ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தொப்பிகலையில் விடுதலைப் புலிகளின் மரபு வழி தாக்குதல் அணிகள் எவையும் நிலை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களின் கரந்தடிப்படையணியே தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரந்தடிப்படையின் சில உறுப்பினர்களை தொப்பிக்கலையில் இருந்து வெளியேற்றுவதற்கு இராணுவம் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களின் அனுபவமின்மையின் வெளிப்பாடே என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் குடாநாட்டை 1995ம் ஆண்டு முழுமையாக கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்து பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை நடத்தியிருந்தது எனினும் இன்று வரை யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை படையினரால் தடுக்க முடியவில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் செறிவு மிக்க கரந்தடி தாக்குதலுக்கோ தற்காலிக தங்குமிட அமைத்தலுக்கோ ஏதுவற்ற யாழ் குடாநட்டிலேயே விடுதலைப் புலிகளால் படையினருக்கு எதிரான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடியுமாயின் கிழக்கு மாகாணத்தில் அதனைவிட மோசமான தாக்குதல்களை விடுதலைப்புலிகளால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகள் நிறைந்த முழுமையாக அரச படைகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட முடியாத ஈரூடக தொடுப்புகள் மிக்க கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முற்றாக தடுப்பதற்கு அரசாங்க படைகளால் முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது படையினர் சந்தித்து வரும் இழப்புகளை விடவும் கூடுதலான இழப்புகளை படையினர் எதிர்காலத்தில் சநதிக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் முழுமையான கட்டுப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் என்ற எண்ணம் தவறானது என்றும் விடுதலைப்புலிகள் 95ம் ஆண்டு அவர்களின் கோட்டையாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய பின்னரே ஸ்ரீலங்கா படைகளின் வரலாற்றில் பாரிய இழப்புகளை சந்திக்கும் வகையிலான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பின் ஆழுகைகளை கைப்பற்றுவதன் மூலமாகவோ குறிப்பிட்ட பிரதேசத்தில் அகலக் கால்பரப்பி நிற்பதன் மூலமாகவோ யுத்தத்தின் போக்கை மாற்றி விட முடியாது என்ற வரலாற்று உண்மையை ஸ்ரீலங்கா அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது ஈராக்கிலும் முன்பு வியட்நாமிலும் உலக வல்லரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விளைவுகளை ஸ்ரீலங்கா நினைவு கூர வேண்டும் என்றும் உலக வல்லரசாகவும் பொருளாதார ரீதியல் பலம் பொருந்தியதாகவும் உள்ள அமெரிக்காவால் தாங்க முடிந்த இழப்புகளை கடனில் தத்தளித்து வெளிநாட்டு உதவிகளை நம்பி நாட்களை நகர்த்தும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தாங்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்த நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவிற்கு பாரிய பொருளாதார சுமையை அதிகிக்கச் செய்யும் அதே வேளை படையினர் சந்திக்கும் இழப்புகள் அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் மிகக் குறைந்த இழப்புகளோடு ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய முடியுமும் என்பதால் யுதத்தத்தின் மூலம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொள்ளாவிட்டால் மீட்கமுடியாத பாதாளத்திற்கும் இலங்கை விழுந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்து வரும் நாடக்களில் விடுதலைப்புலிகளின் பதில் தாக்குதலின் விளைவுகளை முழுமையாக அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு
Wednesday, July 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Is it Possible? It is hard to think. Tigers are under Command of Western Masters.
pulliraja
Post a Comment