Thursday, August 02, 2007

இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத பெண் புலிகள்: அல்ஜசீரா!


தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களது தாயக விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத வகையில் மகளிர் படையணிகளை பெற்றுள்ளனர் என்று அல்ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தொடர்பாக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்தி எழுத்தாளர் கெய்லி கிரே கிளிநொச்சியில் இருந்து எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:

விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தமது நோக்கம் மற்றும் உரிமைகளுக்காக போராடுவதுடன், தமது படையணியையும் மேன்மைப்படுத்தியுள்ளார்கள். சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு இறுதித் தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தி வருகையில் அனைத்துப் பெண் போராளிகளின் படையணிகளும் தற்போது முன்னணி நிலைகளிலேயே மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இலங்கையில் உள்ள வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனிநாட்டிற்காக இறுதிவரை போராடி மரணிப்பதற்கு பெரும்பாலான பெண் போராளிகள் தயாராக உள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்ச அரசு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரவும், விடுதலைப் புலிகளை முறியடிக்கவும் திட்டமிட்டு வருகின்றது.

நவீனமயப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணியகத்திற்குச் சென்ற போது புதிய நவீன "அப்பிள்" கணணிகளில் பெண் போராளிகள் தமது இணையத்தளங்களுக்கான புதிய தகவல்களை இணைத்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

பெண் போராளிகள் தமது தலைமுடியை குட்டையாக வெட்டியும் பின்னலிட்டு கட்டியும் உள்ளதுடன், பச்சை நிற இராணுவச் சீருடையுடன் களத்திலும், வெள்ளை நிறச் சட்டைகளும், கறுப்பு நிற ஜீன்சுடன் களத்திற்கு வெளியிலும் காட்சியளித்தனர்.

அவர்கள் பாதுகாப்பு பணிகளுடன் தமது எதிரியான சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்பான தகவல்களையும் திரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவர்கள்.

அவர்களுக்கான பயிற்சிகள் கடுமையானவை. இராணுவப் பயிற்சிகளுக்கு அப்பால் கணணிப் பயிற்சி, மாவீரர்கள், விடுதலைப்புலிகளின் சமர்கள், தமிழ் மக்கள் தொடர்பான வரலாற்று பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. தற்போது பாடசாலைகள் இயங்கவில்லை ஏனெனில் எல்லா வீரர்களும் முன்னனிக் களங்களில் பணியாற்ற வேண்டிய தேவை விடுதலைப்புலிகளுக்கு உண்டு.

எவிடுதலைப் புலிகளின் அங்கீகரிக்கப்படாத தேசத்தில் அதன் தலைநகரத்தை நோக்கி பயணித்த போது நகரம் மிகவும் அபிவிருத்தி குன்றிய நிலையில் இருந்தது. பாடசாலைகளும், பல்வேறுபட்ட கட்டங்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வடுக்களை சுமந்து நிற்கின்றன.

விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்களின் சத்தங்கள் இரவு - பகலாக கேட்டுக் கொண்டே இருந்தது. எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மீதான பொருளாதாரத் தடையினால் அவை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதைக் காண முடிந்தது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஏ-9 நெடுஞ்சாலையை மூடியதன் மூலம் கிளிநொச்சியில் இருந்து வடபகுதியின் பொரும்பாலான இடங்களுடனான தொடர்பை அரசாங்கம் துண்டித்துள்ளது. இது ஒரு இரவில் பல குடும்பங்களையும் பிரித்துள்ளது.
னினும் தமது நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் பலமான நிலையில் உள்ளனர். அங்கு நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், நிர்வாகம் என்பன இயங்குகின்றன. எதிரிகளை விரைவில் வெளியேற்றுவோம் என தளபதிகள் கூறுகின்றனர். அவர்கள் தொடர்பாக பொதுமக்களின் உண்மையான அபிப்பிராயத்தை அறிவது கடினமானது.

விரும்பியோ விரும்பாமலே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல தமிழ் குடும்பங்கள் விடுதலைப்போர் என விடுதலைப் புலிகளால் அழைக்கப்படும் போருக்கு ஒரு பிள்ளையை கொடுக்க வேண்டும். எனினும் சிறார் படைச்சேர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

சிறார் படைச்சேர்ப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் உத்திகள் போன்றவற்றால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உட்பட 33 நாடுகள் அவர்களை பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளன.

ஆனால், விடுதலைப் புலிகளின் தனித்துவமான தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மகளிர் படையணிகளின் தளபதிகளின் முழுமையான ஆதரவுடன் மகளிர் படையணிகளை வழிநடத்தி வருகின்றார். இதில் மகளிர் படையணியின் அரசியல்துறைப் பொறுப்பாளர்களில் எஸ். தமிழினியும் ஒருவர்.

அனைத்துலக சமூகம் தவறான முடிவை எடுத்துள்ளதாக தமிழினி எம்மிடம் தெரிவித்தார். நாங்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகின்றோம். விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, நாம் விடுதலைப் போராளிகள். எமது இலக்குகள் பொதுமக்கள் அல்ல என அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் வசம் எவ்வளவு மகளிர் படையணிகள் உண்டு என்பதை தமிழினி கூறவில்லை எனினும் பெண் போராளிகளை சேர்ப்பதோ, நிதி சேகரிப்பதோ தமக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதில்லை எனவும் அவர் கூறினார்.

எமது மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மிகுந்த அறிவாளிகள். நிதித்துறையில் மட்டுமல்லாது உளவியல் ஆதரவிலும் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து தமது ஆதரவை எமக்கு வழங்கும் என அவர் தெரிவித்தார். ஆனால் 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போரில் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்கள் தான்.

கிளிநொச்சியில் உள்ள வெற்றி இல்லம் போரினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகமாகும். அங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். காப்பகம் தூய்மையாக இருந்த போதும் அங்கு வசதிகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அங்குள்ள பெண்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டே அமைதிப்படுத்தப்படுவது அல்லது தூங்க வைப்பதுண்டு.

தாம் தமது குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பதாகவும் அல்லது நீண்டகாலமாக வீட்டுக்குச் செல்லவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். சிலர் சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாகவும், சிலர் எறிகணை வீச்சுக்களினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வருடத்திலேயே நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தினர் வடபகுதியில் உள்ள யாழ். குடாநாட்டை கைப்பற்றியதில் இருந்து தான் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதாக ஜெகதா என்ற 21 வயதுப் பெண் தெரிவித்தார்.

எப்போது உங்களால் எமக்கு அமைதியை தர முடியும் எனவும் அவர் கேள்வியை எழுப்பியிருந்தார்.

தனது 19 ஆவது வயதில் விடுதலைப் புலிகளுடன் இணைந்ததாக 20 வயதான போராளி மாலதி தெரிவித்தார்.

"எறிகணைகளை எதிர்கொள்வது தான் முன்னணி நிலைகளில் உள்ள கடுமையான பணி. நான் சாவதற்கு முன்னர் எதிரியைக் கொல்ல வேண்டும் அப்போது தான் எனக்கு மனநிறைவு கிடைக்கும். அனைத்துலக சமூகம் விடுதலைப் போருக்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். எமது நாட்டுக்காக போராடும் போராளிகள் நாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போர்க்களத்திற்கு அப்பால் மாலதியின் மென்மையான உள்ளத்தை காண முடிந்தது.

"போரினால் பெண்களும், சிறுவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் பெண்களால் சிறந்த வீராங்கணைகளை உருவாக்க முடிந்துள்ளது. எனது தாய் நாட்டிற்கான போர் ஓய்ந்ததும் நான் தாயாக நினைக்கின்றேன்" என்று மாலதி மேலும் தெரிவித்தார்.

மீக நீண்ட நாட்களாக மாலதி தனது பெற்றோரைக் காணவில்லை. அவர்கள் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றனர். அது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிளிநொச்சியில் இருந்து அது பல காவலரண்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, மாலதியிடம் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு சென்று சமர்ப்பிக்க நான் முன்வந்த போதும். தனது பெற்றோர் உள்ளுரிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதால் அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமானது எனவும் மாலதி கூறினார்.

மாலதிக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே புதிய குடும்பம்.

"அவர் ஒரு தளபதி, தலைவர், தாய், தந்தை, மேலும் எனக்கு எல்லாமே அவர் தான்" என மாலதி தெரிவித்தார்.

மாலதியின் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் எவ்வளவு தூரம் அவரை விடுதலைப் போரை நோக்கி ஈர்த்துள்ளது, அதற்காக அவர் தனது உயிரை இழக்கும் தற்கொலை படையணியாக செயற்படுவாரா என அறியும் அவல் எனக்குள் எழுந்தது.

தலைவர் அனுமதி அளித்தால் நான் அதற்கு தயார் என மாலதி தெரிவித்தார்.

ஆனால் இறுதிவரை சண்டையிட்டு மரணமடைவதற்கு தயாராகவுள்ள மகளிர் படையணிகளின் எண்ணிக்கைக்கு குறைவில்லாத போதிலும், சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கில் முழு அளவிலான ஒரு போருக்கு தயாராகி வருகின்றனர். எனவே அமைதி என்பது எப்போதுமில்லாதவாறான தொலைவுக்கு நகர்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்

No comments: