மனித உரிமைகளை கருத்தில் கொள்ளாது, மக்களின் ஆதரவுகள் இன்றிப் போரை வெல்ல முடியாது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றின் முன்னாள் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
விடுதலைப் புலிகளை முறியடிக்கும் அதேசமயம் நாம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது முக்கியமானது. படைத்தரப்பு அண்மைக்காலங்களில் சில வெற்றிகளை ஈட்டியுள்ளது. அதனையிட்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்.
நான் இராணுவத்தில் பணியாற்றிய போதும் எனது எதிர்கால அரசியல் பிரவேசம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பலரிடம் இருந்தன. எதிர்பார்ப்புக்கள் என்னைத் தொடர்வதாக நான் நினைக்கின்றேன். நான் நினைக்கின்றேன நாடு பெரும் நெருக்கடிகளை சந்தித்த போது அதனை ஒரு படைச் சிப்பாயாக நின்று நான் காப்பாற்றி உள்ளேன். அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் தூதுவராக கடமையாற்றியும் எனது நாட்டை காப்பாற்றி உள்ளேன்.
தூதுவராக நான் கடமையாற்றிய சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை குறைத்ததுடன், இந்தோனேசியாவில் இருந்தான அவர்களின் கப்பல் போக்குவரத்திலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தேன்.
தற்போது நான் இங்கு இருக்கின்றேன், போரில் உயிரிழந்த மற்றும் படையில் இருந்து விலகிய படையினரின் குடும்பங்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்யலாம் என நான் நினைக்கின்றேன். இந்த குடும்பங்களின் நன்மைக்காக அண்மையில் நாம் மிகப் பெரும் "ரணவிரு அசிறி" பூசையை நடத்தியிருந்தோம். போரில் உயிரிழந்த படையினரின் மனைவிமாருக்கும், இராணுவத்தில் இருந்து விலகியவர்களுக்கும் தொழில்களை பெற்றுக்கொடுக்கும் சேவைகளை செய்யலாம் என எண்ணுகின்றேன்.
ஏனெனில் தொழில்களை மேற்கொள்ள முடியாததனால் தான் முன்னாள் படையினர் பாதாள உலகக் குழுக்களுடன் செயற்படுகின்றனர். அவர்களுக்கு செய்யும் உதவி அவர்களுக்கு மட்டுமானதல்ல அது சமூகத்திற்கும் நன்மையானது.
ஒரு மனிதனாக நானும் எனது சொந்த குடும்பத்தில் இருந்து மூன்று பேரை இழந்துள்ளேன். எனது சகோதரியின் கணவர், எனது தங்கையின் கணவரான அட்மிரல் மொகான் ஜெயமகா, எனது சொந்த மருமகன் ஆகியோரை இழந்துள்ளேன். இந்த குடும்பங்களின் நிலை என்ன என்பது தொடர்பாக எனக்குத் தெரியும். போர் முடிவடைந் பின்னரும் நீண்டகாலத்திற்கு இந்த நினைவுகளுடன் அவர்கள் வாழ வேண்டியிருக்கும். நானும் துன்பத்தை அனுபவித்துள்ளேன்.
போரில் வெற்றிகளை கண்ட போதும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும், கொடூரங்களையும் கண்டுள்ளேன். நான் மீண்டும் எனது வாழ்க்கையை மக்களுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணிக்க விரும்புகின்றேன்.
2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் மங்களா சமரவீர மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் என்னை அரசியலுக்கு அழைத்தனர் ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். அன்றில் இருந்து இன்றுவரை நான் அரசியலுக்குள் நுழையவில்லை. அது எனக்கு பழக்கமில்லை. எல்லா மக்களுக்கும் சேவை செய்யவே விரும்புகின்றேன்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது ஜாதிக கெல உறுமய என்னை தேர்தலில் நிற்குமாறு அணுகியிருந்தது. அந்த கட்சியில் உள்ள எனது அத்தையும் என்னைத் தனிப்பட்ட முறையில் இது தொடர்பில் அணுகியிருந்தார். அது மட்டுமல்லாது ஹைட்பார்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சரான சம்பிக்க ரணவக்கவும், வண. அதுரலிய ராதன தேரோவும் நான் அவர்களின் மேடைக்கு வரவேண்டும் என பகிரங்க அழைப்பையும் விடுத்திருந்தனர். அவர்கள் என்மீது ஒருவகை அழுத்தங்களை போட்டிருந்தனர்.
அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச எனக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை தருவதாக கூறவில்லை. எனக்கு அவரை நீண்டகாலமாக தெரியும், அவர் எனது நண்பர். அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர் என்னுடன் வேறு ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தார். அதாவது தேவை ஏற்படும் போது பாதுகாப்புத்துறைகளில் உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று என்னிடம் கேட்டிருந்தார்.
கிழக்கின் தற்போதைய வெற்றியைத் தொடர்ந்து, இராணுவம் முதன்முதலாக போரில் திறமையாக செயற்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முதலாவது பெரிய இராணுவ நடவடிக்கை வடமராட்சி பகுதியியே மேற்கொள்ளப்பட்டது. அதனை மேற்கொண்டவர்கள் காலம் சென்ற லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ, காலம் சென்ற மேஜர் ஜெனரல் விமலரட்ன ஆகியோர். நாடு அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதனை நான் உறுதியாக நம்புகின்றேன்.
1993 ஆம் ஆண்டு கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றும் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் குறிக்கோளை அடைவதற்கு நான் சிறப்புப் படை பிரிக்கேட்டுக்கு தலைமை தாங்கினேன். நான் கொமோண்டோ மற்றும் சிறப்புப் படை பிரிவுகளுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தேன். என்னிடம் ஒரு கஜபா றெஜிமென்ட், நான்கு சிங்க றெஜிமென்ட், 05 வியஜபா றெஜிமென்ட் என்பனவும் இருந்தன.
நாங்கள் கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆயித்தியமலை வரையில் முகாம்களை அமைத்திருந்தோம். பெரிய போரதீவிலும் எமது முகாம் இருந்தது. மறுபக்கம் பார்த்தால் குடும்பிமலை பகுதியிலும் முகாம் அமைத்திருந்தோம். குடும்பிமலையின் வடக்கு பகுதியான நபதவிலு அதன் தெற்குப்பகுதியான தரைவைக்குளம் ஆகிய பகுதிகளிலும் முகாம்களை அமைத்திருந்தோம்.
குடும்பிமலையின் தென்பகுதியில் போதியளவு நீர்வளம் இருந்தபடியால் நாம் அங்கும் முகாமை அமைத்திருந்தோம். கஜங்கேணி, கஜூவத்தை, பனிச்சங்கேணி, வாகரை, கதிரவெளி, வெருகலுக்கு மறுபக்கம், வெருகல் கோவில் ஆகிய பகுதிகளிலும் முகாம்களை அமைத்திருந்தோம். மேலும் மேஜர் மனோஜ் பீரீஸ் தலைமையில் அங்குடவில்லு பகுதியிலும் முகாமை அமைத்திருந்தோம்.
லெப். கேணல் லோரன்ஸ் பெர்ணான்டோ முதலாவது கஜபா றெஜிமெனடிற்கும், லெப்.கேணல் சுசந்த மென்டிஸ் முதலாவது சிங்க றெஜிமென்டிற்கும், லெப்.கேணல் நளின் பெர்ணான்டோ ஐந்தாவது வியஜபா றெஜிமெனடிற்கும், மேஜர் ஜெயவிரு பெர்ணான்டோ சிறப்புப் படை பிரிவிற்கும், மேஜர் சிறீநாத் பெர்ணான்டோ கொமோண்டோ படைப் பிரிவிற்கும் கட்டளை அதிகாரிகளாக பணியாற்றியிருந்தனர்.
அன்று கிழக்கில் 2,000 ஆக இருந்த விடுதலைப் புலிகளின் பலத்தை 50 ஆக நாம் குறைத்திருந்தோம். கருணா உட்பட பலர் எதிர்த்தாக்குதல்களை நடத்தாது வன்னிக்குச் சென்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல்களில் 81 விகிதமான மக்கள் வாக்களித்திருந்தனர் என நான் நம்புகின்றேன்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறுவதைப் போல விடுதலைப் புலிகளை முறியடிக்க இரண்டு அல்லது மூன்று வருடங்கள் செல்லலாம். நாம் மரபு வழியான படையுடன் மோதவில்லை, ஒரு கெரில்லாப் போரை எதிர்கொண்டு வருகின்றோம். கடந்த வருடத்தில் அவர்கள் தம்மை பலப்படுத்தியுள்ளனரா அல்லது பலவீனப்பட்டுள்ளார்களா என்பதற்கு அப்பால் அவர்கள் இத்தகைய போரில் நிபுணத்துவம் அடைந்து வருகின்றனர்.
மலேசியாவில் அந்த நாட்டு இராணுவம் மலேசியாவின் கெரில்லாக்களுடன் மோதும் போது, நாடு பொருளாதாரத்தில் பலமாக இருந்தது. அது நல்ல படைக்கட்டமைப்பை உருவாக்க உதவியது. ஒரு நல்ல படைக்கட்டமைப்பை பெற வேண்டுமாயின் வலிமையான பொருளாதாரம் வேண்டும். அதாவது அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அது தான் உண்மையானது.
கோத்தபாயாவைப் போல விடுதலைப் புலிகளை முறியடிக்க முடியும் என்று நம்பும் ஒரு ஜெனரலும் நான் தான்.
இந்தியப் படையுடன் மோதும் போது விடுதலைப் புலிகள் பலமாக இருக்கவில்லை எனினும் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் பலியாகியதுடன் பலர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பாக என்னிடம் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது.
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் வன்போ என்னும் பிரதான தளத்தை கொண்டிருந்தனர். அது மிகவும் பலம் வாய்ந்த தளமாகும். இந்திய இராணுவத்தின் காலத்தில் அவர்கள் அந்த முகாமை அழிக்கும் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு காலாட்படை பிரிவுகளை அந்த காட்டுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தனர். ஆனால் இன்றுவரை அந்த துருப்பினருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை. அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.
ஆனால் ஜெனரல் கொப்பேகடுவவின் கீழ் நான் தலைமை தாங்கி மேற்கொண்ட வன்போ தளத்தின் மீதான படை நடவடிக்கையின் போது 31 நாட்கள் விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்டிருந்தோம். இந்தியப் படையினரால் செய்ய முடியாததை நாம் செய்திருந்தோம்.
1995 ஆம் ஆண்டு நடைபெற்ற மணலாறு மீதான தாக்குதல் முயற்சி, யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட "இடி முழக்கம்" நடவடிக்கைகளில் நாம் விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம்.
பின்னர் 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு வீழ்ச்சி காணும் நிலையில் இருந்த போதும் நாம் அதனை தக்க வைத்தோம். அந்த நேரத்தில் அரச தலைவரும் யாழ். குடாநாட்டை காப்பாற்ற முடியாது என தெரிவித்திருந்தார். எனவே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளலாம் என எனது இராணுவ அனுபவம் மூலம் நம்புகின்றேன். ஆனால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் போது எமது தரப்பு இழப்புக்களை குறைவாகவும், அவர்கள் தரப்பு இழப்புக்களை அதிகமாகவும் பேணுவது அவசியம்.
யாழ். குடாநாடு 2000 ஆம் ஆண்டு நெருக்கடியில் சிக்கிய போது ஜெனரல் வீரசூரியா என்னை அழைத்து யாழ். குடாநாட்டின் கட்டளைத் தளபதி பொறுப்பை ஏப்பிரல் 20 ஆம் நாள் பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டார். அப்போது யார் உமக்கு துணை கட்டளை அதிகாரியாக தேவை எனவும் வினவினார். ஆனால் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவது நான் எனவே யாரை நியமித்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என நான் தெரிவித்திருந்தேன்.
அதன் பின் அவர் தற்போதைய இராணுவத் தளபதியான சரத் பென்சேகாவை எனது துணை கட்டளைத் தளபதியாக நியமித்தார். பின்னர் மே மாதம் 4 ஆம் நாள் பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர். ஆனால் நான் கொழும்பு செல்வதை படையினருக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் நான் இரவு சென்று மறுநாள் திரும்பி விடுவேன் எனவும் தெரிவித்திருந்தேன். ஏனெனில் நான் கொழும்பு செல்வது படையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி விடும். அதனைப் போலவே நான் மறுநாள் திரும்பிவிட்டேன்.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யாழில் இருந்து பின்வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அரச தலைவர், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படைத் தளபதிகள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். யாழ். குடாநாட்டில் இருந்து துருப்புக்களை விலக்கிப் பின்னர் வன்னியில் இருந்து படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை வான் படைத்தளபதி ஜெயலத் வீரக்கொடி அங்கு தெரிவித்திருந்தார்.
ஜனக, இந்த திட்டம் தொடர்பாக உமது கருத்து என்ன? என அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க என்னிடம் வினாவினார். முடியாது, யாழில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவது பேரழிவுக்கு வழிவகுத்து விடும் என்று நான் தெரிவித்தேன்.
நாம் வெளியேறுவதற்குரிய உத்தரவை வழங்கினால் அது கடுமையான அச்சங்களை படையினர் மத்தியில் ஏற்படுத்தி விடும். அப்போது விடுதலைப் புலிகள் பீரங்கி அல்லது மோட்டார் தாக்குதலை நடத்தினால் எல்லோரும் கப்பலில் ஏறுவதற்கு முயற்சிப்பதுடன் பெரும் நெருக்கடிகளும் ஏற்படலாம். எனவே எங்களின் முன் போர் புரிவதே ஒரே வழியாக இருந்தது.
விடுதலைப் புலிகளிடம் இலகு ரக வானூர்திகளே உள்ளன. எனவே தான் அவர்கள் இலகுவாக எமது வான்பரப்பினுள் ஊடுருவி குண்டுகளை வீச முடிந்துள்ளது. ஆனால் அவர்களால் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. அவர்கள் அதற்குரிய நவீன தொழில்நுட்பங்களை பெறும் போது நாம் அதனை கவனத்தில் எடுக்கலாம்.
நாம் அதிகாரப்பகிர்வு போன்ற அரசியல் திட்டங்களை முன்வைக்க வேண்டும். எல்லோரும் ஒரே தன்மையுள்ள மனிதாபிமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு தரப்பினர் தாம் பாரபட்சமாக நடத்தப்படவதாக உணர்ந்தால் பிரச்சனை தொடரும்.
நான் அமைதியை விரும்புகின்றேன். ஏனெனில் ஓய்வுபெறும் வரை நான் முன்னணி களமுனைகளில் பணியாற்றியுள்ளேன். போரின் வலி எனக்கு தெரியும். 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான் நெடுங்கேணி படை நடவடிக்கையை மேற்கொள்ளும் போது. எனது மனைவியின் ஒரே சகோதரர் யாழ். படை நடவடிக்கைக்கான தாயாரிப்புக்களில் ஈடுபடும் போது மாதுரு ஓயாவில் கொல்லப்பட்டிருந்தார். வடமராட்சி படை நடவடிக்கைக்கு முன்னர் அவர் பலியாகியிருந்தார்.
சடலத்தை பெறுவதற்குக் கூட என்னால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. ஏனெனில் அப்போது நான் படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். நான் வீட்டுக்குச் சென்ற போது எனது மாமியார் ஏன் எமது துன்பத்தை பகிர்ந்து கொள்ள நீ உதவவில்லை? ஏன் தம்பிக்கு இந்தக் கதி நிகழ்ந்தது? என்று இரு கேள்விகளை என்னிடம் கேட்டார். அதற்கு என்னிடம் பதில் இல்லை.
ஜெனரல் கொப்பேக்கடுவ மற்றும் ஜெனரல் விமலரட்னவுடன் அட்மிரல் மொகான் ஜெயமகா பலியான போது எனது கணவருக்கு ஏன் இது நிகழ்ந்தது? என எனது தங்கை என்னிடம் கேட்டார். நீங்கள் பலியான படையினரின் இல்லங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போதும் அவர்களின் தாய்மாரும் இதே கேள்வியையே கேட்பார்கள். ஏன்? என்பது தான் அது. அவர்களுக்கு என்ன பதிலை நான் கொடுக்க முடியும். எனவே தான் நாம் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணவேண்டும்.
எந்த ஒரு கட்டத்திலும் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. முன்னரோ தற்போதோ அது படையினருக்கும் நாட்டுக்கும் நல்ல பெயரை கொடுக்காது. அது பிரச்சினைகளை தீர்க்கவும் உதவாது. 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகளை நாம் கையாண்ட போது பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்தில் எடுத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்போது நாடுகளுக்கு இடையில் தொடர்புகளோ அல்லது உடனடியான தொடர்பாடல்களே செயற்திறனுள்ளதாக இருக்கவில்லை.
தற்போது உள்ளது போல இலத்திரனியல் ஊடகங்கள் அப்போது இல்லை. தற்போது நாம் ஒரு உலகத்தின் சமுதாயத்தில் வாழ்கின்றோம். தகவல்கள் இலத்திரனியல் முறைகளின் மூலம் உலகத்தை செக்கன்களில் சென்றடைந்து விடும். எனவே அனைத்துலக சமூகத்தின் கவனங்கள் இது தொடர்பில் அதிகமானது. அனைத்துலக சமுதாயம், மனித உரிமை அமைப்புக்கள் என்பன மனித உரிமை மீறல்களில் தற்போது மிகவும் கவனம் எடுக்கின்றன.
நான் இரு நாடுகளில் தூதுவராக பணியாற்றிய படியால் அவர்கள் மனித உரிமை மீறல்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது எனக்கு தெரியும். அவர்கள் அதில் அதிக கவனம் எடுக்கின்றனர். நான் இந்தோனேசியாவில் பணியாற்றிய போது அந்த நாட்டின் அரச தலைவரும் வெளிநாட்டு அமைச்சரும் சிறிலங்காவில் நடைபெறுவதை அறிவதில் ஆவலாக இருந்தனர். நான் அதை விளக்கினேன்.
அண்மையில் நான் அவுஸ்திரேலியவுக்கு சென்ற போதும் பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்திருந்தேன். அந்த நாடு எமக்கு ஆதரவானது. எனவே விரைவாக விடுதலைப் புலிகளின் மீதான தடையை கொண்டு வரும்.
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டுமானால் நாம் அனைத்துலக சமூகத்தை எம்முடன் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிக சக்தி உடையவர்கள். விடுதலைப் புலிகளுக்கான பெருமளவான நிதி இந்த நாடுகளில் இருந்தே கிடைக்கின்றது. அதனை தடுக்க வேண்டுமாயின் எமக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு தேவை.
விடுதலைப் புலிகள் ஐரோப்பாவில் நிதியை திரட்டி கம்போடியா மற்றும் ஏனைய நாடுகளில் ஆயுதங்களை வாங்குகின்றனர். ஐரோப்பா தான் அவர்களின் நிதியை பெறும் மையம். பின்னர் இந்த ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்படுகின்றன. எனவே நாம் இந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றால் அது செயற்திறன் மிக்கது.
உதாரணமாக நான் இந்தோனேசியாவில் பணியாற்றிய போது அமெரிக்கா, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து விடுதலைப் புலிகளின் கப்பல் வலையமைப்பை முறியடிப்பதற்கு முயற்சி செய்திருந்தன.
கிளிநொச்சி மீதான படை நடவடிக்கையின் போது நான் 51 ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியிருந்தேன். அப்போது எனக்கும் ரத்வத்தைக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியிருந்தது. எனவே, நான் 51 ஆவது படையணியின் நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தேன்.
அந்த சமயத்தில் கிருசாந்தி குமாரசுவாமி (கைதடி), ரஜனி வேலுப்பிள்ளை (உரும்பிராய்) ஆகிய பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றன. நான் தனிப்பட்ட முறையில் அதனை விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தேன்.
எமக்கு பொதுமக்களின் ஆதரவு தேவை. 2000 ஆம் ஆண்டு நாம் யாழில் மோதல்களில் ஈடுபட்ட போது 32,000 படையினரையே அங்கு கொண்டிருந்தோம். அப்போது பொதுமக்களும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து எம்மீது தாக்குதல்களை நடத்தியிருந்தால் நாம் பேரழிவை சந்தித்திருப்போம். எமக்குப் பலத்தை கொடுக்குமாறு வேண்டி கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் வழிபடுமாறும் நாம் தமிழ் மக்களை அன்று கேட்டிருந்தோம். யாழ். குடாநாட்டு மக்கள் எமக்கு எதிராக திரும்பியிருந்தால் நாம் அன்று யாழ். குடாநாட்டை தக்க வைத்திருக்க முடியாது.
எனினும் படை நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் இழப்புக்கள் தவிர்க்கமுடியாதது. ஆனால் நாம் அதனை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இவரது காலப் பகுதியில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், செம்மணியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Monday, August 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வணக்கம் !
மனிதாபிமானம், மனிதநேயம் போன்ற வார்த்தைகள் அவற்றுக்கு சிறிதும் சம்மந்தப்படாதவர்களின் வாயிலிருந்து வருவது ஒன்றும் புதிதில்லையே.
அவற்றின் அர்த்தங்களை அவர்களுக்கென்று ஓர் இழப்பு வரும்போதுதான் உணர்வார்கள்.
அதுவரை பொறுத்திருப்பொம்.
Post a Comment