சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விபரம்:
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது.
சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன.
உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக்குதல் நடத்துகிறோம் எனில் அது சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய வகையிலான ஒரு இலக்காகும். இராணுவத்தின் வலிமையையும் அது பாதிக்கும். ஆகையால் அதுபோன்ற உத்திகளையே நாம் கையாள்வோம்.
குடும்பிமலை காட்டுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசாங்கமானது ஒரு புதிய நாட்டை கைப்பற்றிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
வலிந்த இராணுவ நடவடிக்கைகளை ஒருபக்கம் நடத்திக் கொண்டு மறுபக்கம் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவரும் தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்களை நாம் நடத்தமாட்டோம்.
மற்றொரு தரப்பினர் பேச்சுக்களில் பங்கேற்பதற்கான அனைத்து வழிகளையும் மூடிவிட்ட பின்னர் பேச்சுக்களில் பங்கேற்க சிறிலங்கா அரசாங்கம் அழைப்பது அர்த்தமற்றது.
இந்த அரச தலைவருடன் அமைதி என்பது சாத்தியமற்றது. கிழக்கில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி கேளிக்கையும் விழாக்களும் நடத்தும் இத்தகைய அரச தலைவர் அமைதியை உருவாக்கும் சாத்தியம் இல்லை.
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் இப்போது முறிந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்
Thursday, July 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment