Thursday, August 09, 2007

மனித உரிமை மீறல்கள் உள்ள மிகவும் ஆபத்தான நாடு இலங்கை-பிரித்தானியா சிறப்பு நீதிமன்றம்!!!

தமிழர்களை திருப்பியனுப்பும் போது இலங்கையில் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம்: பிரித்தானியா சிறப்பு நீதிமன்றம்.

தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் பட்சத்தில் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளுக்கான ஆபத்துக்கள் அதிகம் என்று அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பிரித்தானியாவின் அகதிகள் மற்றும் குடிவரவிற்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.


உயர்மட்ட விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களே இலங்கையில் தடுத்து வைக்கப்படுவதாகவும், சித்திரவதை செய்யப்படுவதாகவும், விடுதலைப் புலிகளுடன் குறைந்த அளவு தொடர்புகளை உடையவர்களை சிறிலங்கா அதிகாரிகள் தடுத்து வைப்பதில்லை என்ற உள்நாட்டு அலுவலகத்தின் வாதத்தையும் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பின்வரும் பட்டியலில் கீழ் உள்ளவர்களுக்கு இலங்கையில் ஆபத்துக்கள் அதிகம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

1. தமிழ் மக்கள்

2. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் அல்லது சந்தேக நபர்கள்

3. முன்பு குற்றச்செயல்களை புரிந்தவர்கள் அல்லது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்

4. தடுப்புக்காவலில் இருந்து தப்பியவர்கள் அல்லது பிணையில் செல்ல அனுமதித்த போது தப்பியவர்கள்

5. குற்றங்களுக்காக கையெழுத்திட செல்பவர்கள்

6. படையினரால் தகவல் தருபவராக செயற்படுமாறு கேட்கப்படுபவர்கள்

7. உடற்காயங்களுக்கு உள்ளானவர்கள்.

8. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை செய்த பின்னர் பிரித்தானியா அல்லது வேறு நாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோர்

9. சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியோர்

10. அடையாள அட்டைகள் அல்லது வேறு ஆவணங்கள் அற்றவர்கள்

11. வெளிநாடுகளில் புகலிடத் தஞ்சம் கோரியவர்கள்

12. விடுதலைப் புலிகளின் உறவினர்கள்.

மனித உரிமை மீறல்கள் உள்ள மிகவும் ஆபத்தான நாடாக இலங்கை உள்ளதனை நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து வந்து புகலிடத் தஞ்சமடையும் தமிழர்களை வெளியேற்றுவதை போத்துக்கல் அரசு அண்மையில் நிறுத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் மேலும் ஒருவரின் வழக்கு விசாரணையின் போது அவரை மறு அறிவித்தல் வரை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாம் என கடந்த ஜூன் 25 ஆம் நாள் உத்தரவிட்டிருந்தது.
நன்றி>புதினம்.

No comments: