Wednesday, August 22, 2007

சிறிலங்காவின் கடன் தொகை 3 றில்லியன்கள்: "த பொட்டம்லைன்"

சிறிலங்காவின் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாய்களை (3,000 பில்லியன் ரூபாய்கள்) எட்டியுள்ளது என்று "த பொட்டம்லைன்" என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.


அந்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் தமிழ் வடிவம்:

உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி கடந்த மே மாதம் வரையிலான சிறிலங்காவின் கடன் தொகை 2.77 றில்லியன் அல்லது 2,771 பில்லியன் ரூபாய்களாகும். இது கடந்த ஆண்டைவிட 387 பில்லியன் ரூபாய்கள் அதிகமாகும்.

இவற்றில்

வெளிநாட்டு கடன் தொகை 1.21 றில்லியன் ரூபாய்களும்,

உள்நாட்டு கடன் தொகை 1.56 றில்லியன் ரூபாய்களும் ஆகும்.

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டு கடன் தொகை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 10 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் இறுதிப்பகுதியின் பொருளாதார நிலையை பொறுத்த வரை பொதுமக்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அனைத்துலக பண சந்தையில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அல்லது 50 பில்லியன் ரூபாய்களை அரசாங்கப் பிணைகளை வைத்து கடனாக பெறுவதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த முயற்சியானது எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்த அதிகப்படியான கடன் கொள்வனவுகள் மக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் என சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் வெளிநாட்டு கடன் தொகைகளிற்கான மீள் செலுத்தல் தொகையாக 383 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது. இதில் 311 மில்லியன் டொலர்களே கடன் தொகைகளுக்கான மீள்கட்டுமான தொகையாகும். எஞ்சிய தொகை வட்டியும், ஏனைய செலவுத் தொகையுமாகும்.

இருந்த போதும், மே மாதம் வரையிலும் செலுத்தப்பட்ட கடன் மீளளிப்பு தவணைப்பணம் 2007 ஆம் ஆண்டுக்கான தவணைப் பணமான 860 மில்லியன் டொலர்களில் 44.5 விகிதமாகும்.

அரசாங்கத்தின் மொத்த கடன் தொகைக்கான வட்டிப் பணமானது 71 பில்லியன் ரூபாய்களாகும். இது 15 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.

"நாட்டுக்கு மேலதிக கடன் தேவையில்லை ஆனால் அதற்கான பெறுமதி தேவை" என்று பொருளியல் நிபுணரான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடனாக பெறும் 500 மில்லியன் டொலர்களை நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கு என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது வானூர்தி நிலையத்தின் நிர்மாணத்திற்கும், வானூர்தி சேவையின் தொடக்கத்திற்கும் இதனை அரசு பெறுகின்றது. அவர்கள் இந்த திட்டங்களில் பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்கும் அனுமதியளிக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் அதன் மூலம் அனுகூலங்களை அடைந்தால் அது எல்லோருக்கும் நன்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் உண்மையான கேள்வி என்னவெனில், உண்மையாகவே இந்த நிதி எதற்காக என்பது தான். இந்த நிதி எதற்கு என்பதற்கான எந்த திட்டங்களும் தற்போது இல்லை. இது உட்கட்டுமானப் பணிகளுக்காக இல்லை என்றால் அரசின் நாளாந்த வீண் செலவுகளுக்கே இந்த நிதி விரயமாகப் போகின்றது.

எனவே பொருளியல் நிபுணர்களின் பார்வையில் அரசு 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவது சரியோ அல்லது தவறோ என்பதல்ல விவாதம். ஆனால் அரசின் நோக்கம் என்ன? என்பது தான் முக்கியமானது. சுகாதாரம், கல்வி போன்றவற்றில் இருந்து எடுத்து வானூர்தி சேவைக்காக பலசரக்கு கடையை நடத்த அரசு முயன்றால் இத்தகைய கடன் பெறும் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்கு தொடரலாம் எனவும் ஹர்சா தெரிவித்தார்.

எனினும் இப்படிப்பட்ட கருத்துக்களை நிராகரித்த அரச தரப்பினர் நாட்டின் உட்கட்டுமானப் பணிகளுக்கே இந்த நிதி பெறப்படுவதாக தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது இந்த கடன் தொகை திருப்தியாக உள்தாகவும், தற்போது அது 90 விகிதமாக உள்ள போதும் 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அது 105 விகிதமாக இருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொடையாளிகளின் உதவிகளினால் நாடு பலன்களை அனுபவித்து வருகின்றது. கடந்த மே மாதம் வரையிலும் சிறிலங்காவுக்கான அனைத்துலகத்தின் உதவித்தொகையாக 874 மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்ட போதும் 331 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மே 31 ஆம் நாள் வரைக்கும் வழங்கப்படாத தொகையாக 4.7 பில்லியன் டொலர்கள் உள்ளன. பொதுவாக இந்த நிதி தொகைகள் கிடைப்பதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் எடுக்கலாம் என திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிக அழுத்தங்கள் உள்ள போதும் நாட்டின் செலவீடுகள் திருப்திகரமாக கையாளப்படுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரையில் செலவீடுகள் 12 விகிதத்தால் உயர்ந்துள்ளன. இது 318 பில்லியன் ரூபாய்களாகும்.

பொதுத்துறை, ஓய்வூதியத் திட்டம், வட்டிகளின் மீள் கட்டுமானம், பாதுகாப்பு தொடர்பான செலவீடுகள் போன்றவற்றால் தற்போதைய செலவீடுகள் வேகமாக அதிகரித்துள்ளன. 85 பில்லியன் ரூபாய்களாக உயர்ந்த இந்த தொகை 30 விகித அதிகரிப்பாகும். நாட்டின் வருமானம் 27 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இது 218 பில்லியன் ரூபாய்கள் அதிகரிப்பாகும், அதாவது மொத்த உற்பத்தியில் 6.7 விகிதம். எனவே 2007 ஆம் ஆண்டுக்கான வருமானத்தின் இலக்கை அடையும் நம்பிக்கை திறைசேரிக்கு உண்டு என்றும் அரச வட்டாரங்கள் தெரித்ததுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: