Thursday, January 24, 2008

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு தொலைபேசியூடாக இன்று வியாழக்கிழமை (24.01.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கருத்துரிமை மீட்பு மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்த உள்ளதாக அறிகிறோம். இத்தகையதொரு மாநாட்டை நடத்த வேண்டிய அவசிய சூழல் என்ன?

பதில்: 17 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜீவ் தமிழ்நாட்டில் மரணமடைய நேரிட்டது. அந்த ஒரு சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் தமிழீழத்தை ஆதரித்துப் பேசுவது- அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர். கருத்தைச் சொல்லுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏனெனில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்-ஆகவே தமிழீழத்தைப் பற்றியே தமிழகத்தில் பேசக்கூடாது. அப்படிப் பேசுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கே அ.தி.மு.க.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுகவின் தலைவர் வைகோ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரை கைது செய்து விடுதலைப் புலிகளைப் பற்றி பேசியதே இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பொடா சட்டத்தில் சிறைப்படுத்தினார்கள்.

பிறகு பொடாச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான குழு தமிழகம் வந்தது. பொதுக்கூட்டங்களில் அவர்கள் அவ்வாறு பேசியது குற்றம் இல்லை- தன்னுடைய கருத்துகளைக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது கூட, திறந்தவெளி நீதிமன்றத்தில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனைப் பற்றி கருத்துச் சொல்லக்கூடாது என்பது முறையல்ல. ஆதரித்தோ மறுத்தோ பேசலாம் என்று நீதிபதி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு இருக்க, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதனை அரசியலாக்க ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் இத்தகைய எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற இயக்கங்களாக இருந்தாலும் தமிழீழத்துக்கு அல்லது விடுதலைப் புலிகளுக்கு தார்மீகமான ஆதரவைத்தான் வழங்க முடியுமே தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு பொருளாதார உதவிகளோ ஆயுத உதவிகளோ அல்லது எரிபொருள், மருந்து பொருள், உணவுப் பொருள், உடைகள் போன்ற வகையிலான உதவிகளைச் செய்ய முடியாது. யாரும் செய்யவும் இல்லை. ஆகவே தார்மீகமான முறையிலான ஆதரவைத் தெரிவிப்பது, கருத்து தெரிவிப்பது கூட குற்றம் என்றும் தேசத்துரோகம் என்றும் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.

கேள்வி: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. அப்படியான நிலையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் இது பற்றி நீங்கள் எடுத்துக் கூறியுள்ளீர்களா?

பதில்: முதல்வரிடம் இதனைப் பற்றி நாங்கள் விரிவாகப் பேசவில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின்னர் தமிழக முதல்வரைச் சந்தித்தோம்.

அப்போது "இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. தமிழர்கள் மீது- ஈழத்தின் விடுதலையின் மீது எல்லோருக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. சூழலுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு நாங்கள் எதனையும் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: இந்த மாநாடு யாருக்கு எதிராக?

பதில்: இந்த மாநாடு தமிழக அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசுக்கு எதிராகவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. ஈழத்தைப் பற்றியோ புலிகளைப் பற்றியோ இங்கே வாயே திறக்கக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக திசை திருப்ப முயற்சிக்கின்றன. அதனை முறியடிப்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.

கேள்வி: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்றவர்கள் புலிகள் நடமாட்டம் இல்லை என்ற கூறியபோதும் அண்மையில் புலிகள் கைது என பல்வேறு செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது பற்றி?

பதில்: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனும், தென்னக இராணுவ தளபதி நோபுள்தம்புராஜூம் தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மறுபடியும் மறுபடியும் புலிகள் நடமாட்டம் இங்கிருக்கிறது என்று அவர் அறிக்கை விடுகிற காரணத்தால், இங்கே அது அரசியலாக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு உளவுத்துறை மட்டுமின்றி மத்திய அரசாங்கத்தின் உளவுத்துறையும் பெருமளவில் தவறான செய்திகளை- திசை திருப்பும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது. காரணம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையை மறுபடியும் நீட்டிக்க வேண்டும் என்ற தேவை இருப்பதால் இங்கே புலிகள் நடமாட்டம் இருப்பதாக வதந்தியைப் பரப்பி உண்மை என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

அதற்காகத்தான் அப்பாவி ஈழத்து இளைஞர்களை- அகதிகளாக வந்திருப்பவர்களைப் பிடித்து அவர்கள் எல்லாம் புலிகள்தான் என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: புலிகள் மீதான தடையை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தேவை இன்னமும் உள்ளதா?

பதில்: இதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் இருப்பதாக அறிகின்றோம்.

1. தமிழீழம் என்கிற தனிநாடு உருவாகவே கூடாது என்ற அரசியல் கொள்கை. அப்படித் தனித் தமிழீழம் உருவானால் இந்திய நாட்டில் வாழ்கிற தமிழர்களும் தனிநாடு கோரிக்கையை நகர வாய்ப்பிருக்கின்றது என்றும் அது இந்திய ஒருமைப்பாட்டு எதிரான சிக்கலை உருவாக்குவதாக அஞ்சுவதாக நாம் அறிகிறோம்.

2. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க வல்லரசு முன்னெடுத்திருக்கின்றது. அமெரிக்க வல்லரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதனை தனது கடமையாக இந்திய அரசு கருதுகின்றது. உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க அரசின் முடிவுகளை ஆதரிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தப்படுகின்றனர். அந்த வகையில் இந்திய அரசும் அமெரிக்க அரசாங்கத்தின் பிடியிலே சிக்கி உள்ள காரணத்தால் அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கூடிய வகையிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: நாளைய மாநாட்டிற்கு யேர்மனிய பேராசிரியர், சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணி கட்சியின் நிர்வாகி, ஈழத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் என முற்றிலும் வெளிநாட்டவரையே அழைத்துள்ளமைக்கு ஏதாவது குறிப்பிடும்படியான காரணம் உண்டா?

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களை வைத்து பல கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். மறுபடியும் அவர்களை வைத்தே- எங்களுக்கு கருத்துரிமை உண்டு என்று சொல்வதனை தமிழக ஊடகங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. வழக்கம் போல் ஆதரிப்பவர்கள் ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள்- கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று உதாசீனப்படுத்திவிடுவார்கள் எனக்கருதிய காரணத்தால் உண்மையிலேயே அனைத்துலக அளவில் மனித உரிமைகள் மீதும் கருத்துரிமை மீதும் நம்பிக்கை வைத்து அதற்காக வாதாடக் கூடியவர்களை அழைத்து கருத்துரிமையை வலியுறுத்த வேண்டியது அவசியம் எனக் கருதிய காரணத்தால் அவர்களை மட்டும் அழைத்திருக்கின்றோம். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். அதில் கருத்துரிமை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்களா?

பதில்: கட்டாயமாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் பேசுவார்கள்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக பல்வேறு பொய்ச் செய்திகளை தமிழக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிடும் நிலையில் தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகள் எப்படியாக உள்ளது?

பதில்: இந்த மாதிரி பலமுறை பொய்யான செய்திகளை தமிழக ஊடகங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1989 இல் ஒருமுறை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது அவர் இறந்துவிட்டார். ஆனால் மூடி மறைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் பரப்பிவிட்டனர். அதன் பின்னர் அடுத்தடுத்து இம் மாதிரியான பொய்ச்செய்திகள்- வதந்திகளை பரப்புகின்றனர்.

இம் மாதிரியான பொய்ச்செய்திகளை- வதந்திகளை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. திடீரென்று பிரபாகரன் குண்டுவீச்சில் காயம்- அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்றெல்லாம் கட்டுக்கதைகளை கட்டிவிட்டார்கள். அது ஒன்றுமே உண்மையில்ல என்பது புலிகளின் மறுப்புச் செய்திகள் மூலமாக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டும்- தமிழீழம் வெல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- அதற்கான பேராதரவு தமிழக மக்களிடம் வலுவாக உள்ளது.

கேள்வி: எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் எங்கள் தாயக விடுதலைக்காக தார்மீக ஆதரவளித்து வரும் தாங்கள், தமிழீழத் தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

பதில்: தமிழீழத் தாயகத்தைச் சேர்ந்த மக்கள், உலக நாடுகளில் பல்வேறு துருவங்களில் புலம்பெயர்ந்து சிதறிக் கிடக்கிறார்கள். தமிழீழம் என்றைக்கு மலரும்- மறுபடியும் தாயகம் என்றைக்கு திரும்புவோம் என்கிற ஏக்கத்தோடு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகக் கூடிய வகையில் மேதகு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் கடுமையான விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மேதகு பிரபாகரனின் வேண்டுகோளை அல்லது கட்டளையை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழீழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு பொருளாதார அடிப்படையிலான முழுப் பங்களிப்பு அவசியம் தேவை என்றார் தொல். திருமாவளவன்.

சிங்கள அரசுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஈரான், இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகள்- அதுவும் அரசுகள் உதவி செய்கின்றன.

ஆனால் சிங்கள அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிற விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு உலகில் எந்த நாடும் அரசும் இல்லை. இருக்கிற ஒரே மூலாதார சக்தி புலம்பெயர் தமிழர்கள்தான். கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து உதவி வருவதைப் போல் தொடர்ந்து உதவ வேண்டும்- ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழீழத் தாயக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாம் விடுக்கிற வேண்டுகோள்.
நன்றி>புதினம்.

No comments: