Wednesday, January 23, 2008

அனைத்து கட்சிக்குழுவின் முயற்சி தோல்வி!!! மகிந்தவால் தன்னிச்சையான தீர்வு யோசனை முன்வைப்பு !!!

கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்- வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபை: மகிந்தவால் தன்னிச்சையான தீர்வு யோசனை முன்வைப்பு.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் அனைத்து கட்சிக்குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது தன்னிச்சையான தீர்வு யோசனையை முன்வைத்திருக்கின்றார்.

கிழக்கில் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது, அதன்பின்னர் வடக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உருவாக்குவதே மகிந்த ராஜபக்ச தன்னிச்சையாக முன்வைத்திருக்கும் தீர்வு யோசனையில் உள்ள முக்கிய விடயமாகும் என்று அனைத்து கட்சிக்குழுவின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக்குழுவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து கட்சிக்குழுவினரை அரச தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து அங்கு நடத்திய கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தனது இந்த தன்னிச்சையான தீர்வு யோசனை குறித்த விபரங்களை வெளியிட்டார்.

எனினும் அனைத்த கட்சிக்குழுவினரை தொடர்ந்தும் செயற்பட்டு தனது தீர்வுத்திட்டம் குறித்த மேலதிக பரிந்துரைகளை முன்வைக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்சவின் தன்னிச்சையான இந்த தீர்வுத்திட்டத்தால் அனைத்து கட்சிக்குழுவின் இதுவரை கால முயற்சிகள் பயனற்றுப் போய் இருப்பதாக அனைத்து கட்சிக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்க்கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் விசனம் தெரிவித்துள்ளார்.

தனக்கு மிகவும் நெருங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி) சிறீதரன் ஆகியோரையும் இந்த கூட்டத்திற்கு அழைத்திருந்த மகிந்த ராஜபக்ச, அவர்களை முன்னிலைப்படுத்தியே தனது தீர்வு யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அந்த முக்கிய பிரமுகர் விசனம் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து கட்சிக்குழுவை நேற்று மாலை கூட்டி அங்கு உரையாற்றிய மகிந்த ராஜபக்ச தனது தீர்வு யோசனை குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

அனைத்து கட்சிக்குழுவைக் கலைந்து செல்லுமாறு நான் கூறவில்லை. அது இயங்கட்டும். அது தனது தீர்வு யோசனையை முன்வைக்க நான் எந்தவித காலக்கெடுவையும் விதிக்கவில்லை. வேண்டுமானால் அந்த குழுவில் உள்ளவர்கள் தமக்கு தாமே காலவரையறையை நிர்ணயித்து செயற்பட்டும்.

அனைத்து கட்சிக்குழுவின் தீர்வு யோசனைகள் இழுபறிப்படுகிறது என்பதற்காக நான் காலம் தாழ்த்த முடியாது. தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டியது எனது கடமை. அதனை நான் செய்ய தீர்மானித்து விட்டேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் அழுத்தங்கள் வந்துகொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இனப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்க திட்டமிட்டுள்ளேன். எனது இந்த தீர்வு யோசனையின் பிரகாரம் கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், வடக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளேன்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பகிர்வது என்ற சரத்தின் பிரகாரமே எனது இறுதித் தீர்வுத்திட்டம் அமையும்.
எனது இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. ஆகையால் அனைத்து கட்சிக்குழு இந்த தீர்வு யோசனை குறித்து இனி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை அனைத்து கட்சிக்குழுவுடன் இன்று மாலை 4:00 மணிக்கு இடம்பெறும் கூட்டத்தில் தனது தீர்வுத்திட்டம் குறித்து மகிந்த ராஜபக்ச மேலும் விளக்கங்களை அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிக்குழுவின் தலைவர் போராசிரியர் திஸ்ஸ விதாரன இதுவரை காலமும் அனைத்து கட்சிக்குழுவினர் இணக்கப்பாடு கண்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி>புதினம்.

No comments: