Wednesday, August 01, 2007

வேண்டாம்... வலிக்குது... அழுதிடுவன்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத் தரப்பை குறிப்பா மகிந்த ராஜபக்சவை பீதியடைவைத்துள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆக்கிரமிப்பிற்காக பெருமளவு படை பலத்தை கிழக்கில் குவித்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கிருந்து படையினரை விலக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் விடுதலைப்புலிகள் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தால் கிழக்கில் இருந்து படையினரும் ஆயுத தளபாடங்களும் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டும்.

அவ்வாறு நகர்த்தப்படும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஏது நிலைகள் காணப்படுவதால் அரசாங்கம் தற்போது குழப்பமடைந்துள்ளது.

இந்தக் குழப்பத்தின் வெளிப்பாடகவே கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கு உதவுமாறு நோர்வே அனுசரணையாளர்களையும் இணைத்தலைமை நாடுகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக ஆதரவுடன் கிழக்கில் தேர்தலை நடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அபாயத்தில் இருந்து தப்புவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிக்கின்றது.

எனினும் விடுதலைப் புலிகள் கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிடம் காணப்படுகின்றது.

ஆனால் விடுதலைப்புலிகள் எங்கு தமது புதிய கள முனையை திறக்கப் போகின்றார்கள் என்பதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தை குழப்பமடைய வைத்துள்ள கேள்வி?

அண்மையில் மன்னார் முன்னரங்கள நிலைகளில் இடம்பெற்ற மோதல்கள் வவுனியா முன்னரங்க நிலையில் தோன்றியுள்ள பதற்றம் என்பன விடுதலைப்புலிகளின் புதிய களமுறை வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அதேவேளை இலங்கையின் போரியல் ஆய்வாளர்களில் ஒருவரான இக்கபால் அத்தாஸ் புலிகளின் தாக்குதல் மணலாற்றினை நோக்கியதாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ளார்.

எனினும் கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவிற்கு புலிகளின் பதில் வேறு விதமாக இருக்கும் என்று வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.

அந்த வேறு விதமான பதில் என்ன என்பதுதான் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தற்போதைய குழப்பத்தின் காரணம்.

புலிகளின் பதில் தனது உயிராக இருக்குமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவை கோடிக்கணக்கில் செலவளித்து கட்டிய பதுங்கு குழியை விட்டு வெளியேற்றி மலை நாட்டில் தஞ்சமடைய வைத்துள்ளது.

கண்டியில் தங்கினாலும் கதிர்காம கந்தனுக்கு நேர்த்தி கடன் வைத்து விட்டு தான் வந்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச புலிகளின் யுத்த வானூர்தி வந்தால் கந்தனே வேலெறிந்து வீழ்த்து என்று மன்றாடியிருக்கலாம்.

தன்னை சுற்றி இருப்பவர்களையும் தலைக்கு மேல் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் விமான எதிர்ப்பு பிரங்கிகளையோ மகிந்த ராஜபக்ச நம்ப தயாரில்லை

எல்லாம் அவன் செயல் என்று முருகன் மீதும் கௌதம புத்தர் மீதும் பாரத்தை போட்டு விட்டு கண்டியில் இருந்து அலரிமாளிகைக்கு வந்து போகிறாராம் மகிந்த ராஜபக்ச.

தனது இராணுவத்திடம் இருக்கும் சுடுகலன்கள் கொண்டு விடுதலைப் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியாது என்று மகிந்த ராஜபக்ச தீவிரமாக நம்புகின்றார். அதனால் தான் இந்த இடம்பெயர்வாம்.

எது போனாலும் பரவாயில்லை தனது உயிர் போகக் கூடாது என்பதில் மகிந்த ராஜபக்ச காட்டி வரும் அக்கறை அவரது அமைச்சர்களே அவரை பரிதாபமாக பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச கிழக்கின் வெற்றியை தேசிய விழாவாக கொண்டாடி சேடமிளுக்கும் தனது அரசாங்கத்தின் ஆயட்காலத்தை சில மாதங்கள் நீடிக்க முயற்ச்சித்துள்ளார்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் தனித் தனியாக அரசாங்கத்தை கவிழ்ப்பதில் கவனமாக உள்ளனர்.

ஜே.வி.பியின் விமல் வீரவங்சவின் தயவில் அரசாங்கம் பெரும்பான்மையை தக்க வைக்க முயற்சித்தாலும் காலப் போக்கில் விமல் வீரவங்சவையும் மீறி ஜே.வி.பி அரசாங்கத்தின் முதுகில் குத்திவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேபோல் அதிகரித்து வரும் வாழ்கைச் செலவு புலிகளின் விமானங்களுக்கு ஒப்பாக மகிந்த ராஜபக்சவை அச்சுறுத்தி வருகின்றது.

107 அமைச்சர்கள் கொண்ட பெரிய அமைச்சரவை, திட்டமிடப்படாத தாக்குதல்கள் விழுங்கும் கோடிகள், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு என மகிந்த ராஜபக்சவை கொல்லாமல் கொல்லும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறம்.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு தீர்வு யோசனைகளை முன்வைத்தால் தான் பணம் என அறிவித்து விட்டு தீர்வு யோசனைகளுக்காக காத்திருக்கும் அனைத்துலக சமூகம் மறு புறம்.

இவற்றிற்கிடையில் கடத்தல் காணமல் போதல் மனித உரிமை மீறல் என விடாமல் ஒலிக்கும் ஒப்பாரிகள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு பேராதரவு தருவார்கள் என்று நம்பிய கருணாவும், டக்ளசும் தங்களுக்குள் ஆடும் ஆட்டங்கள் போடும் கூத்துகள்.

தபால் நிலைய ஊழியர்கள் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வரையாக இலங்கையின் அத்தனை அரசாங்க திணைக்களங்களிலும் தொழிற்சங்க பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள்.

ரஜரட்ட பேராதனை என தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் மோதல்களும் போராட்டங்களும்.

இவை போதாது என்று புலிகளின் புதிய கள முனை அங்கேயா இங்கேயா எங்கேயா எனும் தீராத தேடல்.

இன்னும் இன்னும் விரிந்து பரந்து செல்லும் பிரச்சினைகளின் மத்தியில் மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவை தேர்தல் வைக்காமல் ஜனாதிபதியாக இருக்கலாம் வாருங்கள் என்று யாராவது அழைத்தாலும் வரமாட்டார் என்கின்றனர் அவரின் விசுவாசிகள்.

இலங்கையின் வரலாற்றில் இத்தனை சோதனைகளை ஒருமித்து சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்த முதல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் என்று சொல்லப்படுகின்றது அது உண்மையும் கூட.

ஏனைய ஜனாதிபதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரம் காட்டிய போதிலும் சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கை கொண்டிருந்தார்கள். நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான போரை தவிர சொல்லிக் கொள்ளும் படியான பிரச்சினைகள் இருந்ததில்லை இப்போது இருப்பது போல்.

காணும் இனி வேண்டாம்... வலிக்குது... அழுதிடுவன்… என்ற வடிவேலுவின் நகைச்சுவை நினைவில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை
நன்றி>பதிவு.

No comments: