Tuesday, July 03, 2007

பாதையைத் திறந்து, யுத்தநிறுத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி இயல்பு நிலைமையை ஏற்படுத்தாமல் அமைதிப் பேச்சு சாத்தியமே இல்லை!

ஏ9 பாதையைத் திறந்து, யுத்தநிறுத்த ஏற்பாட்டை சொல்லிலும் செயலிலும் முழு அளவில் கடைப்பிடித்து, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை மீள உருவாக்காமல் அமைதிப் பேச்சுக்கு சாத்தியமேயில்லை.

விடுதலைப் புலிகளின் உயர் வட்டாரங்கள் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றன.


சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனுசரணைத் தரப்பான நோர்வேயை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருக்கின்றார் என்றும் இதனடிப்படையில் அனுசரணைத் தரப்பின் விசேட தூதுவர் ஹன்ஸன் போவர் விரைவில் கொழும்புக்கு வந்து, கிளிநொச்சி சென்று, இரு தரப்புத் தலைவர்களையும் சந்தித்து, அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் எத்தனங்களை மேற்கொள்வார் என்றும்
கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் குறித்து புலிகளின் உயர் வட்டாரங்களோடு தொடர்புகொண்டு கேட்டபோதே அவை மேற்கண்டவாறு திட்டவட்டமாகத் தெரிவித்தன.

ஹன்ஸன் போவர் கிளிநொச்சிக்கு வந்தால், எமது அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவரைச் சந்திப்பார். அமைதி முயற்சிகள் தொடர்பான எமது மாறாத இறுக்கமான நிலைப்பாட்டை அவரிடம் தெரிவிப்பார்.
யுத்தநிறுத்தத்தை மோசமாக மீறி, பல்வேறு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, எமது தாயக பூமியை இந்த யுத்த நிறுத்தகாலத்தில் கபளீகரம் செய்து, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அவர்களது வாழிடங்களில் இருந்து இடம்பெயர வைத்து, மனிதப் பேரவலத்தை உருவாக்கிக் கொடூரத்தின் உச்சியில் நிற்கின்றன இலங்கைப் படைகள்.எதிர் விளைவுகளை இனித்தான் எதிர் கொள்ள நேரிடும் இவற்றின் விளைவுகளை பதில் நடவடிக்கைகளை இலங்கை அரசு எதிர்கொள்ளவேண்டிய வேளை இனித்தான் வரப்போகின்றது. சமாதான முயற்சிகள் என்ற பெயரால் அவற்றை இலகுவில் தடுத்துவிட முடியாது.

யுத்தநிறுத்த ஏற்பாடுகளை முழு அளவில் சொல்லிலும், செயலிலும் நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தினால் மட்டுமே அமைதி முயற்சிகளுக்கு இணங்குவோம். அதற்கான வாய்ப்பும் கிட்டும்.

யுத்தநிறுத்தத்தை தனக்குச் சாதகமா கப் பயன்படுத்திக்கொண்டு, தமிழர் தாயகத்தின் மீது தான் கட்டவிழ்த்துவிட்ட கொடூர நடவடிக்கைகளைச் சீர்செய்து நிவர்த்திப்பது மற்றும் ஏ9 பாதையை நிபந்தனையின்றி மீளத்திறப்பது உட்பட இயல்பு நிலையை மீள உறுதிப்படுத்துவதற்கு அரசுத் தரப்பு செய்யவேண்டிய கடப்பாடுகள் பொறுப்புகள் பல இருக்கின்றன.

நோர்வேக்கு விரிவாக விளக்குவோம்

அவற்றை நோர்வேத் தரப்பினர் வரும் போது அவர்களுக்கு விரிவாக விளக்குவோம். அவற்றைச் செய்வதற்குக் கொழும்பு அரசு இணங்கி முன்வந்து, செயற்படுத்தினால் மட்டுமே அமைதி முயற்சிகளுக்கான சூழல் உருவாகும். சமாதானப் பேச்சுகளும் சாத்தியமாகும். இவ்வாறு புலிகளின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சிக்கு விசேட தூதுவர் ஹன்ஸன் போவர் வருகை தர இருக்கிறார் என்று செய்திகள் அடிபடும் பின்னணியில், அப்படி அவர் இம்முறை வரும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர் சந்திக்க வாய்ப்புண்டா? என்று அந்த உயர் வட்டாரத்திடம் கேட்டோம். இல்லை. நிச்சயமாக இல்லை. அமைதி முயற்சிகளுக்கான இயல்பு நிலைமை ஏற்படாத இந்நிலையில் போர்த் தீவிரம் நீடிக்கும் இந்நிலையில் சர்வதேசப் பிரதிநிதிகள் எவரையும் தலைவர் பிரபாகரன் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அடியோடு இல்லை என்றன அந்த வட்டாரங்கள்.
நன்றி>லங்காசிறீ

No comments: