Friday, August 17, 2007

"எனக்குத் தீர்க்க வேண்டிய கணக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக இருக்கின்றது"

எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன்.

செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.


கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

செஞ்சோலையில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் காயமடைந்து இரண்டு நாட்கள் படுக்கையில் இருந்து தன்னுடைய உறவுகளுடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு சாவைத் தழுவிக்கொண்ட அந்தப்பிள்ளையை நினைவு கூருகின்றேன். அந்தப்பிள்ளை மிகத் தெளிவாகப் பல செய்திகளை உரையாடிச் சென்றிருக்கின்றது.

அது என்னவெனில், நாங்கள் எங்களுடைய உற்சாகத்தை, எதிர்பார்ப்பை கைவிடக்கூடாது. எங்களுக்குத் தீங்கு விளைவித்த வானூர்திகளை நாங்கள் எப்படியும் வீழ்த்தி அதற்கூடான ஒரு வாழ்வை நாங்கள் அமைக்க வேண்டுமென்ற பொருள்படக் கூறித்தான் அந்தப் பிள்ளை உயிரிழந்தார்.

ஆகவே இதனூடாக நாங்கள் ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றோம். இத்தனை கால அடக்குமுறைகளுக்கான விடையைத் தேட வேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் தேசியத் தலைமைக்கு இருக்கின்றது. அதனுடன் சேர்ந்து அந்த விடையைக் காண்பதற்கான பாதையை இலகுபடுத்த வேண்டிய பொறுப்பு எமது மக்களுடையது.

நாங்கள் ஒரு சோகம் கவிந்த மௌனத்தில் வாழும் போது சிங்கள தேசத்திலும் ஒரு விசித்திரமான அமைதி நிலவுகின்றது. மிகப்பெரிய ஒரு கொடிய ஆட்சி, உலகத்திலே கடைகெட்ட, தரந்தாழ்ந்த ஒரு ஆட்சி, பிணங்களின் மீது நடத்துகின்ற ஆட்சி மகிந்தவால் நடத்தப்படுகிறது.

ஒரு நாட்டினுடைய அரச தலைவரே கடத்தல் காரணகர்த்தா ஆகிறார். அவர் தீர்மானிக்கின்ற அந்தக் கடத்தல் பணத்தை பங்கு போடக்கூடிய ஆட்சி நடக்கின்றது. அங்கேயும் ஒரு விசித்திரமான அமைதி இருக்கின்றது. அந்த அமைதிக்குள் ஒரு தீர்விருக்கின்றது. தமிழர்களைத் தானே வெல்லுகின்றோம் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். இதுபற்றி பேசிப்பயனில்லை. அதனுடைய முடிவு நாள். அந்த நாள் ஊழிப் பெருநாள். புத்தர் தன் செய்தியிலேயே கூறியிருக்கின்றார். நீ கடைசியாகப் போகும் போது கட்டுச்சோறு கூடக் கிடையாது என்று. அது சிங்களவரைத்தான் சேரும் என்று நினைக்கின்றேன்.

ஆகவே 56 ஆம் ஆண்டு தொடக்கம் எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொத்துக் கொத்தான ஒவ்வொரு இனப்படுகொலைக்கும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அதற்குக் காரணமானவர்களுக்கு என்றோ ஒருநாள் நாம் நிச்சயமாகக் கணக்குத் தீர்த்துக் கொள்வோம். அண்மையிலே தலைவர் எங்களுக்குக் கூறினார். "எனக்குத் தீர்க்க வேண்டிய கணக்கு நீண்ட காலமாக இருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக இருக்கின்றது" என்றார் க.வே.பாலகுமாரன்.
நன்றி>புதினம்

No comments: