Tuesday, December 11, 2007

புலிகளின், தமிழீழத்தை நோக்கிய அரசியல் அபிலாசை தவறானது என நாம் கூறமாட்டோம்--பிரித்தானிய தூதுவர்!!!


ஆயுதப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என, பிரித்தானியா கூறியுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற, டட்லி சேனநாயக்கா ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற், சிறீலங்கா அரசாங்கத்தின் அரசியல் தீர்வு முயற்சிகள், மிதவாத தமிழ் சிந்தனையாளர்களை நோக்கியவையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே பேர்ச்சுவார்த்தைகளின் மீது தனது நம்பிக்கையீனத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலில், தனியரசை தவிர வேறு எந்த தீர்வை அரசாங்கம் முன்வைத்தாலும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. ஐக்கிய சிறீலங்காவிற்குள், சனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக, தம்மை அவர்கள் முன்னிறுத்த முற்படுவது, சனநாயக விரோதமான நிலைப்பாடாகும். எவ்வாறாயினும், வன்முறைகளற்ற, சனநாயக முறைகளை அவர்கள் தழுவும் வரை, எதிர்கால சமாதான முயற்சிகளில் இருந்து அவர்களை தம்மைத் தாமே ஒதுக்கிக்கொள்ளப் போகின்றார்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது, மேலதிக அழுத்தத்தை அனைத்துலக சமூகம் பிரயோகிக்கத் தவறியிருப்பதாக, இவ்வருட மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டில் சில நியாயங்கள் உள்ளன. ஆனால் சனநாயக வழியைத் தழுவி, அமைதி வழியில் அரசியல் இலக்குகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அடைய வேண்டும் என்பதே, அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். தமிழீழத்தை நோக்கிய அரசியல் அபிலாசை தவறானது என நான் கூறமாட்டேன். ஆனால் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாளும் முறைகளை நாம் ஏற்க முடியாது.

இந்த வகையில், மிதவாதத் தமிழர்களை நோக்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இங்கு யுத்தம் தீவிரமடைவது, பிரித்தானியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அகதித் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. எமது நாட்டில் உள்ள தமிழ் வணிகர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக நிதியைப் பெறுகின்றார்கள்.

இலண்டனின் வீதிகளில் தமிழ் குழுக்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. எவ்வாறாயினும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கும், அவர்களின் நிதி சேகரிப்புக்களை தடுப்பதற்கும், நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற் கூறியுள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: