Sunday, August 26, 2007

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்"

யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.


த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

பாதுகாப்புத் தரப்பு அதனை இரகசியமாக வைத்த போதும் "த நேசன்" வார ஏடு அதனை வெளிக்கொண்டு வந்திருந்தது. உலகத்திற்கு அது இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு தாம் என்ன செய்தோம், அது எப்படி தவறியது என்பது தொடர்பாக யாவும் தெரிந்திருக்கும்.

காலம் சந்திரசிறீக்கு சாதகமாக இருந்தது. முகமாலை முன்னரங்க நிலைகளுக்கான அவரது பயணம் தாமதமாகியதனால் பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் தனது பயணத்தை கைவிட்டிருந்தார். முன்னணி நிலைகளுக்கான இவரது பயணம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேரா, லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் களமுனைக்கு பயணத்தை மேற்கொண்ட நாளான கடந்த சனிக்கிழமைக்கு (18.08.2007) சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

படை நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும், தற்போதைய யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களையும் சந்திரசிறீ பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கும், படை உயர் அதிகாரிகளுக்கும் அப்போது விளக்கியதுடன் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கி தாக்குதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மூன்று நாட்களுக்குப்பின்னர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா யாழ். குடாநாட்டிற்கு தனது இரண்டாவது பயணத்தை கடந்த செவ்வாய்கிழமை மேற்கொண்டிருந்தார். இந்த தடவை அவரது நடவடிக்கை பணியக தலைவர் மேஜர் ஜெனரல் உதய பெரேராவும் அவருடன் கூடவே சென்றிருந்தார்.

பலாலி பிரிக்கேட் தலைமை அலுவலகத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட இரகசிய நடவடிக்கை அறையிலும் கடுமையான பணிகள் நடைபெற்றன.

அந்த நிகழ்வின் போதும், திறப்பு விழா நடைபெற்ற சில நாட்களில் ஏப்பிரல் 24 ஆம் நாள் விடுதலைப் புலிகள் 30 பீரங்கி எறிகணைகளை ஏவியிருந்தனர். அவற்றில் அரைவாசி பலாலியின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தன. தற்செயலாக அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை தான் நடைபெற்றது.

கடந்த செவ்வாய்கிழமை எறிகணைத் தாக்குதல் நடைபெற்ற நேரம் நான்கு டசினுக்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணிகள் வானூர்தி ஒன்றும் பலாலியில் தரையிறங்கியிருந்தது.

இந்த சம்பவங்கள் நடைபெற்ற போது படை உயர் அதிகாரிகள் நிலத்தடி பதுங்குகுழிக்குள் பதுங்கிக் கொண்டனர். காயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பின்னர் உயிரிழந்தார். கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலிலும் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. ஒக்ரோபர் 11 ஆம் நாள் முகமாலையில் நடைபெற்ற பெரும் சமருக்குப் பின்னர் முகமாலைக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்ற வேளை இது நடைபெற்றது.

சூரிய உதய வேளையில் ஜெனரல் சந்திரசிறீ தனது தலைமை அதிகாரியான ஜெனரல் பொன்சேகாவை வரவேற்பதற்காக பலாலி வான் படைத்தள ஓடுபாதையை நோக்கிச் சென்ற போதும், பொன்சேகா விடுதலைப் புலிகளின் பீரங்கி தாக்குதலைத் தொடர்ந்து தனது பயணத்தை கைவிட்டிருந்தார்.

இதில் இயற்கையும் விளையாடியிருந்தது. பொன்சேகாவை கட்டுநாயக்கா வான் படைத்தளத்தின் ஓடுபாதைக்கு ஏற்றிச் செல்ல தயாராக இருந்த உலங்குவானூர்தியின் ஓட்டி பாதகமான காலநிலையினால் வானூர்தியை செலுத்துவதை தாமதப்படுத்தியிருந்தார். இதனால் இராணுவத் தளபதியை ஏற்றிச் செல்லவிருந்த அன்ரனோவ்-32பி வானூர்தி குறித்த நேரத்தில் பலாலியில் தரையிறங்கவில்லை.

ஆரம்பத்தில் ஏற்பட்ட தாமதம் நேர ஒழுங்குகளில் பல குழப்பங்களை ஏற்படுத்தியதுடன், இராணுவத்தினருக்கும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

செவ்வாய்கிழமை காலை வீழ்ந்த எறிகணைகள் பலாலியில் இருந்த இராணுவத் தளபதிகளுக்கு பெரும் அதிர்ச்சியான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தது. அது பின்னர் கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டிருந்தது.

சந்திரசிறீயின் களமுனைப் பயணம், பொன்சேகாவின் யாழ். குடாநாட்டுக்கான பயணம் ஆகியவற்றின் போது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்களின் துல்லியமான நேரத் தெரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது சம்பவத்தில் சந்திரசிறீ இராணுவத் தளபதியை வரவேற்க சென்றிருந்தார்.

பயணிகள் வானூர்தியை இராணுவத் தளபதி பயணம் செய்த வானூர்தி என விடுதலைப் புலிகள் தவறாக எண்ணியது. பலாலியில் இருந்து அல்லது கொழும்பில் இருந்தே அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது அல்லது மேலதிகமான உணவு தயாரிப்பு வகைகள் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போதான கடுமையான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப் புலிகள் அதனை அறிந்திருக்கலாம்.

கடந்த பெப்ரவரி மாதம் கொடிகாமத்தில் நடைபெற்ற பீரங்கித் தாக்குதலுக்கும் இறுதியாக நடைபெற்ற பீரங்கி தாக்குதலுக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு வேறுபாடு உண்டு. கொடிகாமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கவசத்தாக்குதல் படைப் பிரிக்கேட்டின் கட்டளைத் தளபதியான லெப்.கேணல் ரால்ஃப் நுகெரா உட்பட ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். எனினும் கொடிகாமத்தில் நடைபெற்ற தாக்குதலின் போது அதற்கான தகவல் யாழ்பாணத்தில் இருந்து வழங்கப்பட்டதாகவே தெரிகின்றது.

கடந்த சில மாதங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் உள்ள வெபர் மைதானம் மீது நடைபெற்ற பீரங்கித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திரிகள் வானூர்தியில் பயணித்தது தெரியாது என சிலர் நம்புகின்றனர். விடுதலைப் புலிகள் அமைச்சர்களையும், ஏனைய அதிகாரிகளையுமே குறிவைத்திருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்த பயணம் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஒழுங்குகளை அதிகாரிகளும், தொண்டர் நிறுவன அதிகாரிகளும், மட்டக்களப்பில் உள்ள ஏனையோரும் ஒருங்கிணைத்திருந்தனர். எனவே இது விடுதலைப் புலிகளுக்கு தெரியும் என ஏனையோர் நம்புகின்றனர். பாதுகாப்பு காரணங்களால் இந்தப் பயணத்தை தவிர்க்கும் படி இராஜதந்திரிகளை பாதுகாப்புதுறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான மிக முக்கிய பிரமுகர்களை குறிவைத்து விடுதலைப் புலிகள் நான்கு பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்னர் பலாலியின் உயர் பாதுகாப்பு வலயமும் வானூர்தி ஓடுபாதையும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தன. அதன் போது வானூர்தி ஒடுபாதை மூடப்பட்டது. இந்த தாக்குதல் நடவடிக்கை அறை திறக்கப்பட்ட சில நாட்களில் நடைபெற்றது.

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான தாக்குதலை விட இராணுவம் முகமாலை நகர்கோவில் அச்சில் இருந்து பளையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற முயற்சிப்பதை தடுப்பதில் தான் விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் சமர் ஒன்றிற்கு தயாராகி வருகின்றனர் என்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது. மன்னார் களமுனையின் முன்னணி நிலைகளில் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் பூநகரிக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

பூநகரிப் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதல் யாழ். குடாநாட்டின் முன்னணி நிலைகளில் இருந்து நடத்தப்பட்ட இராணுவத்தினரின் பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் கடுமையான தாக்குதல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் பதிவு செய்துள்ளது.

பூநகரிப் பகுதி மீது தாக்குதலை நடத்தி அதனை படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமே அந்தப் பகுதியில் இருந்து நடத்தப்படும் பீரங்கித் தாக்குதல்களை நிறுத்த முடியும்.

படையினரால் கிழக்குப் பகுதி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர். திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படையின் தளம் என்பன விடுதலைப் புலிகள் உட்புக முடியாத பகுதிகளாகி விட்டன. எனவே பலாலித் தளத்தினூடான படையினர் மற்றும் பொருட்களின் விநியோகங்களை தடுப்பதே விடுதலைப் புலிகளின் மாற்றீடான உத்தியாகும்.

கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பீரங்கி எறிகணைகள் காங்கேசன்துறையிலும் வீழ்ந்து வெடித்திருந்தன. பருவ மழை காலத்தில் வானூர்திகள் மூலம் நடைபெறும் விநியோகங்களை தடுப்பதே பலாலி வான்படை ஓடுதளத்தின் மீதான தாக்குதலின் மற்றுமொரு காரணம். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூதூரிலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெற்ற சமர்களில் விடுதலைப் புலிகள் தமது சுடுவலுவின் தன்மையை வெளிக்காட்டியிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலால் பலாலிக்கான பயணத்தை கைவிட்ட இராணுவத் தளபதி பாதுகாப்பு நிலமைகளை ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை வன்னிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். வன்னி களமுனையின் முழு கட்டளைப்பீடமும் அண்மையில் மாற்றப்பட்டிருந்தது. இராணுவத் தளபதியை வன்னிப் பகுதி இராணுவக் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய வவுனியாவில் வரவேற்றார்.

வன்னி மீதான இராணுவத் தாக்குதல்கள் தொடர்பாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் அது யாழ்ப்பாணத்திலா அல்லது வன்னியிலா? என்பது தெரியவில்லை. ஆனால் இரு பகுதிகளிலும் சந்தர்ப்பம் இல்லை என்பதே வெளிப்படை. ஏனெனில் எதிரியின் பொறிக்குள் செல்ல முடியாது.

குறுகிய மற்றும் நீண்டகாலம் என இரு காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் ஜெனரல் சந்திரசிறீயை அகற்ற முற்படுகின்றனர். அதாவது யாழ். குடாநாட்டை கைப்பற்றுவது விடுதலைப் புலிகளின் இலக்கு அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர். இலக்கை அவர்கள் அடையாது விட்டாலும், உளவியல் தாக்கங்களை உருவாக்க முற்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசின் இராணுவத் திட்டங்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.

நீண்டகால உத்திகளாக, உறுதியான அரசியல் தலைவர்களை அகற்றியதனைப் போல வலிமையான இராணுவத் தளபதிகளை அகற்ற விடுதலைப் புலிகள் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த வேளையில் லலித் அத்துலத்முதலி, காமினி திசநாயக்க, ரஞ்சன் விஜயரத்ன போன்றவர்கள் நினைவில் வருகின்றனர்.

எதிர்காலத்தில் இராணுவத் தளபதியாக வரும் தகுதி ஜெனரல் சந்திரசிறீக்கு இருப்பதனால் அவர் இயற்கையாக குறிவைக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் மூன்றாம் நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா கொல்லப்பட்ட பின்னரும், அதன் தளபதியான பொன்சேகா காயமடைந்த பின்னரும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் விடுதலைப் புலிகள் ஊடுருவுவது மிகவும் கடினமாகியுள்ளது.

எனினும் இராணுவத்தினர் தம்மிடம் உள்ள ஒட்டைகளை அடைக்கும் வரைக்கும், தமது உயர் அதிகாரிகளின் பயணங்களை இரகசியமாகப் பேணும் வரைக்கும் பீரங்கிகளே விடுதலைப் புலிகளின் பதிலாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: