மகிந்த அரசின் "கிழக்கு உதயம்" என்கிற கிழக்கு வெற்றி கொண்டாட்டங்களானது இலங்கைத் தீவில் அமைதிக்கு சாவுமணி அடித்திருக்கிறது என்று "உதயன்" தமிழ்நாளேடு சாடியிருக்கிறது.
உதயன் நாளேட்டின் இன்றைய (19.07.2007) தலையங்கம்:
""தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிட மிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.
கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் மகிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழாவாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திருவிழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுரையை பிரதிக்ஞையை சபதத்தை மீண்டும் ஒரு தடவை மகிந்தர் பிரகடனம் செய்யக்கூடும்.
மகிந்த அரசின் யுத்தத் தீவிரப் போக்கும், யுத்த வெற்றிகள் பற்றிய பீற்றல் பிரசாரங்களும் ஒரு புறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல "நைஸாக' அரசுக்கான அரசியல் பிரசாரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
மறுபுறத்தில், தெற்கில் மிக ஆபத்தான கருத்தியல் நிலைப்பாட்டை அது ஊன்றி விதைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
""இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி வெடித்துள்ள இந்த சிவில் யுத்தம் எத்தரப்பினாலும் வெல்லப்பட முடியாதது. இந்தப் பிணக்குக்கு இராணுவ வழியில் தீர்வு காண்பது சாத்தியமேயற்றது.'' இப்படித்தான் அனைத்துலகம் மீண்டும் மீண்டும் அடித்துக்கூறிச் சுட்டிக்காட்டி வருகின்றது.
இப்பிரச்சினையை நீண்ட காலமாக அவதானித்துவரும் நோக்கர்களும், பக்கச்சார்பற்ற ஆய்வாளர்களும், இலங்கையில் செயற்படும் பல பிரதான கட்சிகளின் தலைவர்களும் கூட இதனையே கூறிவருகின்றார்கள்.
ஆனால் இதற்கு மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மூலம் அதாவது , இராணுவ நடவடிக்கை வாயிலாக தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கி, இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற மமதை எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன அரசின் போர்த் தீவிரப் போக்கும் அதையொட்டிய வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களும், அரசியல் பிரசாரங்களும்.
கிழக்கு மீட்பை "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அரசு கொண்டாடுகிறது. ஆனால் அது, அமைதி வழித் தீர்வுக்கு நிரந்தர அஸ்தமனமாக அமைவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கின்றது.
""கிழக்கு மாகாணத்தை முற்றாகப் புலிகளின் கைகளில் இருந்து தமது வீரம் மிக்க துணிச்சலான நடவடிக்கைகளின் மூலம் மீட்டதன் வாயிலாக அரச படைகள் ஆழமான செய்தி ஒன்றை எடுத்துரைத்திருக்கின்றன. இந்த யுத்தம் வெல்லப்படமுடியாத ஒன்று என்ற வீணர்களின் பிரசாரத்தை நமது படையினர் பொய்யாக்கிக் காட்டியிருக் கின்றனர்.
""கிழக்கை மீட்டுள்ள அரசு, இனிப் புலிகளை அமைதிப் பேச்சுக்காக ஜெனிவாவுக்குக் கூட்டிச் செல்லும் செயற்பாட்டில் இறங்கக்கூடாது. கிழக்கை மீட்டமை போன்று வடக்கையும் முற்றாக மீட்டு, புலிகளை விரட்டியடித்து, பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.'' என்று நாடாளுமன்றத்தில் வீராவேசமாக முழங்கி இருக்கின்றார் ஜே. வி. பியின் பிரசாரச் செயலாளர் விமல்வீரவன்ச.
கிழக்கு வெற்றியைத் தனது அரசியல் இலாபத்துக்காக முறையற்ற விதத்தில் பிரசாரப்படுத்தும் மகிந்த அரசு அதன்மூலம் அமைதிவழித் தீர்வுக்கு நிரந்தரமாக சாவுமணி அடித்து, யுத்தத்தையே இறுதிப் பாதையாகத் தான் தேர்ந்தெடுத்து நிற்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.
இது ஒரு மிக மிக ஆபத்தான போக்காகும்.
மகிந்த அரசின் இந்த யுத்த வெறித் தீவிரத்தை சரியாக அடையாளம் கண்டு, தன்னை அதற்கேற்ப நெறிப்படுத்தத் தமிழினம் தயாராக வேண்டும். தவறுமானால் வெள்ளம் தலைக்கு மேல் போய் எதுவுமே மிஞ்சாது என்ற அனர்த்தத்தில் ஈழத் தமிழினம் அள்ளுண்டு செல்ல நேரும்.
விடுதலைப் புலிகளைக் கூண்டோடு சமாதி கட்டுவதன் மூலம் தமிழரின் தேசிய எழுச்சியையும், இனப்பிரச்சினையையும் ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிடலாம் எனத் தென்னிலங்கை கருதும் இச்சமயத்தில் புலிகளின் சிந்தனைப் போக்கு எப்படியிருக்கின்றது என்பதை நோக்குவது பொருத்தமானது.
இன்றைய நிலைமை இப்படித்தான் அமையும் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையிலேயே கோடி காட்டிவிட்டார் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.
""சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும், எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும், சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும், தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதும் இன்று தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. எனவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழ் மக்களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. .........''
இப்படிப் புலிகளின் தலைவர் கூறியவற்றை ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இன்று தமிழினம் இருக்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment