Wednesday, July 04, 2007

கோத்தபாயவுக்கு வரலாறு தெரியவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தொப்பிக்கல பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர்.

கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு (ATBC) நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என்பதற்கு அப்பால் நாங்கள் ஒரு அரசாங்கத்தை நடத்துகிற வடக்குப் பிரதேசத்தில் இராணுவ ரீதியான ஒரு வெற்றியைக் காட்டி தங்களுடைய அரசியல் பலத்தைத் தக்க வைக்க வேண்டிய தேவை ஒன்று மகிந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்த வகையில்தான் இத்தகைய ஒரு நடவடிக்கையை மகிந்த அரசாங்கம் மேற்கொள்ள முனைகிறது.

புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க மிக உச்சமான பயிற்சி பெற்ற- பிற படையணிகள் நம்புகிற படையணிகளை முன்னே நிறுத்திதான் பதில் தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை அங்குள்ளது. ஏனெனில் சிறிலங்காவின் அனைத்து படையணிகளுமே புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் என்பதல்ல.

சிறிலங்கா இராணுவமானது இழப்புக்களின் மத்தியில் மன்னார்- மடுப் பகுதியை நோக்கி முன்னேற முயற்சித்தது. ஆனால் கடந்த ஆனி மாதம் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த முன்னேற்ற முயற்சி முற்றாக முறியடிக்கப்பட்டது. அதனால் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மற்றொரு போர் அரங்கை அமைக்க முயல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அது மணலாற்றில் அமையுமா? வவுனியாவில் அமையுமா என்பது பற்றி முடிவெடுத்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. மணலாறைப் பொறுத்தவரையில் பாரிய சிங்களச் சதியின் பின்னணி உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுங்கோலாட்சியின் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 42 கிராமங்களைச் சேர்ந்த 13,228 தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பச்சை தமிழ்க் கிராமங்களான செம்மலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவாடி உள்ளிட்ட 42 கிராமங்கள் அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறையில் இணைக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், தமிழர் தாயகத்தின் தொடர்நிலப்பரப்பில் வடக்கையும் கிழக்கையும் துண்டாடிவிட்டு நிலையான சிங்களக் குடியேற்றத்தை நிரந்தரமாக அமைக்கும் சதி முயற்சியாக அது நிகழ்த்தப்பட்டது. அந்த சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடத்தப்பட முடியாவிட்டாலும் படை ஆக்கிரமிப்பு என்பது இன்னமும் உள்ளது. காடுகள் அதிகமாகவும் ஒன்றிரண்டு நீர்நிலைகளும் கொண்ட அரணாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும். இருந்தாலும் அது எங்களின் இதயபூமி. அங்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கு நாம் தரப்போகும் பதில் என்பது மிகக் காத்திரமானதாக இருக்கும்.

எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும் தனது ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுகிற சக்தியினது அடி ஆழமான மக்கள் ஆதரவு தளத்தைக் குறிவைத்து முறைகேடான தாக்குதல்களை நடத்துவது வழக்கம். அனைத்து சிறிலங்கா அரசாங்கங்களுமே இந்த உத்தியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மகிந்த ராஜபக்ச ஒன்றும் விதிவிலக்கல்ல. தற்போது நடத்தப்பட்டு வரும் வான் தாக்குதல்களில் 90 வீதமானது பொதுமக்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகிறது. ஆனால் எங்கள் மக்கள், இந்தச் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக தங்கள் இடங்களில் கட்டுமானங்களை அமைக்கக் கூடியவர்களாகவும் உளவியல் தாக்கத்தை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் இந்த வான்படைத் தாக்குதல்களானது எமது மக்களிடத்தில் இனிமேலும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

எமது போராட்டம் மக்களுக்கானது. இந்த அச்சுறுத்தல் எழுந்த காலகட்டத்தில் மக்களின் வீடுகளுக்குச் சென்று தற்காப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம். எவ்வகையான குண்டு வீசுகளை வீசினால் எவ்வகையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவரித்தோம். வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்களது நிர்வாகப் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பதுங்கு அகழிகள் உள்ளன. வானூர்திகள் வானில் பறக்கும்போது எங்கள் குழந்தைகள் பதுங்கு அகழிகளில் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து படிப்பைத் தொடரும் நிலை உள்ளது. பொதுஇடங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். சிறுவர்களைப் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசுகிற வெளிநாட்டு அமைப்புகள் இந்த விடயங்களில் வாய்மூடிக் கொண்டிருப்பது விநோதமான விடயம். எங்கள் தலைவரின் திட்டத்தின் அடிப்படையில் மிகக் கச்சிதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழீழ வான்படை தொடக்க நிலையில் உள்ளது. அது தனது அடுத்தடுத்த சிறகுகளை விரிக்கின்ற காலத்தை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். ஒருநாடும் இன்னொரு நாடும் நடத்தும் வான் சமருக்கான கலங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்து வருகிறது. வலுவுள்ள ஒரு வான்படை இங்கு இருப்பதால் அதனை எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியாசமான தரையமைப்பைக் கொண்ட தனித்துவமான நிலம். அந்த நிலம், கெரில்லா வகை போராளிகளின் தாய்மடியாகும். கடந்த 25 வருடகாலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப் படையாக மேற்கொண்டு வருகின்றனர். குடும்பிமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் செறிவாக- பரவலாக இருப்பது உண்மைதான். அவர்களுடைய நடமாட்டம் அதிகம்தான். ஆனால் யார் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்- கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறார்கள் என்கிற விடயத்துக்குள் இவை சிக்குப்பட்டுவிட முடியாது.

கிழக்கில் யாருடைய செயற்படும் திறனைக் கட்டுப்படுத்த முடிகிறதோ அவரது செயற்படும் திறன்தான் உண்மையானதாக இருக்க முடியும். கடந்த வாரம் அம்பாறைப் பகுதியில் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவ முயன்ற சிறிலங்கா அதிரடிப்படையினரைத் தாக்கி எம்மவர்கள், படைச்சிப்பாயின் உடலையும் ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.

அம்பாறையைப் பிடித்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சிறிலங்காவினால் இது தொடர்பில் பதிலேதும் சொல்ல முடியாது. கிழக்கைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரையினில் தங்களது செல்வாக்கைச் செலுத்தலாம். மறுதரப்பினரால் எந்த ஒரு சம்பவமும் இல்லாத ஒரு சூழ்நிலையை அங்கே கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் செய்திகளின் அடிப்படையிலும் கிழக்கில் நாங்கள் மேற்கொள்கிற தந்திரோபாய நடவடிக்கைகளை அவ்வப்போது சொல்லாத நிலையிலும் மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படுவது வழமைதான். ஆனால் ஒருவிடயம்.. கிழக்கில் இப்போதுள்ள படையணிகளின் எண்ணிக்கையைவிட நாம் குறைவாக இருந்த காலத்திலும் எமது செயற்பாடுகள் இருந்தன. இப்போது ஒரு முழு ஒழுங்குபடுத்துதல் காலகட்டம் என்கிற அளவில்தான் நாம் தெரிவிக்க இயலும். ஆனால் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் கிழக்கிலே சாதிப்பதாகச் சொல்லுகிற விடயம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

இந்திய அமைதிப்படை செய்ய இயலாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு வரலாறும் தெரியவில்லை- படைத்துறை வரலாறும் தெரியவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தொப்பிக்கல என்று சிங்களப் பெயர் மூலம் அழைக்கப்படுகின்ற தூய தமிழ்ப் பகுதியான குடும்பிமலை பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். இன்று வரை சிறிலங்கா இராணுவத்தால் அந்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. எதைச் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்துள்ள குழுவினர் ஒன்றும் முதலாவது துரோகிகள் அல்ல. இதற்கும் முன்னர் துரோகிகள் அங்கிருந்தனர். அவர்கள் எதனைச் சாதித்தார்கள்? தமிழின உணர்வாளர்கர்ளை இவர்களால் காட்டிக்கொடுக்க முடியும் அவ்வளவுதான். படைப்பிரிவு ரீதியாக அக்குழுவினர் சாதிப்பார்கள் என சிங்களம் நினைத்தால் ஏமாந்துதான் போவார்கள். அவர்கள் துரோகிகள்- காட்டிக் கொடுப்பவர்கள் அவ்வளவுதான்.

கண்காணிப்புக் குழு மீண்டும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறியிருக்கிறது. அப்படியானால் அவர்கள் இவ்வளவு காலமும் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இதையேதான் நாம் சந்திக்கும் கண்காணிப்புக் குழு நண்பர்களிடமும் கேட்டு வருகிறேன். அவர்களினது செயற்பரப்பை சுருக்கி அவமானப்படுத்தி ஒடுக்கி அவர்களை மூலையிலே வைத்திருக்கிறது சிறிலங்கா அரசாங்கம். கண்காணிப்புக் குழுவினர் 10 பேர் கூடுதலாக வந்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

திருகோணமலை என்பது எமது தொன்மத் தமிழர் நிலம். திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஒரு சிங்களச் சொருகலை ஏற்படுத்த முயற்ச்க்கிறது சிங்களம். குறிப்பாக இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க சிங்களம் முயற்சிகிறது. மகாவலித் திட்டத்தை அம்லபடுத்தினால் வாகரை வரை சிங்களக் குடியேற்றம் நீளும் அபாயம் உள்ளது. சேனநாயக்க, ஜயவர்த்தனாவைபோல் சம்பூர் பகுதியை மகிந்த ராஜபக்ச சட்டம் மூலம் சிங்களக் குடியேற்றமாக்க முயற்சிக்கிறார் என்றார் இளந்திரையன்.
நன்றி>புதினம்.

No comments: