Wednesday, January 16, 2008

மனித உரிமை மீறல்கள் தொடர்வதானது அனைத்துதுலக போர்க்குற்றமாகக் கருதப்படும்: லூய்ஸ் ஆர்பர்!!!

மனித உரிமை மீறல்கள் தொடர்வதானது அனைத்துதுலக போர்க்குற்றமாகக் கருதப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் உயரதிகாரி லூய்ஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் சிறிலங்கா சென்றிருந்து லூய்ஸ் ஆர்பர், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்த பின்னர் ஜெனீவாவில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், ஜனவரி 16 ஆம் நாள் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் நிலையில், அனைத்துலக விதிமுறைகளின் படி, மனித உரிமை தொடர்ந்தும் மதிக்கப்பட வேண்டும்.

போரை மேலும் உக்கிரமாக்கும் முயற்சி, அந்நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரின் மனித உரிமை தொடர்பில் மேலும் மோசமான சூழ்நிலையையே உருவாக்கும்.

பொதுமக்கள் பாதுகாப்பையும் இன ஒடுக்குமுறையற்ற சூழலையும், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமைகளையும் அனைத்துலக விதிமுறைகளுக்கமைய மதிப்பளித்து நோக்குவது அவசியம்.

பொதுமக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பது, கட்டாயமாகத் தடுத்து வைப்பது, திட்டமிட்ட இடப்பெயர்வை உருவாக்குவது, கடத்திச் செல்வது, மனிதாபிமானமற்ற ரீதியிலும் மனிதத்திற்குப் புறம்பான வகையிலும் மக்களை வன்முறைக்குள்ளாக்குவது, கொடுமைப்படுத்தி வன்முறையைத் திணிப்பது மற்றும் தேவையற்ற தண்டனைகளை வழங்குவது உட்பட, சிறுவர்களை போருக்குப் பயன்படுத்துவது போன்ற அனைத்தும் அனைத்துலக போர்க்குற்றமாகக் கருதப்படுகின்றன.

இத்தகைய குற்றங்களை எந்தவொரு பகுதியும் மீறும் பட்சத்தில், அவை அனைதத்துலக குற்ற விதிமுறைகளின் கீழ், போர்க்குற்றமாகக் கருதப்படும். அதிகாரத்தை வைத்திருப்போரும் கட்டளைகளைப் பிறப்பிப்போரும், இந்த போர்க்குற்ற விதிகளின் கீழ் நோக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: