Friday, January 18, 2008

எமது தலையீட்டை சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை: பிரித்தானியா!!

எமது தலையீட்டை சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை. அமைதியை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது தொடர்பாகவே எமது தலையீடுகள் இருக்கும். அதில் எமக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் போது உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரும், மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கான அமைச்சருமான ஹிம் ஹாவெல் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அனைத்துலக சமூகம் இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதிக்கான சூழலை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிரை சிறிலங்கா அரசாங்கம் இணைத்துக் கொள்ளாதது கவலை தருகின்றது.

போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளதனால் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கே உண்டு. மகாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்விற்கு அப்பால் செயலாற்றி அனைத்து கட்சிக் குழு சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.

எனது பார்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனைத்து கட்சிக்குழுவில் பங்குபற்ற அழைக்காதது மிகப் பெரும் தவறு.

அனைத்து கட்சிக்குழு தனது இறுதியான பரிந்துரைகளை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உள்ளது. அந்த பரிந்துரைகள் மாகாண மட்டத்திலான அதிகாரங்களைத் தாண்டி சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். தீர்வுக்கான முயற்சிகளை அரச தலைவர் துணிச்சலுடன் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் எல்லா மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் தீர்வு காணப்பட வேண்டும். அனைத்துலக சமூகம் அதனை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். மற்றுமொரு பின்னடைவை பார்க்க நாம் விரும்பவில்லை.

சிறிலங்காவின் இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வை காண முடியாது என்பதனை சிறிலங்கா அரசாங்கத்திற்கான செய்தியாக நாம் கூறிக்கொள்கின்றோம். விடுதலைப் புலிகளுக்கும் அது பொருந்தும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை இணைந்த இலங்கைக்குள் பெறுவது கடினமானது. எனவே தான் விடுதலைப் புலிகள் சுயாட்சி முறையை முன்வைத்து வருகின்றனர் என்று சில தமிழ் மக்கள் வாதிடுகின்றனர். எனவே அரசாங்கம் இந்த அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் தீர்வைக்காண விரைவாக முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து இதயச் சுத்தியுள்ள நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைக்கு மாற்றீடான எந்த தீர்வுத்திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கத் தயாராக வேண்டும். நம்பிக்கைகளும், உறுதியும் உருவாகாது எதுவும் நிகழாது.

செயற்திறன் மிக்க மனித உரிமை கண்காணிப்புக்குழுவினை இலங்கையில் அமைப்பதற்கான கோரிக்கைக்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும். தற்போது போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வெளியேறிய நிலையில் அது முக்கியமானது.

தொடர்ச்சியான வன்முறைகளின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதனை மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் உணரும் வரை அமைதி உருவாகாது. எமது தலையீட்டையும் சிறிலங்காவில் உள்ள சிலர் விரும்புவதில்லை. அவர்கள் யதார்த்தத்தை உணராதது எமக்கு கவலை தருகின்றது. எமது தலையீடுகள் அமைதியை எவ்வாறு முன்நகர்த்துவது என்பது தொடர்பாகவே இருக்கும். அதில் எமக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.

நாம் தற்போதும் சிறிலங்காவின் அமைதி முயற்சிகளுக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: