கீழ்த்தரமான போர் உத்திகளை கையாள தமது இராணுவத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது போல் அதன் துஸ்ப்பிரயோகங்கள் உள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது.
அமெரிக்கா, நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பு இன்று திங்கட்கிழமை "இலங்கை- அரசாங்க துஸ்ப்பிரயோகம் தீவிரமடைகிறது- தண்டனைகளிலிருநது பாதுகாப்பளிக்கும் அதிகார சூழ்நிலையில் கொலைகள்- கடத்தல்கள் மற்றும் இடப்பெயர்வுகள் அதிகரிக்கின்றன" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பாரியளவில் போர் மீண்டும் மூண்டதிலிருந்து சட்டவிரோதக் கொலைகள், வலுக்கட்டாயமான காணமற் போதல்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பாகவுள்ளது என மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு, இன்று வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 18 மாதங்களுக்கு மேலாக அரசாங்கப் படைகளினாலான துஸ்ப்பிரயோகங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் கண்காணிப்புக் குழுவை நியமிப்பதற்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் கரிசனை கொண்ட அரசுகளின் ஆதரவையும் கோரியுள்ளது.
பொதுமக்களை இலக்காகக் கொண்ட கொலைகள், அச்சுறுத்திப் பணம் பெறுதல் மற்றும் படைகளில் சிறுவர்களை பயன்படுத்தல் என பல தீவிரமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்களாக ஆயுதம் தாங்கிய தமிழ்ப் பிரிவினைவாதக் குழுவான தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவற்றைக் கண்டித்துமுள்ளது.
"போரிற்கு மீளல்: முற்றுகையின் கீழ் மனித உரிமைகள்" எனும் புதிய 129 பக்க அறிக்கை, அரசாங்கப் படைகளினாலான மீறல்களின் அதிர்ச்சிகரமான அதிகரிப்பு பற்றி பாதிக்கப்பட்டவர்களினதும் மற்றும் கண்கண்ட சாட்சிகளதும் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த மீறல்களின் விளைவுகளை தமிழ் மக்களே தாங்கிக்கொண்டனர் என இவ்வறிக்கை கூறுவதுடன், முஸ்லிம் மற்றும் பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தினரைக்கூட அரசாங்க துஸ்ப்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பளிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறுகிறது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ், "சிறிலங்கா அரசாங்கம் அதன் பாதுகாப்புப் படைகளிற்கு கீழ்த்தரமான போர் உத்திகளை கையாள்வதற்கு சம்மதத்தை கொடுத்துள்ளாற் போலுள்ளது" என்று கூறுகிறார்.
கொலைகள், காணாமற்; போதல்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றல் போன்ற அரசின் திட்டமிட்ட செயல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் துஸ்ப்பிரயோகங்கள் ஒரு சமாதானமாக அமையாது.
அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெயரளவில் நடைமுறையிலுள்ளது. எனினும், பாரியளவிலான மோதல்கள் 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பித்துள்ளன. அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும், குடிமக்களது பாதுகாப்பில் கரிசனை எதுவுமின்றி நாட்டின் வட கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
பாதுகாப்புப் படைகள் பொதுமக்களை கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குள்ளாக்கியதுடன், மனிதாபிமான உதவிகளின் விநியோகத்துக்கும் முட்டுக்கட்டையிட்டது.
ஓகஸ்ட் 2006 இலிருந்தான சண்டைகளின் பின்னர் சுமார் 315,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓட வேண்டியிருந்ததுள்ளதுடன், இதில் பெரும்பான்மையானோர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாவர். மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 100,000 பேர்கள் இடம்பெயர்ந்தனர். அரசாங்க அதிகாரிகள், இவர்களுள் சிலரை, தொடர்ந்தும் பாதுகாப்பின்றி இருந்த பகுதிகளுக்கு மீள்திரும்புமாறு வற்புறுத்தினர்.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக கடத்தல்கள், காணாமல் போதல்கள் போன்றவை கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்தல் காணப்படுதலை ஆவணப்படுத்தியுள்ளது.
ஜனவரி 2006 மற்றும் ஜூன் 2007 இடையில் இவ்விதமான 1,00 புதிய சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பெருமளவிலானோர் தமிழர்களாவர். தமிழீழ விடுதலைப் புலிகள், நீண்ட காலமாக கடத்தல்களுக்கு பொறுப்பானவர்களாக இருக்கையில் அண்மைக்காலமாக பெருமளவிலான "காணாமற்போதல்கள்" என்பவற்றிற்குப் பொறுப்பானவர்களாக அரசாங்கப்படைகளை அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுக்களையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
அரச படைகளின் தீவிர கட்டுப்பாட்டிலுள்ள வடக்கின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட மக்கள் டிசம்பர் 2005 மற்றும் ஏப்பிரல் 2007 இடையிலான காலப்பகுதியில் காணமற் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 241 பேர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். அநேகமான இச்சம்பவங்களில் பாதுகாப்புப்படையினர்
சம்பந்தப்பட்டிருந்ததாக அல்லது கடத்தல்களில் தொடர்புபட்டிருந்ததாக சாட்சிகளும் மற்றும் குடும்ப அங்கத்துவர்களும் குற்றங்சாட்டுகின்றனர். ஓகஸ்ட் 2006 இல், அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீள் அறிமுகப்படுத்தியதானது, இலங்கை மற்றும் அனைத்துலகச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பளிக்கப்பட்டிருந்த ஒரு தொகை அமைதிச் செயற்பாடுகளை குற்றவியல் குற்றங்களாக்கியுள்ளது. அரசாங்கம், இச்சட்டங்களை, அதன் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகத்துறையினரை குற்றஞ்சாட்டப் பயன்படுத்தியுள்ளது.
இவ்வறிக்கை, இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமடைந்து செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் ஓகஸ்ட் 2005 இலிருந்து 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அரசாங்கத்தினதும் கடுமையான அச்சுறுத்தல்களின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளது.
ஆனால் அரசாங்கம் விமர்சன நோக்கிலான கருத்துகள் மற்றும் செய்திகளை வெளிவிடும் சிங்கள மொழி வெளியீடுகள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கிறது.
அரசாங்கம், ஆயுத மோதல் மீதான அதன் அணுகுமுறை அல்லது அதன் மனித உரிமை மீறல்கள் குறித்து வினாவும் அல்லது விமர்சனம் செய்பவர்களின் குரல்களை மௌனிப்பதற்கு முயற்சிக்கிறது. அது, சாத்வீகமான மான முறையில கண்டனம் செய்பவர்களை துரோகிகள், பயங்கரவாதத்தின் அனுதாபிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறி நிராகரிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அரசாங்கத்தின் மோதலையும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய வாதங்களையும் பயன்படுத்தி இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை நசுக்கிறது என்று கூறினார் அடம்ஸ்.
இது, மோதல் காலங்களில் கூட பேச்சுச் சுதந்திரத்தை நீண்ட பாரம்பரியமாகக் கொண்ட ஒரு நாட்டில் மிகவும் கவலையளிக்கின்ற மாற்றமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
2004 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்து சென்று இப்பொழுது புலிகளுக்கு எதிராக சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆயுதக் குழுவான கருணா குழு தொடர்ந்தும் சிறுவர்களையும் இளம் வாலிபர்களையும் சிறிலங்கா அரசாங்கத்தினது ஒத்தாசையுடன் அல்லது இணங்குதலுடன் தனது படைகளில் பலவந்தமாக இணைத்து வருகிறது.
யுனிசெஃப் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து கருணா குழுவினரால் சேர்க்கப்பட்ட மற்றும் மறுபடியும் சேர்க்கப்பட்ட சிறுவர்களின் 145-க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஆதாரப்படுத்தியுள்ளது, இதன் உண்மையான தொகை இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும்.
அத்துடன் கருணா குழுவினர் மட்டக்களப்பு, வவுனியா மற்றும் தலைநகர் கொழும்பில் கப்பம் பெறுவதற்காக பெருந்தொகையான தமிழ் வர்த்தகர்களையும் கடத்தியுள்ளனர். கருணா குழுவினரது கடத்தல்களில் அரசின் உடந்தை பற்றி விசாரணைகள் மேற்கொள்வதாக மீண்டும், மீண்டும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இதுவரைக்கும் இவ்விதமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடாததுடன், கடத்தல்களும் குறைவில்லாமல் தொடர்கின்றன.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது ஜனவரி 2007 அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பாராமுகத்துடன் அல்லது உடந்தையுடன் நடைபெறுகின்ற கருணா குழுவினரது கடத்தல்களின் போக்கு பற்றி சுட்டிக்காட்டியிருந்தது.
அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் மனித உரிமைகள் மீறல்களுக்கான தண்டனைப் பாதுகாப்பு இலங்கையில் ஓரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருவதுடன், கவலையளிக்கும் ஓர் நியதியாக தொடர்ந்துமுள்ளது. மோதல்கள் தீவிரமடைந்து செல்லும்
சூழ்நிலையிலும், அரசாங்கப் படைகள் துஸ்பபிரயோகங்களின் நீண்டதோர் பட்டியலில் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு வரும் நிலையிலும், இக்கடுமையான மீறல்களுக்கு பொறுப்பானவர்களை வகை கூறவைப்பதில் அரசாங்கம் அதன் அசிரத்தையை தெளிவாக வெளிக்காட்டி வருகிறது.
அரசாங்கம் மற்றும் புலிகள் ஆகியோரிலான குறிப்பிட்ட மோசமான மனித உரிமைத் துஸ்ப்பிரயோகச் சம்பவங்களை விசாரிப்பதற்கென 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் அரச தலைவர் விசாரணைக்குழு நாட்டில் மோசமடைந்து செல்லும் மனித உரிமை நிலைமைகளை கையாளவதற்கு போதுமானதாக இல்லை என இவ்வறிக்கை கூறுகிறது.
இந்த விசாரணைக்குழுவின் உருவாக்கம், குற்றங்களுக்கான வகைகூறல்களை ஊக்குவிப்பதற்கும் எதிர்கால துஸ்ப்பிரயோகங்களை குறைப்பதற்கும் பதிலாக உள்ளுர் மற்றும் அனைத்துலக விமர்சனங்களிலிருந்து தப்புகின்ற ஒரு முயற்சியாகவே காணப்படுகிறது.
அரசாங்கம், துஸ்ப்பிரயோகங்களை முடிவுறுத்துவதற்கும் விசாரணை செய்வதற்கும் திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை அளித்த போதிலும் ஒரு பயனுறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அரசியல் துணிவின்மையையே வெளிக்காட்டியது என அடம்ஸ் கூறினார்.
அரசாங்க நிறுவனங்கள் துஸ்ப்பிரயோகங்களின் அளவையும் மற்றும் தீவிரத்தையும் கையாள்வதிலான இயலாமையை அல்லது ஆர்வமின்மையையே எடுத்துக்காட்டின.
போர் நிலவரங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பு உட்பட அனைத்துலகச் சட்டங்களுக்கான மதிப்பையளிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருவர் மீதும் தங்களது செல்வாக்கை உபயோகிக்கும்படி சிறிலங்காவின் அனைத்துலக நன்கொடையாளர்களிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகிறது.
அனைத்துலக உதவிகளை ஓர் ஆயுதமாக சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மேம்படும் வரைக்கும் உதவிகளை மட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி நாட்டு அரசாங்கங்கள் அண்மையில் தீர்மானித்துள்ளன.
அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருவரினதும் நடைமுறைகளில் ஓர் மாற்றத்தை ஊக்குவிக்கும் முகமாக சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை கடுமையான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கு ஆதரவாக கரிசனங் கொண்ட நாடுகளின் அரசுகளும் பணியாற்றுதல் வேண்டும் என இவ்வறிக்கை கூறுகிறது.
மிக முக்கியமாக, அரசாங்கம், புலிகள் மற்றும் கருணா குழுவினர்களினாலான துஸ்ப்பிரயோகங்களைக் கண்காணிப்பதற்கு, விசாரிப்பதற்கு மற்றும் அறிக்கையிடுவதற்குமான ஆணையுடன் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்புச் சபை ஒன்றை நிறுவுவதற்கும் சிறிலங்கா அரசாங்கமும் மற்றும் கரிசனங்கொண்ட நாடுகளும் பணியாற்றுதல் வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்புச் சபை இலங்கையில் அமைந்தால் அது குடிமக்களைப் பாதுகாக்க உதவுவதுடன் தண்டனைகளிலிருந்தான பாதுகாப்பை முடிவுறுத்தி மனித உரிமைகளை மதிக்கின்ற ஓர் தீர்வை மோதல்களுக்கு தீர்வாக கொணடுவர ஊக்குவிக்கும் என்றார் அடம்ஸ் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Monday, August 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment