மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த நாள் தொடக்கம் தன் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக் கட்சிகளுக்குள்ளேயும், தனக்கெதிராக செயற்பட முற்படுபவர்களை தந்திரோபாயமாக கையாண்டு வந்தார். ஜே.வி.பி. யினுடைய ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும் பின்னர் ஜே.வி.பி உள்ளேயிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும், அதனை தந்திரமாக வெட்டிவிட்டார்.
நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைக்க ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். சிறுபான்மை கட்சிகளை விலைக்கு வாங்கினார். இதில் மூன்று இலாபங்கள் அவருக்கிருந்தன. ஒன்று ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவது, நாடாளுமன்றத்தில் தனக்கான பலத்தை தக்கவைப்பது, மற்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்துவது.
இவற்றை கெட்டித்தனமாக மகிந்த கையாண்டு வந்தார். சமீபகாலமாக அனைத்துலக நாடுகளையும் மிகத்தந்திர
மாக கையாண்டு வந்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்காவிற்கு அழுத்தங்களை அனைத்துலக நாடுகள் - குறிப்பாக இலங்கைக்கு நிதி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கொடுத்து வந்த போதும், நிதியுதவிகளை மட்டுப்படுத்துவாக அறிவித்தபோதும், அவற்றை கணக்கிலெடுப்பதாக மகிந்த ராஜபக்ச காட்டிக்கொள்ளவில்லை.
மாறாக அவரும் அவரது அமைச்சர்களும் தாங்கள் மேற்குலகை நம்பியிருக்கவில்லை, தங்களுக்கு உதவ ஆசியநாடுகள் இருக்கின்றன என வீராப்பாகக் கருத்துத் தெரிவித்தனர். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தங்களை ஈடுபடுத்தியிருக்கும் நாடுகள், யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடியுங்கள் - சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் - மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துங்கள் எனப் படிப்படியாக இறங்கிவந்து, இப்போது கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதி தாருங்கள் என சிறீலங்காவைக் கெஞ்சுமளவிற்கு வந்து விட்டன.
படைத்துறை உதவிகளைப்பெறுவது தொடர்பான விடயத்தில் பிராந்திய வல்லரசான இந்தியா
வைக்கூட பணியவைக்குமளவிற்கு மகிந்தவின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இந்தியா ஆயுத உதவிகள் தராவிட்டால் தாம் பாகிஸ்தானிடமோ, சீனா
விடமோ ஆயுதங்கள் வாங்குவோம் என்று தெரிவித்த பின்பு, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி சிறீலங்காவிற்கு என்ன உதவி தேவையோ அதனை நாம் வழங்குவோம் என்று கூடத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் வகையில் படைநடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை சிறீலங்கா சீனா
விற்கோ, பாகிஸ்தானிற்கோ சென்று ஆயுதம் வாங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்து அமைந்தது. அந்தளவிற்கு சிறீலங்கா சனாதிபதியின் தந்திரமான காய்நகர்த்தல்கள் அமைந்திருந்தன.
ஆனால், உள்ளேயும் வெளியேயும் இவ்வாறெல்லாம் காய்களை நகர்த்திவந்த மகிந்த குழுவினர் தற்போது தடுமாறி நிற்பதற்கு என்ன காரணம்? மங்களசமரவீரவும், சிறீபதி சூரியாராய்சியும் மகிந்தவை நிலைகுலைய வைக்குமளவிற்கு பலசாலிகளா என்கிற கேள்விகள் எழலாம். உண்மை இதுதான். உள் இரகசியங்களை தெரிந்து வைத்திருக்கும் இவ்விருவரும் வெளியே வந்து அவற்றை மகிந்தவிற்கு எதிரான அஸ்திரமாக பாவிக்கத் தொடங்கி விட்டனர்.
தென்னிலங்கையிலே மோசமாக தலைவிரித்தாடிய படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்களுக்கு பின்னணியில் இருந்து இயங்கியவர் சனாதிபதியின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச என்பது தெரியவந்துள்ள போதும், அதற்கான ஆதாரங்களை சிறிபதி சூரியாராட்சி தற்போது புட்டுப்புட்டு வைக்கத் தொடங்கிவிட்டார்.
இக்குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் - இதன்வலையமைப்பு - பின்னணி என்பன குறித்து சிறிபதி சூரியாராட்சிக்கு நன்றாகத் தெரியும். தனக்கு கொலை அச்சுறுத்தல் வந்திருப்பதாக காவல்துறையில் அவர் பதிவு செய்திருக்கும் முறைப்பாட்டில் கோத்தபாய ராஜபக்ச தொடர்பான பல இரகசியங்களை வெளியிட்டிருக்கிறார். ஏதிர்காலத்தில் மேலும் பல திடுக்கடும் தகவல்கள் அவரால் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் கோத்தபாய ராஜபக்ச திடீரென வெளிநாடொன்றிற்கு தலைமறைவாகியுள்ளார்.
மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியராய்ச்சியும் ஆரம்பித்துள்ள புதிய அணி எந்தளவிற்கு பலம் பெறும் என்பதற்கு அப்பால், அவர்கள் இப்போது மேற்கொண்டு வரும் மகிந்த அரசிற்கெதிரான நடவடிக்கைகள் முக்கியமானவை. மங்கள சமரவீர, மகிந்தவிற்கு பல
விதங்களில் உதவியவர். மகிந்தவை பதவியிலமர்த்த பாடுபட்டவர்.
ஜே.வி.பி, மகிந்தவிற்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்கு மங்களவின் ஜே.வி.பியுடனான செல்வாக்கே காரணம். பின் மகிந்த அரசில் வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்த போது மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பரப்புரைகள் செய்தவர் மங்கள. இப்போது ஜே.வி.பியுடன் கலந்துரையாடி மகிந்த அரசை கவிழ்ப்
பதற்கான திட்டங்களில் ஈடுபடுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக முன்பு செயற்பட்ட அவர், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிடனும் கலந்துரையாடி மகிந்த அரசை கவிழ்ப்பதற்கான பொது உடன்பாடொன்றை ஏற்படுத்தியுள்ளார். சிறுபான்மை கட்சிகளோடும் சந்தித்து உரையாடி வருகிறார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்களையும், ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியினது முக்கியஸ்தர்களையும் மகிந்
தவிடமிருந்து பிரிக்க முயல்கிறார்.
இதைக்கண்டு மகிந்த அச்சமுற்றிருக்கின்றமையை அவதானிக்கமுடிகிறது. மகிந்த, சிறீபதி வழியை பின்பற்றி மேலும் யாரும் செல்வார்களேயானால், உடனடி
யாக நாடாளுமன்றத்தை கலைத்து விடுவேன் என தன்னோடிருப்பவர்களை எச்சரிக்கும் நிலை மகிந்தவிற்கு ஏற்பட்டதே இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான். மங்கள, இனி அடுத்தகட்டமாக இந்தியா உட்பட வெளிநாடுகளில் மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கத்தொடங்கிவிட்டார்.
ஏற்கனவே வெளிநாட்டமைச்சராக இருந்த காரணத்தால் மங்களவிற்கு தொடர்புகள் அதிகம். இது அவருக்கு சுலபமான பணி. மகிந்த தனது அதிகாரத்தளத்
திலும். அரசியல் தளத்திலும். வெளிநாடுகளுடனான உறவுகளை பேணுகின்ற தளத்திலும் இப்போது ஈடாடத் தொடங்கிவிட்டார். உள்நாட்டில் அவருக்கிருந்த அதிகார, அரசியல் பலம் தான் வெளிநாடுகளுக்கு சவால் விடு
மளவிற்கு அவருக்கு சக்தியூட்டியது.
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிபெற்று வருவதான பரப்புரைகளே அவர் மீது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையான கவாச்சி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. போரை முன்வைத்தே எல்லாப்பிரச்சினைகளையும் அவர் இது வரை சமாளித்து வந்தார். இப்போது தென்னிலங்கையில் மகிந்தவிற்கு எதிரான சக்திகள் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மகிந்த என்கிற பொது எதிரிக்கெதிராக ஒன்றுபட ஆரம்
பித்து விட்டன.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அதனால் வாழ்க்கைச் செலவு மளமளவென அத்கரித்துச்செல்லும் நிலை இவை எல்லாவற்றையும் முன்னிறுத்தி சிங்கள மக்களை மகிந்தவிற்கு எதிராக வீதியிலிறக்கிப் போராட்டங்களை மேற்காள்ள மகிந்தவிற்கெதிரான சக்திகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேற்குலகம் சார்ந்த சர்வதேச நாடுகளும் சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதையே தற்போது விரும்பகின்றன.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தமக்குச் சார்பான ஒரு சுமூக நிலையைத் தக்கவைக்க வேண்டுமானால், ரணில் போன்ற மேற்கோடு அனுசரித்துப்போகும் அரசியல் தலைவர்களே மேற்குலகத்திற்கு இப்போது அவசியம்.
ஒவ்வொரு தரப்பும் தத்தம் நலன் கருதி நகர்வுகளை மேற்கொண்டுள்ள வேளையில், இப்போது மகிந்த ராஜபக்ச எல்லாப் பக்கத்தாலும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
நன்றி>ஈழமுரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment