மீள்குடியேற்றம் எனும் பெயரில் கிழக்கு தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் சூழ்ந்து நிற்கும் எப்போதும், வெளியேற முடியாத இடைத்தங்கல் முகாம்களில் வஞ்சமாக சிறை வைத்துள்ளதை "சண்டே லீடர்" வார ஏடு வெளிப்படுத்தியுள்ளது. "சண்டே லீடர்" வார ஏடிட்ல் சோனாலி சமரசிங்க கூறியதாவது: "அடிமைகளாக இருப்பது அவமானமில்லை. உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பதுதான் அவமானம்"- 1929 ஆம் ஆண்டு அமெரிக்க நீக்ரோக்களுக்கு காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வாசகங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பாக கிழக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம்களினூடே நான் நடக்கும்போது என் நினைவுக்கு வந்தது. கிளிவெட்டியில் உள்ள அந்த முகாம்களில் உள்ள நம்பிக்கை இழந்த கண்களுடன் பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். அந்தக் குழந்தைகள் மிக மோசமான கூடாரத்தில் மணலில் போடப்பட்டிருந்த விரிப்பு மீது கிடத்தப்பட்டிருந்தன. தங்களது பிள்ளைகளுடன் சில பெண்கள் ஒரு கூடாரத்தின் அருகே திரண்டிருந்தனர். சிலர் குதிக்காலால் உட்கார்ந்தும் மற்றவர்கள் நின்றும் கொண்டிருந்தன. தங்களுக்கான வாராந்தர உணவுப் பங்கீட்டை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்தனர். 1.4 கிலோ அரிசியும் 140 கிராம் சர்க்கரையும் வழங்கப்பட்டன. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையுடன் இருப்பவர்களுக்கு பாலும் வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டோருக்கு உடைகளும் காலணிகளும்கூட வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேட்பட்டோருக்கு எதுவுமே வழங்கப்பட்டுவதில்லை. நாங்கள் கொழும்பிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள் எனத் தெரிந்து கொண்ட 72 வயது சோமசுந்தரம் முத்துப்பிள்ளை என்ற மூதாட்டி எங்களிடம், "எனது பேரன் கடந்த ஜுலை 22ஆம் நாளன்று இராணுவம் அழைத்துச் சென்றது. அவன் பெயர் பி.சந்திரகுமார். 35 வயது. அவருக்கு மனைவியும் பிள்ளையும் உள்ளது" என்று அழுது புலம்பினார். அந்த முகாமில் வசிப்போரில் பெரும்பாலானோர் விவசாய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தவர்கள். 900 குடும்பத்தினர் அங்கு தற்போது உள்ளனர் என்று அம்முகாமிலிருந்த ஆண் ஒருவர் கூறினார். சம்பூரில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்தோம். அங்கிருந்து நாங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளோம். எங்களை வஞ்சகமாக இங்கே பலவந்தமாக அழைத்து வந்துவிட்டனர் என்றார் அவர் கோபமாக. சம்பூருக்கான பேரூந்துகள் என்று 40 பேரூந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட போது நாங்கள் சொந்த பிரதேசத்துக்குத்தான் அழைத்துச் செல்கிறோம் என்று கருதினோம். ஆனால் எங்களை இங்கே இந்த இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டு வந்துவிட்டனர் என்று அவர் புலம்பினார். "எங்களால் வெளியே போகவும் முடியாது. நாங்கள் சிறைக்கைதிகளைப் போல் உள்ளோம். குறைந்தபட்சம் நாங்கள் மட்டக்களப்புக்காவது போக விரும்புகிறோம். நாங்கள் இங்கே பலவந்தமாக தங்க வைக்கப்பட்டுள்ளோம்" என்றார் அவர். தொடர்ச்சியான இடப்பெயர்வால் அந்த முகாமில் உள்ள சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் அவர்கள் கல்வி கற்று வருகின்றனர். "மட்டக்களப்புக்கு நாங்கள் வெறுங்கையோடு சென்றோம். இப்போதும் வெறுங்கையோடுதான் திரும்பியுள்ளோம்" என்றார் ஒரு இளம் பெண். அடுத்து வாகரை ஆலங்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றோம். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1,615 மக்கள் அங்கு வசித்தனர். தங்களது வாழ்வு மீட்சியடையும் என்று நம்பிக்கையோடு உள்ளனர். அப்பிரதேசத்தில் உள்ள மூன்று முகாம்களில் 3,000 பேர் வசிக்கின்றனர். அங்கே தற்காலிக பாடசாலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாடு கொஞ்சம் உள்ளது. வாரம் ஒருமுறை நடமாடும் மருத்துவ சேவைக் குழுவினர் அங்கு சென்று பார்வையிடுகின்றனர். "மோசமான கழிப்பிட வசதி, சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றால் இடம்பெயர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர். போசாக்கின்மை பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. வாழைச்சேனைதான் அருகாமையில் உள்ள மருத்துவமனை. பொலநறுவையில் தங்கிவிட்டு ஏ-15 வீதியூடாக காயாங்கேணி பாலத்தைக் கடந்து வாகரை மற்றும் வெருகல் நோக்கி பயணித்தோம். காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு நிலங்களாக்கப்பட்டிருந்தன. மறைவிடங்களாக அவற்றை பயன்படுத்துவதைத் தடுக்க இராணுவத்தினர் இதனை மேற்கொண்டிருந்தனர். பனிச்சங்கேணியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் என "அடையாளம்" கண்டு கொள்ளும் வகையில் வீடுகள் அமைந்திருந்தன. வான்குண்டுத் தாக்குதலினால் அக்கிராம வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. பல்குழல் உந்துகணைத் தாக்குதல்களின் சத்தங்களைக் கேட்டுக் கொண்டே பனிச்சங்கேணி பாலத்தினூடே உப்பாறு பரவைக்கடல் பகுதி மேலாக வாகரை மருத்துவமனைக்குச் சென்றோம். மார்ச் 15 ஆம் நாளுக்கு முன்புவரை வாகரை மருத்துவமனை உள்ளிட்ட அப்பகுதி முழுவதுமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மருத்துவமனைக்கு சில அடிகள் தொலைவில் பெரிய இராணுவ முகாம், சோதனைச் சாவடி அமைந்துள்ளன. ஆழிப்பேரலையால் மருத்துவமனையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இருந்தபோதும் பிரசவம் பார்க்கும் பகுதியானது வான்குண்டுத் தாக்குதலில் அழிந்து போய் உள்ளது. 10 நோயாளர்களும் உயிரிழந்திருந்ததாக கூறினர். வான்குண்டுத் தாக்குதல் நிகழ்ந்தமைக்கான சாட்சியங்களாக அப்பகுதி முழுமையும் இருக்கிறது. கைவிடப்பட்ட நிலையில் பதுங்குகுழி ஒன்றும் இருந்தது. ஆனால் அது விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியாக முன்னர் இருக்கவில்லை என்று மருத்துவமனை பணியாளர்கள் மறுக்கின்றனர். இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது மருத்துவமனை வளாகம்தான் அகதிகள் முகாமாகவும் இருந்ததாகவும் அவர்கள் வான் குண்டுத் தாக்குதலில் இருந்து பதுங்கிக் கொள்ள அந்த பதுங்குகுழி அமைக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். மருத்துவமனைக்கு எதிரே ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட தேவாலயம் அமைந்துள்ளது. குண்டுகள் துளைத்த சுவர்களோடு அது இருக்கிறது. அதேபோல் கருணா குழுவினர் நடமாட்டத்தையும் நாம் காண முடிந்தது. இராணுவ முகாமிலிருந்து சிறிது தொலைவில் அவர்கள் இருந்தனர். என்னதான் ராஜபக்ச அமைச்சரவையில் உள்ள சிலர் மறுத்தாலும், கருணா குழுவினருடன் அரசாங்கம் இணைந்துதான் செயற்படுகிறது. மூதூர் பிரதேச செயலாளர் எம்.சி.எம்.செரீஃப் கூறுகையில், 42 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். மோதல்கள் வெடித்த பின்னர் அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டன என்றார். அவர் மேலும் கூறியதாவது: பெருந்தொகையான ஆழிப்பேரலை நிதி வந்தும் இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாமல் முகாம்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். 1,249 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டு 343 வீடுகள்தான் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 193 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. மூதூர் கிழக்கில் அல்லது சம்பூரில் 11 பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. 4 ஆயிரம் குடும்பத்தினர் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். அதி உயர் பாதுகாப்பு வலயத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு எப்படியான உதவிகள் செய்ய வேண்டும் என்கிற உத்தரவு எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் வெளியேறிய 4 ஆயிரம் குடும்பத்தினருக்கும் பட்டித்திடல் மற்றும் கிளிவெட்டி ஆகிய இடங்களில் இடைத்தங்கல் முகாம்களை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு சிலர் சென்றபோதும் பலரும் மட்டக்களப்பில்தான் உள்ளனர் என்றார் அவர். அரசாங்கம் கூறும்படி புலிகளிடமிருந்து கிழக்கு விடுவிக்கப்பட்டாலும் வறுமையாலும் பேதங்களாலும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கியோர் சூழ நிற்க இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. கிழக்கு வெற்றி என்று அரசாங்கம் போற்றிக் கொள்வது அதனது அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கலாம். ஆனால் கிழக்கில் உள்ள அப்பாவி பொதுமக்கள் இந்த பூமியின் நரகம் போன்ற மிகக் கொடூரமாக வாழ்கின்றனர் என்று அவர் எழுதியுள்ளார். |
நன்றி>பூதினம்.
No comments:
Post a Comment