமிடல் அமைப்புக்கள் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அரசு சுமத்தி வருகின்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அமைதியாக நடைபெற்ற பேரணியில் யுனிசெஃப் உறுப்பினர்கள் பங்குபற்றியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இரு பணியாளர்களின் படுகொலைகளை அனைத்துலக சமூகமும், எல்லா ஐ.நா. அமைப்புக்களும் கூட கண்டித்திருந்தன. ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பன் கீ மூனும் அதனைக் கண்டித்ததுடன், இது ஒரு மோசமான படுகொலை எனவும் சிறிலங்காவில் வாழும் மக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பாக தான் ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அனைத்துலக பொதுச் சேவையாளர்கள் என்ற தமது நிலைக்கு பாதிப்புக்கள் எற்படாதவாறு ஐ.நா.வின் பணியாளர்கள் நடுநிலை வகிப்பதுடன் நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியிருக்கவும் வேண்டும்.

எனினும் அமைதியான அந்தப் பேரணிக்கு அரசாங்கத்தின் இந்த பதில் நடவடிக்கை பொருத்தமற்றது.

ஐ.நா.வையும், அதன் பணியாளர்களையும் குறிவைத்து தாக்குவதனை விட்டுவிட்டு இந்த ஆண்டு கடத்திப் படுகொலை செய்யப்பட்ட இரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள், 2006 ஆம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் நேரத்தைச் செலவிட வேண்டும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை நீதிக்கு முன்நிறுத்தப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் கீழ் பணியாற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் என்பவரும் இதே போன்றதொரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் கருத்து அரசாங்கத்திற்கு ஆத்திரத்தை எற்படுத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் "ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி, அவர் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கியுள்ளார்" என்று தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: