சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக, சிறீலங்கா அரசு இன்று (வியாழக்கிழமை) மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கையின் நடுநிலையாளரான நோர்வே அரசுக்கு சிறீலங்கா அரசு தனது முடிவை உத்தியோகபூர்வமாக எழுத்தில் கொடுத்திருக்கின்றது.
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ரோர் ஹற்ரறெம்மிடம் (Tore Hattrem) தமது அரசின் நிலைப்பாடு தொடர்பான எழுத்துமூலக் கடிதத்தை இன்று மாலை கையளித்திருப்பதாக தூதரகம் தெரிவித்தது.
போர்; நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாயின் இரண்டு வாரங்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இம்மாதம் 16ஆம் நாளுடன் சிறீலங்கா தரப்பு போர்; நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுகின்றது.
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவால் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் விடுதலைப் புலிகளுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டு, அது பெரும்பகுதியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரையில், அமைதி வழிக்கான கதவுகளை மூடியுள்ள ராஜபக்ஸ அரசாங்கம், தமிழர்களை போரில் வெற்றிபெற்று விடலாம் என அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி>பதிவு.
Thursday, January 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment