




ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய கி.வீரமணி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மறுபுறம் ஈழத் தமிழர்களை திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்கிறது.
ஜப்பானுக்கும் நோர்வேக்கும் உள்ள அக்கறையும் உணர்வும் இந்தியாவுக்கும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை- இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா பாராமுகமாக இருக்காமல் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன், விடுதலைப் புலிகளுக்கு அமைதிப் பேச்சுகளில் விருப்பம் இல்லை என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தவறான தகவலை பரப்பி வருகின்றார். அவரை பதவி நீக்கம் செய்ய வேஎண்டும். இதற்குரிய நடவடிக்கைகள தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றார்.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்- சிங்கள அரசாங்கத்தை
இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஒவியர் மருது, பாவலர் அறிவுமதி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நன்றி>புதினம்.
1 comment:
தமிழக உறவுகளுக்கு எமது வாழ்த்துக்கள்.
Post a Comment