Sunday, January 06, 2008

சிறிலங்கா அரசின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம்: "சண்டே ரைம்ஸ்"

சிறிலங்கா அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் பலவீனமாகி விட்டதாக படை அதிகாரிகளும், அரச தலைவர்களும் அண்மைய மாதங்களில் தெரிவித்து வருகின்றனர். கிழக்கு முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அங்கு சிறு, சிறு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. விடுதலைப் புலிகளின் பத்து கப்பல்களை அழித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காயமடைந்துள்ளதாகவும் படை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

வன்னியில் முடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை முறியடிக்கப் படையினர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது வான்படையினரும் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

படை அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையிலும் 2,100 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 1300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளின் பலம் 3,500 உறுப்பினர்களே என்று புதிதாக ஆரம்பித்துள்ள வார ஏடு ஒன்றிற்கு கடந்த ஆண்டு படைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவரது கூற்று உண்மையானால் இறந்தவர்கள் போக 1,400 விடுதலைப் புலிகளே தற்போது எஞ்சியிருக்க வேண்டும். அவர்களில் 1,300 பேர் காயமடைந்திருந்தால் தற்போது 100 பேரே எஞ்சியிருக்க வேண்டும்.

மற்றுமொரு புலனாய்வுத் தகவல் விடுதலைப் புலிகளின் பலம் 7,500 பேர் என தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையானால் இறந்ததும் காயமடைந்ததுமாக 3,400 பேர் போக தற்போது 4,100 பேரே எஞ்சியிருக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் பொது மக்களுக்கு உண்மை நிலமைகளை தெரிவிப்பதில் ஊடகத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. முன்னர் நடைபெற்ற எல்லா ஈழப்போர்களும் நீண்டகால ஊடகத்தணிக்கை மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழே நடைபெற்று வந்தன.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது. அரசு ஒழுங்கு செய்யும் போது தான் செல்ல முடியும்.

எனவே மோதல்கள் தொடர்பாக வெளியிடப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்துவது கடினமானது. பிரகடனப்படுத்தப்படாத நாலாம் கட்ட ஈழப்போரில் ஊடகத்தடைகள் கொண்டுவரப்படாத போதும், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களும், மிரட்டல்களும் மோசமானவை. ஜனவரி 16 ஆம் நாளுக்குப் பின்னர் அது பிரகடனப்படுத்தப்பட்ட போராகி விடும். எனவே நிபந்தனைகள் மிகவும் சிக்கலாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விடுதலைப் புலிகள் பலவீனமாக இருந்தால், அவர்களின் கப்பல் பலம் அழிக்கப்பட்டிருந்தால், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காயமடைந்திருந்தால் போர் நிறுத்தத்த்தில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

போர் நிறுத்த உடன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்தார். 2005 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் அறிவித்திருந்தார்.

எனினும் அவர் பதவியில் அமர்ந்த ஒரு வருடங்களில் அமைதி பேச்சுக்களை ஆரம்பிக்கும் பொருட்டு நோர்வேக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: