Sunday, July 15, 2007

புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவார். அதன் பின்னர் சிங்கள பாடசாலைச் சிறுவர்கள் சிறிலங்காவின் தேசிய கீதத்தை பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுவித்த செய்தியை இராணுவத்தளபதி மகிந்தாவிற்கு தெரிவிப்பார்.

இதன் பின்னர் சிங்கள மக்களுக்கு மகிந்த உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும்.

சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகளும் பறப்பில் ஈடுபடும். இறுதியாக 800 படையினரின் அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சிகள் முடிவடையும்.

சுதந்திர தினத்தை போன்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலும், பாடசாலைகளிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒழுங்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், மதத்தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் செய்யும் படி பிரதேச செயலாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முக்கிய நிகழ்வு தொடர்பாக மாணவர்களுக்கு கூறும் படி அதிபர்களுக்கு சிறப்பு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் போன்றது.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்டது என்ற செய்தியை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அன்றைய அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவிடம் கையளித்தார். இந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

எனினும் இராணுவ அணிவகுப்புடன் நிகழ்ந்த இந்த நிகழ்வில் அன்று சிங்கக்கொடியை ரத்வத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்றினார். தற்போது மகிந்த சுதந்திர சதுக்கத்தில் சிங்கக்கொடியை ஏற்றப் போகின்றார். மேலும் இராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் உண்டு.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட கொண்டாட்டங்கள் நிகழ்ந்த 9 மாதங்களின் பின்னர், யாழ். குடாநாட்டிற்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியதை 1996 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தாக்குதல் சம்பவம் உறுதிப்படுத்தியது.

யாழ். நகரத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், நாடாளுமன்றத் தலைவருமான நிமால் சிறீபால டீ சில்வா மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

ஆனால் அந்த தாக்குதலில் யாழ். நகரக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆனந்த கமான்கொட, பிரதி காவல்துறை மா அதிபர் சார்லி டயஸ் ஆகியோர் பலியாகினர்.

அத்தாக்குதல் நடைபெற்ற இரு வாரங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ தளத்தின் மீது மரபுவழி தாக்குதலை மேற்கொண்டனர். அதில் 1,500-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்களும் இழக்கப்பட்டன.

குடும்பிமலையை கைப்பற்றியது முக்கியமானது, அதனை கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதனை மீளக் கைப்பற்றியதை விட தக்கவைப்பதே முக்கியமானது. அதனை பாதுகாப்பதற்கு அதிகளவான இராணுவத்தினரும் காவல்துறையினரும் தேவை என்பதில் சந்தேகமில்லை.

அங்கு கெரில்லாக்களின் ஊடுருவலை தடுப்பதுடன் அவர்களின் வளர்ச்சியையும் தடுக்க வேண்டும். அப்படி இல்லாது விட்டால் முன்னரைப் போல சிறிய அளவிலான தாக்குதல்கள் தொடங்கி பின்னர் அது பெருமளவிலான தாக்குதல்களாக மாற்றம் பெறலாம்.

இது முன்னரும் இரு முறை நிகழ்ந்துள்ளன.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய இராணுவம், சிறிலங்காவை விட்டு வெளியேறியதும், மூன்று மாதங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மாகாணத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தமதாக்கி விட்டனர்.

பல இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதியை பெறவேண்டியும் இருந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள இராணுவ நிலைகள் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தன.

பின்னர் அப் பகுதியானது காலம் சென்ற மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கை மூலம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையில் அப்போது லெப். கேணல் தரத்தில் இருந்த தற்போதைய இராணுவத் தளபதியான சரத் பென்சேகாவும் பங்கு பற்றியிருந்தார். அவர் சிங்க றெஜிமென்டின் முதலாவது பற்றாலியனுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

பின்னர் சில வருடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் அங்கு அதிகரித்திருந்தனர். 1994 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக மீண்டும் ஒருமுறை இராணுவ நடைவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டது.

காலம் சென்ற மேஜர் ஜெனரல் லக்ஸ்மன் (லக்கி) அல்கம மற்றும் சுயாதீன படை பிரிக்கேட்டின் (சிறப்புப் படை) கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா ஆகியோர் அதற்கு தலைமை தாங்கினார்கள். பின்னர் அது குடும்பிமலை வரை தொடர்ந்தது. அப்போது அங்கு பெரும் சமர்கள் இடம்பெறவில்லை.

1993 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நடைவடிக்கை ஒரு வருடம் நீடித்ததுடன் கிழக்கின் பெரும் பகுதி கைப்பற்றப்பட்டது. இந்தியப் இராணுவத்தினர் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை துருப்புக்களால் நிரப்பும் உத்திகளை கொண்டிருந்தனர். கிழக்கின் நிலைமை வடக்கைப் போல ஒரு நிச்சயமற்ற நிலையில் இருந்தது என அந்த நடவடிக்கையின் பின்னர் சண்டே ரைம்சிற்கு வழங்கிய நேர்காணலில் அல்கம தெரிவித்திருந்தார்.

இந்த மீளக் கைப்பற்றலுக்கு பின்னரும் கெரில்லாக்கள் கிழக்குக்கு திரும்பவும் வந்தது மட்டுமல்லாது அவர்கள் அங்கு தம்மை பலப்படுத்தியும் இருந்தனர். இது பல முகாம்களை மூடி இராணுவத்தினரை விலக்கியதனால் ஏற்பட்டது. ஏனெனில் சந்திரிகா அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தேவைப்பட்டனர்.

ஒமந்தையில் இருந்து கிளிநொச்சிக்குப் பாதையை திறந்து பின்னர், அதனை யாழ். குடாவுடன் இணைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். ஆனால் மூன்று வருடத்தின் பின்னர் அந்த நடவடிக்கை படுதோல்வி அடைந்ததுடன் பெரும் ஆளணி மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களையும் சந்தித்ததுடன் அது கைவிடப்பட்டது.

கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தனர். அதன் கேந்திர முக்கியத்துவமான தெற்குப்புறத்தில் பல தொடர்ச்சியான முகாம்களை அமைத்திருந்தனர். திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பை ஆராய்ந்த அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடத்தை சேர்ந்த அதிகாரிகள் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தனர்.

யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினருக்கு திருகோணமலைத் துறைமுகமே உயிர்நாடியாகும். அங்கிருந்தே உணவு மற்றும் இராணுவ விநியோகங்கள் வடபகுதிக்கு தொடர்ச்சியாக கடல்வழி மூலம் அனுப்பப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் முகாம்களை கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் பகுதியை கொண்டிருக்காத போதிலும், இராணுவத்தினரின் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது வெளியேறிவிட்டு பின்னர் இராணுவத்தினர் வெளியேறியதும் மீண்டும் வந்துவிடுவார்கள்.

அதனால் தான் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான எல்லைகள் கிழக்கில் தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை.

கண்காணிப்புக் குழுவின் துணையுடன் பல முயற்சிகள் செய்யப்பட்ட போதும் வடக்கைப் போன்று கிழக்கில் பகுதிகளை பிரிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் குடும்பிமலை மீதான நடைவடிக்கையின் போது விடுதலைப் புலிகளை தப்ப முடியாதபடி பெட்டி வடிவில் சுற்றி வளைத்திருப்பதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு தப்பும் வழி இருக்க போவதில்லை, அவர்கள் இராணுவத்தினருக்கு இரையாகப் போகின்றனர். அவர்களுக்கு பேரழிவு நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் பெருமளவான தமது இராணுவத் தளபாடங்களுடன் அங்கிருந்து இலகுவாக பின்வாங்கிவிட்டனர்.

குடும்பிமலையில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் மிகைப்படுத்தியிருந்தமைக்கு முரணாக பெருமளவான விடுதலைப் புலிகளை கொல்லாத போது அல்லது அவர்களின் இராணுவ இயந்திரத்தை அழிக்காத போது அந்த வெற்றியில் உண்மையில்லை என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி>தமிழ்வின்

1 comment:

Anonymous said...

தப்பி ஓடினால் இழப்பு வருமா?