Thursday, August 23, 2007

இராணுவத்தளபதியை எங்கும் குறிவைத்து தாக்க முடியும் என்பதனை நிரூபித்துக்காட்டிய புலிகள்: "டெய்லி மிரர்"


கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தளபதியே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர் என்று "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது.


சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு இன்று வெள்ளிக்கிழமை எழுதிய தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

கடந்த செவ்வாய்க்கிழமை (21.08.07) காலை 8.45 மணி அளவில் பலாலி வானூர்தித் தளத்தின் ஓடுபாதை வழமைக்கு மாறாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வான்படைத்தளத்தில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ தலைமையில் பல மூத்த இராணுவ அதிகாரிகள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்பதற்காக காத்திருந்தனர். அவர் சிறிது நேரத்தில் பலாலியில் தரையிறங்குவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

பொன்சேகாவின் இந்தப் பயணம் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில மூத்த படை அதிகாரிகளைத் தவிர ஏனையோருக்கு அது தெரிந்திருக்கவில்லை. காலை 7.00 மணியளவில் அன்ரனோவ்-32பி ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி பாலாலி செல்லும் பொருட்டு சில உயர் இராணுவ அதிகாரிகளுடன் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

ஆனால் அது சில நிமிடங்களே பறந்த பின்னர் பொன்சேகாவை ஏற்றிச்செல்லும் பொருட்டு அது கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் ஓடு பாதையில் தரையிறங்கியது. யாழ். செல்லும் அன்ரனோவ் வானூர்தியில் ஏறும் பொருட்டு கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அடைவதற்காக பொன்சேகா இராணுவ தலைமையகத்தின் மைதானத்தில் தரித்து நின்ற உலங்குவானூர்தியில் அப்போது தான் ஏறியிருந்தார்.

ஆனால் சிறிலங்கா வான்படையின் மிகவும் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் உலங்குவானூர்தி பென்சேகா ஏறிய நிலையிலும் பாதகமான காலநிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகியது. பாதகமான காலநிலை காரணமாக தன்னால் உலங்குவானூர்தியை செலுத்த முடியாதுள்ளதாக அதன் ஓட்டி தெரிவித்திருந்தார்.

அதேசமயம், யாழ்ப்பாணத்தில் 130 மி.மீ பீரங்கி எறிகணைகள் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தொடர்சிசியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி ஆகிய பகுதிகளில் அவை வீழ்ந்து வெடித்தன. தாக்குதல் 30 நிமிடங்கள் தொடர்ந்தன. அந்த முக்கியமான நேரத்தில் எதிர்பாராத இந்த தாக்குதலால் படைத்தளபதிகள் பெரும் குழப்பமடைந்தனர்.

திடீரென நடைபெற்ற இந்த பீரங்கித் தாக்குதலால் முழு குடாநாடும் முழுமையான உசார்நிலைக்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக பதில் நடைவடிக்கை எடுக்கப்பட்டது. பொன்சேகாவின் பயணத்தை நிறுத்தும் படி இராணுவத் தலைமையகத்திற்கும், இரத்மலானை, கட்டுநாயக்கா வானூர்தித் தளங்களுக்கும் தகவல் பறந்தது.

பொன்சேகாவை ஏற்றிய அன்ரனோவ்-32 வானூர்தி புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. அதே சமயம் விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தும் படி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் எனச் சந்தேகிக்கப்படும் பகுதியான பூநகரியில் உள்ள கல்முனை மீது பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் சரமாரியாக நடத்தப்பட்டன. கல்முனையில் இருந்து பலாலி வான்வழியாக 30 கி.மீ விட குறைவான தூரத்தையே உடையது. எனினும் விடுதலைப் புலிகளின் எறிகணைகள் பலாலி வான்படைத் தளத்தின் ஓடுபாதையை தாக்கவில்லை.

130 மி.மீ பீரங்கியின் எறிகணைகள் 27 கி.மீ தூர வீச்சுக் கொண்டவை. அது ஓடுபாதைக்கு அருகில் எங்கும் விழக்கூடியது. விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் நீண்டநேரம் நீடிக்கவில்லை. அவர்கள் மணல் திட்டிகளில் வைத்து பீரங்கியை பயன்படுத்தியிருக்கலாம் அதற்கு அவர்கள் பீரங்கியை உழவு இயந்திரத்தில் அல்லது வேறு வாகனங்களில் பொருத்தி எடுத்து வந்திருக்கலாம். தாக்குதலின் பின்னர் அவர்கள் அதனை விரைவாக நகர்த்தி விட்டனர்.

இராணுவத் தரப்பு தகவல்களின் படி விடுதலைப் புலிகள் 30 நிமிடங்களில் 18 எறிகணைகளை ஏவியுள்ளனர். யாழில் இருந்து தகவல் கிடைத்ததும் தனது பயணத்தை கைவிட்ட பொன்சேகா இராணுவ தலைமையகத்திற்கு திரும்பியிருந்தார்.

இராணுவத் தளபதி பலாலியில் தரையிறங்கும் நேரம் 8.45 மணி என்பதனால், அவரே குறிவைக்கப்பட்டிருந்தார் என்பது தெளிவானது. இராணுவத் தளபதிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தளபதியின் ஒவ்வொரு அசைவையும் தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும், அவரை எங்கும் தம்மால் குறிவைக்க முடியும் எனபதையும் விடுதலைப் புலிகள் இதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் தமது போராளிகளிடம் உளவுறுதியையும் அதிகரிக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால் மிகவும் இரகசியமான தகவல்களான இராணுவத் தளபதி மற்றும் படை உயர் அதிகாரிகளின் நடமாட்டங்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளை சென்றடைகின்றன என்பது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. இராணுவத்தில் உள்ள பல படையினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை வழங்குவதாக அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் வழமையான எறிகணைப் பரிமாற்றமே இது என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார்.

இராணுவத் தளபதி யாழில் இருந்திருந்தால் விடுதலைப் புலிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கலாம். அதனை அவர்களின் சார்பு ஊடகங்களின் மூலம் அதிகம் வெளிக்கொண்டு வந்தும் இருப்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு பலாலித் தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் பின்னரும், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வான் தாக்குதலுக்குப் பின்னரும் இந்த தாக்குதல் நடைபெற்றதனால் இந்த தாக்குதலை இராணுவம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகின்றது.

இதனிடையே, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை விடுதலைப் புலிகள் குறிவைத்துள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். இதனால் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கான அவரின் களமுனைப் பயணம் தாமதமாகி இருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: