Friday, January 25, 2008

கருணாவிற்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை - அரசு, கோத்தபாய மீது கருணா குற்றச்சாட்டு!!!

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு லண்டனிலுள்ள ஐல்ஸ்வோத் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இராச தந்திரிகளுக்குரிய பெயரில், பொய்யான கடவுச்சீட்டில் பிரித்தானிவிற்கு நுழைந்ததற்காக மட்டுமே தற்பொழுது இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஸவுமே போலியான கடவுச்சீட்டை தயாரித்து தன்னை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்திருப்பதாக நீதிமன்றில் கருணா கூறியதாகத் தெரிகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) இது பற்றிக் கருத்துக் கூறிய சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகம, தமது அரசு கருணாவிற்கான போலியான இராசரீக கடவுச்சீட்டை வழங்கவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததுடன். மூன்றாவது சக்தியொன்றின் பின்னணி இதில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

சிறீலங்கா படைகளுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக போரியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடர வேண்டுமென மனித உரிமை அமைப்புகளும், அனைத்துலக நிறுவனங்களும் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும், அவ்வாறான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

கருணாவிற்கு அதிகூடிய தண்டனையாக 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், பண அபராதமும் விதிக்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
நன்றி>பதிவு.

No comments: