Friday, January 04, 2008

அனைத்துலக சமூகத்தில் இருந்து சிறிலங்கா மேலும் தனிமைப்படுத்தப்படும்: "ரொய்ட்டர்ஸ்"

சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் அதிருப்தியைக் கொண்டுள்ளன. எனவே தான் சிறிலங்கா ஆசியப் பிராந்தியத்தில் தனது இராஜதந்திர நடவடிக்கைகயை தற்போது அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறியது அரசை மேலும் தனிமைப்படுத்தும் என "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்திற்கு எழுதிய ஆய்வுப்பத்தியில் பீற்றர் ஆப்ஸ் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்சின் தமிழக்கம் வருமாறு:

ஏற்கனவே நெருக்கடியில் இருந்த போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக சிறிலங்கா வெளியேறியது. அதனை அனைத்துலக சமூகத்தில் இருந்து அதிகளவில் தனிமைப்படுத்தலாம். எனினும் அது முதலீடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இரு தசாப்தங்களாக நடைபெற்று வந்த இனப்போரை நோர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும், 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அது முறிவடைந்தது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட போர், சிறிலங்காவின் தலைநகரில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கள் அதற்கான காரணங்கள்.

எனினும் கடந்த புதன்கிழமை அரசு ஒருதலைப்பட்சமாக வெளியேறுவதாக அறிவிக்கும் வரையிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் காகிதத்தில் மட்டுமே இருந்தது. போர் நிறுத்தம் முடிந்து விட்டது என்பது எமக்கு முன்னரே தெரியும் எனப் பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட தென்னாசியப் பிராந்திய ஆபத்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஜெனீபர் ஹர்பிசன் தெரிவித்துள்ளார். இது மிகவும் விசித்திரமானது. எனினும் பெரும் அது வேறுபாடுகளை ஏற்படுத்தப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா அரசின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், மகிந்த அரசு பேச்சுக்களின் மூலம் தீர்வைக்காணும் என்பதில் தான் நம்பிக்கை கொள்ளவில்லை என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான தனது கோரிக்கையைத்தான் புதுப்பிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். போர் நிறுத்த உடன்பாடானது அதிகாரபூர்வமாக முறிந்துபோவது மோதல்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என ஆய்வாளர்களும், இராஜதந்திரிகளும் தெரிவித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உக்கிரமடைந்த போரில் 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இது போரில் உயிரிழந்தோரின் தொகையை 70,000 ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு கொழும்பு பங்குச்சந்தை 6.7 விகித இழப்பை சந்தித்துள்ளது. அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையீனமே இதற்கான காரணம். ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்காவின் ரூபாயும் ஒரு விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆனால் 26 பில்லியன் டொலர் பொருளாதாரத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 விகிதமாக இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்து வருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாதம் அரசு ஐரோப்பிய பிணை மூலம் 500 மில்லியன் டொலர்களை பெற்று தன்னை வலுப்படுத்த முயற்சித்திருந்தது.

போரானது தென்னிலங்கையின் செயற்பாடுகளில் சிறிதளவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது எனப் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எண்ணவில்லை. ஆனால் தற்போதைய நிலையே எதிர்காலத்திலும் தொடரலாம் என புரோகெரேஜ் எக்ஸ்ரோட்டிக்ஐ சேர்ந்த வியூகவியலாளர் ஸ்ருவாட் கிளவர்கவுஸ் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால விளைவாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களின் நிர்வாகப் பகுதியான வடபகுதியில் மோதல்கள் அதிகரிப்பதுடன், தெற்கிலும், கிழக்கிலும் குண்டுத்தாக்குதல்களும் நிகழலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொழும்பில் தாக்குதல்கள் தீவிரமடைந்தால் அது நாட்டின் உல்லாசப்பயணத்துறையைப் பாதிக்கலாம். 2004 ஆம் ஆண்டு எற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மோதல்களில் அது எற்கனவே அதிக சேதங்களை சந்தித்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறுவதாக அரசு நோர்வே அனுசரணையாளர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. பல வருடங்களாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வந்த அமைதி முயற்சிகளுக்கு அனுசரணைகளை வழங்கி வந்த நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிற்கு கூட அரசின் இந்த நடவடிக்கையை ஊடகவியலாளர்களே தெரிவித்திருந்தனர்.

இதனை நாம் எவ்வாறு அனுகூலமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. அமைதி முயற்சிகள் நீண்டகாலத்திற்கு முன்னரே செயலிழந்து விட்டது என மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாகவும் அதிருப்திகளை கொண்டுள்ளன. அதனை தொடர்ந்து சிறிலங்கா ஆசியாவையும் அதனை அண்டிய பகுதிகளிலும் தனது இராஜதந்திர நடவடிக்கைகயை அதிகரித்துள்ளது.

ஈரான், பாகிஸ்தான், மியான்மார் போன்ற நாடுகளுக்கு உயர்மட்ட பயணங்களையும் அரச தலைவர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக இது அனைத்துலகத்தில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றது.

விடுதலைப் புலிகள் சிறிய கடற்படையையும், இலகுரக வானூர்திகளை கொண்ட வான்படையையும் கொண்டுள்ளனர். எனினும் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களை தடை செய்துள்ளன.

ஆனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதன் நற்பெயருக்கு நீண்டகாலத்தில் பாதிப்புக்களை உண்டுபண்ணும் காரணிகளில் போர் அல்லாத காரணிகளும் அடங்கும்.

டிசம்பர் மாதம் சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்தின் தலைவரான பிரித்தானியாவைச் சேர்ந்த அதிகாரியின் வேலை அனுமதிப்பத்திரத்தை சிறிலங்கா அரசு இரத்துச் செய்துள்ளது. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவிற்கு ஆசனம் ஒன்றை ஒதுக்க மறுப்பு தெரிவித்ததற்காகவே அவரின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டது. தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த மகிந்த நாடு திரும்பிய வேளை இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆனால் விடுமுறைக் காலத்தில் வானூர்தியின் எல்லா ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததனால் தான் அவ்வாறான நிலமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடுதியாக அரசு மேற்கொள்ளப்படும் முட்டாள்த்தனமான நடவடிக்கையின் அளவை இது காட்டுகின்றது. சிறிலங்காவில் நடைபெறும் குண்டுத்தாக்குதல்களை விட அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தான் வர்த்தக துறையினரை அதிக கவலை கொள்ள செய்கின்றது என ஹர்பிசன் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: