கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் மீதான முறைப்பாடுகளை மட்டக்களப்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாக கொழும்பு ஆங்கில வார ஏடான "தி நேசன்" சாடியுள்ளது.
இது தொடர்பில் அந்த ஏடு வெளியிட்டுள்ள செய்தி:
கிழக்கின் பல பகுதிகளில் கருணா குழுவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கில் "உண்மையான" கட்டுப்பாட்டை கருணா குழுவினர் எடுத்து வருகின்றனர். இது அப்பிரதேசத்தில் உளவியல் ரீதியான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
"தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படையாக இங்கு இயங்கியபோது கூட இப்படியான மோசமான நிலைமை இருந்தது இல்லை" என்று எமக்குத் தகவல் அளித்தநபர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிரதான கட்சிகள், மட்டக்களப்பு காவல்துறை அதிகாரி மக்ஸி ப்ரொக்டர் உள்ளிட்டோரிடம் எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
"கடந்த வியாழக்கிழமை 16 வயது இளைஞர்கள் இருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்றனர். இளைஞர்களின் பெற்றோர், காவல்துறையிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்தாலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாது என்பதால் அம்முடிவுக்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்" என்றும் எமக்குத் தகவல் வழங்கிய நபர் கூறினார்.
பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு அப்பால், கப்பம் அறவிடுதலை தமிழர்களிடமிருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோர்கள் தலைமறைவாக வேண்டிய நிலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாடசாலை மாணவர்களை பலவந்தமாக கடத்திச் சென்று இராணுவப் பயிற்சிகளை கருணா குழுவினர் மேற்கொண்டு வருவதால் இந்த நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் முறைப்பாடு செய்தாலும் அதனை அக்குழுவினருக்கும் காவல்துறையினர் தெரிவித்து விடுகின்றனர். இதனால் அக்குடும்பத்தினர் சித்திரவதைக்குள்ளாகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவினரின் வன்முறைகள் குறித்து அண்மையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Sunday, August 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment