Thursday, January 17, 2008

லூய்ஸ் ஆர்பரின் கருத்தினை நிராகரித்தது சிறிலங்கா!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதையிட்டு லூய்ஸ் ஆர்பர் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில்,

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் இலங்கையில் மிக மோசமான வன்முறைகள் இடம்பெறும் என்றும் அதனைக் கட்டுப்படுத்தாவிடின் அது போர்க் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் மிகவும் ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது.

போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் அந்த ஒப்பந்தத்தை முறையாகக் கடைப்பிடிக்காததுடன் பேச்சுவார்த்தைகளிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதிலும் அவர்கள் நாட்டம் காட்டவில்லை. இதனால் பேச்சுக்கான அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின.

இந்நிலையில் விடுதலைப் புலிகளை அடியோடு வேரறுப்பதனை விட அரசாங்கத்திற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகளை அழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரம் காட்டினாலும் மனித உரிமைகளையும் அரசு மதித்தே வருகின்றது.

இந்நிலையில் லூய்ஸ் ஆர்பரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளது. லூய்ஸ் ஆர்பரின் அறிக்கையிலுள்ள கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

அத்துடன் படையினரோ அல்லது காவல்துறையினரோ மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படுவதனை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. குறிப்பாக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: