
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதன் தமிழ் வடிவம்:
கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க... கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன்.
மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார்.
"தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இருப்பதாக" வாமன் தெரிவித்தார்.
போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வீதியோரத்தில் பொருத்தப்பட்ட கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் உயிரிழந்த மூன்று போராளிகளில் வாமனின் நண்பரும் சக போராளியுமான லெப்.கேணல் தமிழ்வாணனும் ஒருவர். கெரில்லாத் தாக்குதல் முறையை இராணுவத்தினர் கடைப்பிடிப்பதாக போராளிகள் குற்றம் சாட்டுகின்றனர். வெறிநாய்க்கடி சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த மருத்துவக் குழுவினர் மூவர் உயிரிழந்தாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
"சிறிலங்கா இராணுவத்தினரின் இத்தகைய தாக்குதல்களால் எமது கடமைகளை நிறுத்திவிட முடியாது" என்கிறார் வாமன். போராளிகளின் "தமிழீழ சுகாதார சேவைகள்" குழுவின் இயக்குநராக வாமன் உள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தங்கள் தாயகப் பகுதிக்கு புலிகள் சூட்டியிருக்கும் பெயர்தான் "தமிழீழம்".
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்த பின்னர் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர்.
மேலதிகமாக இறப்புகளைத்தான் சிறிலங்கா எதிர்பார்க்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
1983 ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கியது முதல் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் இரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
"நாம் எமது இளைய தலைமுறைக்காகப் போராடுகிறோம். கடந்த 5 தசாப்தகாலமாக நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம். ஆகையால் எம்முடைய கடைசி மூச்சு இருகும்வரை நாம் போராடுவோம்" என்கிறார் 39 வயதான வாமன். யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த வாமன், சிறுபான்மைத் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுடன் 18 வயதில் இணைந்ததாக தெரிவித்தார்.
பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருக்கின்றனர். அவற்றை கடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
போராளிகளின் பலமிக்க பகுதியான கிளிநொச்சி அருகே உள்ள "மாவீரர் துயிலும்" இல்லத்தில் திறந்திருக்கும் சவப்பெட்டிகள் முன்பாக அழுகுரல்களுடன் உறவினர்கள் அமர்ந்திருக்கின்றனர்.
"நாங்கள் எமது தோழர்களின் புதைகுழி மீது மண்ணை இடுகிறோம். அவர்கள்; சிந்திய இரத்தம் தமிழீழத்தை உருவாக்கும்" என்ற பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பாகிறது.
அங்கே தமிழ்ப் போராளிகள், சீனத் தயாரிப்பு ரைபிள்களை நேர்நிலையில் நின்றபடி பிடித்திருக்கின்றனர். மற்றவர்கள் அமைதியாக தலையை குனிந்து நிற்கின்றனர். நேர்த்தியான வரிசையில் கடல்போல் நினைவுக் கற்கள் நடப்பட்டு ஆயிரக்கணக்கில் "மாவீரர்கள்" அங்கு புதைக்கப்பட்டுள்ளனர்.
போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கின் பெரும்பகுதியை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், வடபகுதியையும் கைப்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஆனால் வடபகுதியில் மேலதிக பலத்துடன் புலிகள் உள்ளனர். யார் வெற்றி பெறுவது என்பது தெளிவானதாக இல்லை.
மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக இருதரப்பையும் அனைத்துலக சமூகம் குற்றம்சாட்டி வருவது அதிகரித்துள்ளது.
தமிழர்கள் இடம்பெயர்ந்ததாலும் கொல்லப்பட்டாலும் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரிவில் 1997 ஆம் ஆண்டு இணைந்தவர் செல்வி நவரூபன்.
"வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதுவுமே செய்யாமல் இறந்து போவதைக் காட்டிலும் எமது தாயகத்துக்காக போராடி மரணிப்பது சிறந்தது எனக் கருதினேன்." என்றார் செல்வி. பல பெண் போராளிகளைப் போல் அவரது தலைமுடிப்பின்னல் இருந்தது.
"எமது சக போராளிகள் ஒருவர் உயிரிழக்கின்றபோது எமக்கு போரிடும் வலுவை அவர்கள் அளிக்கின்றனர்" என்றார் செல்வி என ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
1 comment:
போராளிகளின் மனத்திடம் வேறு யாருக்கு வரும்.
அடுத்த தலைமுறைக்காய் தம் உயிரை குடுப்பவர்கள் எமக்கெல்லாம் அன்னைகளே..
Post a Comment